கொரோனாவிற்கு எதிராகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதிய சுயபாதுகாப்பு கவச உடைகளையும், பாதுகாப்பு உபகரனங்களையும் வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் பலர் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் போதே இந்திய ஒன்றிய அரசானது மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்ற பெயரில் மருத்துவமனைகளின் மீது பூக்களைத் தூவி அரசியல் வித்தைகளை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களினுடைய சேவையை கவுரவப்படுத்தப் போவதாக இந்திய தலைமை ராணுவ ஜெனரல் பிபின் ராவத் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, மருத்துவமனைகளின் மேலாக இராணுவ வானூர்திகள் பறக்கவிடப்பட்டும், ஹெலிக்காப்டர்களில் மலர் தூவியும் மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று இந்தியாவின் முக்கிய நகரங்களிலுள்ள மருத்துவமனைகளின் முன்பு இராணுவ பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனை அமைந்திருந்த பகுதிகளில் மலர்கள் தூவப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றுகின்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் சுய பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையுடன் பணியாற்றுவதை சுட்டிக்காட்டி உடனடியாக அவைகளை வழங்குமாறு தொடர்ந்து அரசிடம் கோரிக்கையெழுப்பி வருகின்றனர். பல இடங்களில் போராட்டங்களிலும் ஈடுப்பட்டனர். பலர் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து சுயபாதுகாப்பு கவச உடைகளை வாங்கி பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் சிறப்புப் பிரிவு நிபுணத்துவத்திற்கான பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் (President of Residents’ Doctors Association)
மருத்துவர் ஆதர்ஷ் பிரதாப் சிங் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததை குற்றஞ்சாட்டி வருத்தம் தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த உடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதன் காரணமாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான மருத்துவப் பணியில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில்தான் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உயிரையும் பொருட்படுத்தாது தீவிரமாக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொடுக்காத அரசின் “பூ தூவும்” நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
இது குறித்து சமூக சமத்துவ சங்கத்திற்கான மருத்துவ சங்கத்தின் பொதுச்செயலாளர், மருத்துவர் ரவீந்திரநாத்,’ (மருத்துவ ஊழியர்) ஒருவருக்குரிய போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அவர்களை கவுரப்படுத்துவதில், ஊக்கப்படுத்துவதில் அர்த்தமிருக்கும். (மருத்துவ ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் பூத்தூவுகின்ற செயல்) ஒருவரை வேண்டுமென்றே கன்னத்தில் அறைந்துவிட்டு, அறைந்ததற்கு மன்னிப்பும், அறைந்தததை மறந்துவிடவும் எதிர்பார்ப்பது போலிருக்கிறது” என்ற செய்தியை
தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மருத்துவமனைகளின் மீது மலர்கள் தூவப்பட்ட அதே நாளில், ‘கொரோனாப் பிரிவில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை’ என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
கொரோனா தடுப்புப் பணியில் இன்றியமையாத மருத்துவ சேவையையே நிர்க்கதியில் தள்ளிவிட்டு, கொரோனா கால துயரத்தில் உழலும் பொதுமக்களின் கூட்டு உளவியலை ஆற்றுப்படுத்துவதற்காக அரசு மலர் தூவுகிறது.
தமிழ்நாட்டின் கிராமங்களிலிருக்கும் ஒரு பழைய பழமொழியை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
ஒய்யாரக் கொண்டையாம்
தாழம்பூவாம்
உள்ளே இருக்குமாம் ஈரும், பேணும்!