தொழிற்சங்க மற்றும் சமூகநீதிப் போராளி மலேசியா கணபதி தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. அவரது வாழ்க்கைத் தொகுப்பு.
எஸ்.ஏ.கணபதி அல்லது மலேசியா கணபதி மலேசியாவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் சமூகநீதி செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அவரது நினைவுநாள் இன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் மொரிசியஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு தோட்டத் தொழிலுக்கும், சுரங்கத் தொழிலுக்கும் ஏராளமான தமிழர்கள் குடியேற்றப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் – வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக 1912-ம் ஆண்டு பிறந்த கணபதி தன்னுடைய பத்தாவது வயதில் மலேசியாவிற்குச் சென்றார். தனது பள்ளிப் படிப்பை மலேசியாவில் படித்த கணபதி, அப்பொழுதில் இருந்தே உரிமைப் போராட்டங்களில் ஆர்வமிக்கவராக இருந்தார்.
மலேசியா ஜப்பானியர் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் சுபாஷ் சந்திரபோஸ் மலேசியாவில் இந்திய தேசிய ராணுவத்தினை கட்டமைத்தார். அதில் தன்னை இணைத்துக் கொண்ட கணபதி பயிற்சியாளராகவும் இருந்தார். நேதாஜியோடு மிக நெருக்கமாக இருந்த கணபதிதான் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் உருவாக்கப்பட்டது. சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட வலிமைமிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். ஜவகர்லால் நேருவின் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலேசிய பிரதிநிதிகளில் ஒருவராக எஸ்.ஏ.கணபதி கலந்து கொண்டார்.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து மலேசியாவில் கணபதி பேரணி நடத்தினார். தேநீர் கடையில் ஜாதிக் கொடுமையை ஒழித்தார், மேலும் சாதிமறுப்பு திருமணங்களை ஊக்குவித்தார்.
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மலேசிய தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி, போராட்டத்தில் கலந்துகொள்ளச் செய்தார். தாய்த் தமிழகத்தில் இருந்த திராவிட இயக்க தலைவர்களுடன் நீண்ட தொடர்புடையவராகவும் இருந்தார்.
மலேசியாவில் தமிழர்களைக் கொலைகாரன், தாழ்ந்தவன் என்ற பொருள்படும்படியாக ’ஒரங்கிள்ளேவ்’ என்று தரம் தாழ்த்தி அழைப்பதை சுயமரியாதை மிக்க கணபதி எதிர்த்துப் போராடினார். மலேசியா தமிழர்களுக்காக அரசிடம் 45 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி மலேசியா அரசிடம் உரிமைகளை பெற்றுத் தந்தார்.
1947 பிப்ரவரி மாதம் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக எஸ்.ஏ.கணபதி பொறுப்பேற்றார். அந்த சம்மேளனத்தின் மத்திய செயற்குழுவில் 4 சீனர்கள், 4 இந்தியர்கள், 2 மலாய்காரர்கள் இடம் பெற்றிருந்தனர். அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய இந்த தொழிற்சங்கம் இன்னும் வீரியாமாக போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கியது.
தொழிற்சங்கங்களின் சார்பாக பல போராட்டங்களை நடத்திய கணபதி 50000 மக்கள் கலந்துகொண்ட மே தின அணிவகுப்பை நடத்திக் காட்டினார்.
மலேசியாவில் தொழில்ளார்கள் உரிமைகளுக்காக பல வேலைநிறுத்தப் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தலைமை தாங்கி நடத்திவந்தது. அதனை தடுப்பதற்காக 1946-ல் மலேசியா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. சங்கத்தினை பதிவு செய்வதற்காக தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
இறுதியில், 1948 ஜூன் 13-ல் கணபதி தலைமை தாங்கிய தொழிற்சங்க சம்மேளனம் மலேசியாவில் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
மலாயா தொழிற்சங்க சம்மேளனத்திற்கு மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் தொடர்பு இருப்பபதாக அரசாங்கம் சந்தேகப்பட்டது. அதனால், தொழிற்சங்க அலுவலகங்கள் அடிக்கடி சோதனையிடப்பட்டன. தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். 1948 ஜூன் மாதம் 18-ம் தேதி நாடு முழுமையும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது. எஸ்.ஏ.கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கோலாலம்பூரில் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருந்த தனி நீதிமன்றக் கூடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பின் நீதிபதிகள், தனியறையில் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர். பின் தலைமை நீதிபதி, கணபதி அவர்களைப் பார்த்து, நீங்கள் ஆறு புல்லட் நிரம்பிய ரிவால்வர் வைத்திருந்தது அவசர காலச் சட்டப்படி மரண தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே, உங்களுக்குச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
கணபதி கைது செய்யப்பட்ட செய்தியை, சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பியது. மறுநாள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஆங்கில, தமிழ், மலேயா, சீன நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்திய நாளேடுகளிலும் செய்தி வெளியிடப்பட்டது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், மற்றும் எண்ணற்ற தலைவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்து கணபதியை விடுதலை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அனுப்பினர்.
தமிழகத்தைப் போலவே அகில இந்திய தலைவர்கள் கணபதியை விடுதலை செய்யக்கோரி, இந்தியா முழுமையிலிருந்தும் அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து ஊர்வலம் நடத்தின.
அகில இந்திய தலைவர் எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், இரேன் முகர்ஜி, பி.ஜி.ஜோஷி, பி.டி.ரணதிவே, நம்பூதிரிபாட் போன்றோர் கணபதியை விடுதலை செய்யக் கோரி பொதுக் கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, இந்தியப் பிரதமர் நேரு அவர்களுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அவர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்தியப் பிரதமர் நேரு மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஜான்திவி அவர்களுக்குக் கடிதம் எழுதி, மலேசியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்கு கடிதத்தை நேரில் தந்து, கணபதி அவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்கக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்தார். இம்முயற்சியைப் பற்றி இந்திய தூதர் ஜான்திவி அவர்கள், புடு சிறையிலிருந்த கணபதியைச் சந்தித்து, விடுதலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார். தமிழகம் முழுக்க கணபதியை விடுவிக்கக் கோரி உச்சக்கட்ட போராட்டங்கள் நடந்தன.
கணபதி சார்பாக மேல்முறையீடு செய்யபட்டதால் தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேல்முறையீடும் பலன் கொடுக்காமல் மீண்டும் தூக்கு அறிவிக்கபட்டது. அதனால் மீண்டும் போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழகம் கொந்தளித்தது. தமிழகத் தலைவர்கள் அண்ணா உட்பட அனைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து கணபதியைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, 23.04.1949 அன்று மாலை 7 மணிக்கு சிங்கப்பூர் வானொலி அறிவித்தது. இச்செய்தியைக் கேட்டு மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.
ஆனால் 30.4.1949 அன்று பிற்பகல் 3 மணிக்கு சிறை கண்காணிப்பாளர் தலைவர் கணபதியைச் சந்தித்து, தங்களை 4.5.1949 அன்று காலை 5 மணிக்குத் தூக்கிலிடும்படி உத்தரவு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
தூக்கிலிடும் முன்னர் கணபதி தமிழிலும், சீன மொழியிலும் ஆவேசத்துடன் உணர்வு பொங்கப் பேசினார். அதில் மலேயா நாட்டு மக்களின் தன்னாட்சி விடுதலைக்கும், பாட்டாளி மக்களின் பொருளாதார சமத்துவத்திற்கும், ஆங்கில ஆட்சியாளர்களின் ஆதிக்கக் கொடுங்கோன்மை ஆட்சியை அகற்றவும் உரத்த குரலில் தொழிலாளர்களின் கீதத்தைப் பாடினார். கணபதி மெல்ல புன்னகைத்தபடி, ”மலேயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும்! மலேயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும்! மலேயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும்! மலேயாவில் மட்டுமல்ல. உலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைக் கொடுமைக்கு முடிவு விரைந்து கிடைக்கட்டும்! இதுவே என் இறுதியான உறுதியான விருப்பம் வாழ்க வையகம்!” என்று உணர்ச்சிப் பொங்கக் முழங்கினார் .
இருபதாம் நூற்றாண்டில் வெளிநாட்டில் அரசியல் காரணத்திற்காக தூக்கிலிடப்பட்ட முதல் தமிழர் கணபதி ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பல அழுத்தங்களையும் தாண்டி அறிவிப்புகளை வெளியிடாமல் அவரைத் தூக்கிலிட்டதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பதை தெரிந்து கொள்லலாம் .
அதனால் தான் பாரதிதாசன்,
”மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
கரைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்
நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்த போமோ?”
என்று எழுதினார்.