மார்ச் 3 முதல் சரக்கு கட்டணத்தை 30% அதிகரிக்க தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கிலிருந்து மோசமான லாரி தொழிலின் நிலை
தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் ஈடுபடுகின்றன. சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் இருந்து லாரி தொழில் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை புறக்கணித்த அரசு
நலிவடைந்து வரும் லாரி தொழிலை மீட்க வாகனங்களுக்கான காலாண்டு வரியை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்றும், சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், கடந்த சில மாதமாகவே லாரி உரிமையாளர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு அரசு காது கொடுக்கவில்லை.நேர்மாறாக டீசல் விலை 90 ரூபாயை நோக்கியும், பெட்ரோல் விலை 100 ரூபாயை நோக்கியும் செல்கிறது.
அதேபோல கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியுள்ளனர்.
லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் அறிவிப்பு
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் முருகன் வெங்கடாச்சலம் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, எங்களது நீண்டகால கோரிக்கைகள் குறித்து மார்ச் 3-ம் தேதி கூடி விவாதிக்க உள்ளோம். பல்வேறு பிரதிநிதிகள் விவாதித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம். அதில் முக்கியமானது சரக்கு கட்டணத்தை 30% உயர்த்துவது. கோரிக்கைள் ஏற்கப்படவில்லை என்றால் இந்த சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இதில் அடங்கும் என்றார்.
மேலும் இந்த லாரி தொழில் நலிவடைந்து வருவதால் இதிலிருந்து சிலர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடந்தால் இத்தொழிலை நம்பியுள்ள இருபது லட்சம் குடும்பங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை
அனைத்து பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு மாதத்திற்கு ஒரு முறை விலை ஏறிக் கொண்டிருந்தது. ஜி.எஸ்.டி-க்குப் பின் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து ஏழை, எளிய மக்களையும் நடுத்தர வர்க்கத்தையும் விழி பிதுங்கச் செய்துள்ளது. தற்பொழுது சரக்கு லாரிகளின் 30% கட்டண உயர்வு என்பது காய்கறி, உணவுப் பொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் ஏன் தண்ணீர் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விலை ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர் அறிவித்திருக்கும் கட்டண உயர்வால் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் அடையும் பாதிப்பைவிட, பெரும் பாதிப்பு ஏற்படப்போவது அனைத்து பொருட்களுக்கும் நுகர்வோராக இருக்கும் பொதுமக்களுக்குத் தான்.