ராகுல் காந்தி

ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானது

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கியுள்ள ராகுல் காந்தி நேற்று கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். அப்போது அவரது தந்தையான ராஜீவ் காந்தியின் கொலை குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ”என் தந்தையை இழந்தபோது எனக்கு மிகப் பெரும் வலி இருந்தது. ஆனால் என் தந்தையைக் கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன்” என்று பதிலளித்தார். இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னித்து விட்டேன் என்று சொல்வது ராகுல் காந்தியின் பெருந்தன்மையாகப் பார்க்கப்பட்டாலும், அந்த பெருந்தன்மை எதார்த்தத்திற்குப் புறம்பான ஒன்றாகவே இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். 

முன்னாள் நீதியரசர்களின் கருத்து

மறைந்த முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர், இவர்கள் ஏழ்வரும் ஆயுள் தண்டனைக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்து விட்டார்கள். இவர்களை விடுதலை செய்வதே சரியானது என்று கோரிக்கை வைத்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் அவர்களும் இதே கருத்தை தெரிவித்ததோடு, வழக்கில் சில முரண்கள் இருப்பதையும் தெரிவித்துள்ளார். 

சிறைவாசிகள் உரிமையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும்

சிறைவாசிகளாக இருந்த ஏழ்வரும் 30 ஆண்டு காலத்தை சிறையில் கழித்துவிட்டார்கள். ஒரு சராசரி சிறைவாசியின் உரிமைகள் அடிப்படையிலாவது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிற நியாயம் முக்கியமானது. ராகுல் காந்தியோ அவர்களை மன்னித்து விட்டதாக சொல்கிறார், ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏழ்வரின் விடுதலையை எதிர்க்கிறது. இதில் ராகுல் காந்தி அவர்களின் பெருந்தன்மையை எங்கே வைத்து பொருத்திப் பார்ப்பது?

ஏழ்வரும் தண்டனைக் காலத்தினை அனுபவிப்பதற்கு முன்பே அவர்களை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி சொல்லியிருந்தால், அந்த பெருந்தன்மை எதார்த்தத்திற்கு உட்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால் தண்டனைக் காலத்தையும் தாண்டிய தண்டனையை அனுபவித்து முடித்து சட்டப்பூர்வமாக விடுதலைக்கு தகுதி பெற்றவர்களை இப்போது மன்னித்துவிட்டதாக சொல்லும் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு முரணானதாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் அரசியல் சாசன உரிமைக்காக பேசுவதே முக்கியம்

ராகுல் காந்தி இந்தியாவின் எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவராக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். இப்போது அவர் தனது தந்தையின் மகனாகப் பேசுவதை விட, இந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்ட ஒரு தலைவராகப் பேசுவது முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு, அரசியல் சாசன விதிமுறைகளின் அடிப்படையிலான தனது கூட்டாட்சி அதிகாரத்தின் படி ஏழ்வரையும் விடுதலை செய்வதற்கான அனுமதியினை அளித்திருக்கிறது. 

அரசியல் சாசனத்தின் பிரிவு 161 ஏழ்வரையும் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை தெளிவாக வரையறுக்கிறது. மாநில அரசின் அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பதை மீறி இவர்களின் விடுதலையை ஆளுநர் தாமதப்படுத்தி மறுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி ஏழ்வர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாட்டின் மாநில அதிகாரம் மறுக்கப்படுவதைப் பற்றி பேச வேண்டும். சிறைவாசிகளை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு இருக்கும் கூட்டாட்சி உரிமையைப் பற்றிப் பேச வேண்டும். 

ராகுல் காந்தி ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்தினை மறுத்து, ஏழ்வரின் விடுதலையை ஒன்றிய பாஜக அரசு தடுப்பதனை எதிர்த்து கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுப்பதே சரியானது. அதுவே அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாய் இருக்கும். 

அதை விட்டுவிட்டு 30 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு மன்னிப்போம், மறப்போம் என்று பேசும் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு முரணானதே.

One Reply to “ஏழ்வர் விடுதலை: ராகுல் காந்தியின் பெருந்தன்மை எதார்த்தத்திற்கு புறம்பானது”

  1. இராஜீவின் கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் யார் என்பதையும் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கலாமே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *