காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த.லட்சுமணன், சுனில் என்ற இரண்டு தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
2020-ம் ஆண்டு இந்த எட்டு மாத காலத்தில் மட்டும் இதுவரை சேலம் ஆத்தூரில் இரண்டு பேர், தூத்துக்குடியில் 4 பேர், சென்னையில் 2 பேர், நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேர் என்று 12 பேர் இதுவரை இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலக்குழிக்குள் மனிதர்களை இறக்குவதையும், மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவதையும் சட்டப்படி தடை செய்திருக்கும் நாட்டில் இந்த உயிர் பலிகள் இன்னும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இயற்றப்பட்ட சட்டத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்தாதது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
1993-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் போதுமானதாக இல்லை என்று தொடர் போராட்டத்தின் வழியாக 2013-ம் ஆண்டு மலம் அள்ளும் தொழிலில் மனித உழைப்பை தடை செய்யவும் மற்றும் மறுவாழ்வு சட்டமும் உருவாக்கப்பட்டது.
இந்த சட்டம் மலம் அள்ளும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களின் குடும்பத்திற்கு 40,000 ரூபாய் நிதி உதவியை உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என சொல்கிறது. இதன்மூலம் அவர்களின் குடும்ப வாழ்வை மேம்படுத்தும் தொகையாக அதை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.
அவர்கள் மாற்றுத் தொழில் மேற்கொள்வதற்கான நிதி உதவியும், தொழில் பயிற்சியும், மாற்று வேலைவாய்ப்புக்கான அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறது அச்சட்டம்.
அதேபோல் இந்த பணியில் ஈடுபட்டு யாராவது விபத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவேண்டும், அவரின் வாரிசுதாரருக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறது.
2019-ம் ஆண்டில் நடந்த 20 மரணங்களில் 20 வழக்குகளிலும் 2013-ம் ஆண்டின் தடைச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பெரும்பாலும் இத்தகைய மரணங்களை விபத்து என்ற பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்வதாகவும், இதனால் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களுக்கு கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
1993-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை இந்தியா முழுவதும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுதல் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளின்போது சுமார் 776 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 213 பேர் பலியாகி உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார்.
இன்னும் நாட்டின் மனிதத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் துப்புரவுப் பணியாளர்களின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மரணங்கள் எப்போது இந்திய சமூகத்தினை மனசாட்சியை உலுக்கப் போகிறது?