கொடுமணல்

கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்பு

கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்கிறது. எற்கனவே எட்டு முறை அகழாய்வு நடந்த இந்த பகுதியில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தற்போது நடைபெறும் அகழாய்வில், 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கண்ணாடித் துண்டுகளும், வெள்ளி மற்றும் தாமிர நாணயங்களும், நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வடிகாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொடுமணம் எனும் கொடுமணல்

கொடுமணல் சங்க இலக்கியத்தில் “கொடுமணம்” என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமைமிக்க கைவினைக் கலைஞர்கள் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று குறிப்புகள் உள்ளன. தற்போது அங்கு நடைபெறும் அகழாய்வில் அப்பகுதியில் வணிகத்திலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

கொடுமணல் அகழாய்வின் வரலாறு

  • 1961-ம் ஆண்டில் புலவர் செ.இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் இப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. 
  • 1981ஆம் ஆண்டு முதல் தஞ்சை பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டன. 
  • அதன்பின் தமிழக தொல்லியல் துறை திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினா் 8-வது அகழாய்வுப் பணியை 2020 மே மாதம் தொடங்கி 6 மாதங்கள் நடத்தினர். அப்போது, தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றாக செம்பு, வெள்ளி நாணயங்கள், கருவிகள், பிராமி எழுத்துகள், கலைப் பொருட்கள் கிடைத்தன. பெருங்கற்கால இறந்தோருக்கான நினைவு சின்னங்கள், கல்லரை, முதுமக்கள் தாழி மற்றும் மண் பானைகள், மனித எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
  •  தற்போது  ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் 9-வது கட்ட ஆகாழய்வை கொடுமணலில் செய்து வருகின்றனர் .

நொய்யல் ஆற்றுப் பகுதியில் 9-ம் கட்ட அகழாய்வு

இந்த அகழாய்வு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திரு ஜே.ரஞ்சித் தற்போது நொய்யல் ஆற்றுப் பகுதியில் அகழாய்வுப் பணித் துவங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

2020-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது  அகழாய்வில் தொழிற்கூடங்களில் தண்ணீா் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கால்வாய் நொய்யல் ஆற்றுப் பகுதி வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் அப்போது ஆய்வுப் பணிக்கான காலம் முடிந்ததால் மேற்கொண்டு ஆய்வு நடைபெறவில்லை.

தற்போது 2 இடங்களில் 10 மீட்டா் நீளம் மற்றும் 10 மீட்டா் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே கல்மணிகள், அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

9-ம் கட்ட அகழாய்வின் வடிகால் பகுதி

இவற்றை முழுமையாக ஆய்வு செய்தால் இது 2300 ஆண்டுகளுக்கு முன் உள்ளதாக இருக்கும். மேலும், சுமாா் 12 சென்டிமீட்டா் நீளத்தில் இரும்பினால் ஆன பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் தொடரும் ஆய்வு

இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடங்கள், கல்லறைகள் ஆகியவை தனியாருக்கு சொந்தமான நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய அகழாய்வு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில் நடைபெறுகிறது. தொடா்ந்து நடைபெறும் அகழாய்வில், பழங்காலப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நடைபெரும் 9-வது அகழாய்வு  வருகிற செப்டம்பா் மாதம் வரை நடைபெறும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்புப் படம்: 9-ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள கரண்டி போன்ற வடிவிலான இரும்பாலான பொருள் ஒன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *