ராஜ்யசபா

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாது என ஒன்றிய அரசு அறிவிப்பு

பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 2011-ம் ஆண்டின் சாதி வாரிக் கணக்கெடுப்பு தரவுகளை தற்போதைக்கு வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2021-லும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு

2011-ம் ஆண்டு இந்தியா முழுதும் சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு (Socio-Economic Caste Census – SECC) நடத்தப்பட்டது. ஆனால் அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அந்த கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், குடும்பத்தின் பொருளாதார நிலை, என்னென்ன மின்சாதனப் பொருட்கள் உள்ளன, வீட்டின் கூரை எதனால் செய்யப்படது, வாகனம் வைத்திருக்கிறார்களா, மின் இணைப்பு வசதி இருக்கிறதா, குடிநீர் இணைப்பு இருக்கிறதா, மாற்றுத் தொழிலாளிகள் இருக்கிறார்களா, மனிதக் கழிவுகள் அகற்றும் தொழில் செய்பவர்கள் இருக்கிறார்களா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் சேர்த்து சாதி குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டது. 

சமூகப் பொருளாதார நிலையை தீர்மானிக்கும் சக்தியாக சாதி

இந்தியாவில் சமூகப் பொருளாதார நிலையை தீர்மானிக்கும் சக்தியாக கடந்த பல நூற்றாண்டுகளாக சாதியே இருந்து வருவதால், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடும், நலத்திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது. சாதி வாரியாக மக்களின் பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது என்ற விவரங்கள் அப்போதுதான் தெரியவரும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

1934-ல் நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு

இந்தியாவில் இதற்கு முன்னர் கடைசியாக 1934-ம் ஆண்டில்தான் சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 75 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பின்னர் 2011-ம் ஆண்டில் தான் இக்கணக்கெடுப்பு திட்டமிடப்பட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 

2011-ன் சாதிவாரி விவரங்களை தவிர்த்து மற்ற விவரங்களை வெளியிட்ட அரசு

2011-ம் ஆண்டின் தரவுகளை நான்கு ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டது. அதிலும் கிராமப் புறங்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டதே தவிர, சாதி வாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

2021-ல் சாதிவாரி கணகெடுப்பு இல்லை என சொல்லும் அரசு

இந்த ஆண்டு மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற இருப்பதால், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்து வருகிறது. நேற்று மார்ச் 10, 2021 அன்று பாராளுமன்றத்தில் இது குறித்து பேசும்போது, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும், 2011-ம் ஆண்டின் சாதிவாரி விவரங்களையும் வெளியிட மாட்டோம் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் கொள்கை முடிவு என்கிறது பாஜக

இந்தியாவில் பட்டியல் பிரிவுகளைச் சேர்ந்த SC மற்றும் ST பிரிவுகளைத் தவிர மற்ற எதற்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்பதனை சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா கொள்கை முடிவாக எடுத்திருப்பதாக உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். பல்வேறு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பதை வடிவமைத்திருப்பதாகவும் SC, ST பட்டியலின் கீழ் வருபவர்களை மட்டுமே சாதி ரீதியாக கணக்கெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி தரவுகள் வகைப்படுத்தலுக்காக சமூகநீதி அமைச்சகத்திடம் மட்டும் வழங்கப்பட்டிருந்தது. இப்போது அந்த தரவுகளை வெளியிட முடியாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *