குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான ஒருவர், தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரும், உள்ளூர் தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை காவல் துறையினர் பாதுகாப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
வழக்கறிஞர் தேவ்ஜி மகேஸ்வரி அவர்கள் குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் ரபர் (Rapar) நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த கொலை வழக்கு சம்பதமாக முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ள 9 நபர்களையும் கைது செய்யும் வரை அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
குற்றம் சாட்டபட்டுள்ள 9 நபர்களில் ஒருவரான பாரத் ராவல் என்கிற பார்ப்பனர் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிடக் கூடாது என மிரட்டிய பாரத் ராவல்
தேவ்ஜி மகேஸ்வரி குஜராத்தில் அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர்கள் நல சங்கத்தின் (BAMCEF) மூத்த செயற்பாட்டாளராக இருந்திருக்கிறார். சமூக வலைதளத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் பார்ப்பனியத்தை விமர்சித்தும் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்துள்ளார்.
இப்படியான பதிவுகளை பதியக் கூடாது என அவரை பாரத் ராவல் மிரட்டியிருக்கிறார்.
தேவ்ஜி இறுதியாக பதிவு செய்துள்ள காணொளி
தேவ்ஜி தனது பேஸ்புக் வலைதளத்தில் இறுதியாக பிற்படுத்தபட்ட மக்கள், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் இந்துக்கள் அல்ல என BAMCEF தேசிய செயலாளரான வாமன் மேசராம் தெரிவித்த காணொளியைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
பாரத் ராவல் மற்றும் தேவ்ஜி ஒரே நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ராவல் மும்பையில் உள்ள பல்பொருள் அங்காடி(stationary shop) ஒன்றில் வேலை பார்த்து வருபவர்.
ஒரே ஊரில் தேவையில்லாமல் பிரச்சினை செய்யாதே என்று தேவ்ஜியை ராவல் எச்சரித்திருக்கிறார். ஒருமுறை தேவ்ஜியை அவரது அலுவலகத்திலேயே வைத்து ராவல் மிரட்டியுள்ளார்.
சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்
சிவப்பு நிற ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் தேவ்ஜி மகேஸ்வரியைப் பின்தொடர்ந்து, அவரது அலுவலகத்தின் உள் செல்வதும் பின்னர் சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர் வெளியே ஓடுவதும், பின்னர் தன் வெள்ளை சட்டை முழுவதும் இரத்தக் காயத்துடன் தேவ்ஜி மகேஸ்வரி வெளியே வருவதும் அவரது அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.
பாரத் ராவல் கடந்த சனிக்கிழமை இரவு மும்பையில் கொலை, குற்றச் சதி மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்ஜன் முக்தி கட்சியின் தேசிய செயலாளர் V.L மாதங் இந்த வழக்கில் அதிகாரிகள் குற்றவாளிகளை பாதுகாப்பதாகக் கூறி சி.பி.ஐ விசாரணை கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். .
தேவ்ஜியின் மனைவி மினாக்சிபென்(Minaxiben) பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், அவரது கணவர் லுகார் (Luhar) சமூக மக்கள் தொடர்பான சொத்து விவகார வழக்கு ஒன்றில் இறுதியாக பணியாற்றி வந்ததும், இந்த வழக்கை வேறு எந்த வழக்கறிஞரும் எடுத்து நடத்த தயாராக இல்லாத நிலையில் தன் கணவர் எடுத்து நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வழக்கின் ஆவணங்கள் தன் கணவரிடம் இருந்ததாகவும், அந்த ஆவணங்களை வைத்து FIR பதிவு செய்ய தேவ்ஜி தொடர்ந்து முயன்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எதிர் மனுதார்கள் அவரை தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகவும், இதனால் பாரத் ராவலை ஏற்பாடு செய்து தன் கணவரை கொலை செய்து இருக்கக்கூடும் என தான் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் பட்டியலின செயற்பாட்டாளர் படுகொலைகள்
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மட்டும் 30 பட்டியலின செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்கிற தன்னார்வ அமைப்பு தெரிவிக்கிறது.
இந்த கொலைகள் தனிப்பட்ட பகை காரணமாக அல்லாமல், பட்டியலின மக்களின் சமூக-அரசியல் வளர்ச்சியை அடக்குவதாகவே பார்க்கப்பட வேண்டும் என ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயற்பாட்டாளர் கதிர் தெரிவித்துள்ளார்.
பட்டியலின செயற்பாட்டாளர்கள் கொலை சம்பவங்களில் 90% சதவீத வழக்குகள் எஸ்.சி/எஸ்.டி பிரிவின் கீழ் பதியப்படுவதில்லை எனவும், முக்கிய குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் எளிமையாக பிணை வாங்கி தப்பித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.