அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின் வங்கிக் கணக்குகள் அரசால் முடக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பு இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 10-ம் தேதி அவர்களின் இந்திய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த அமைப்பு செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது.
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்பது என்ன?
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்பது சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு முக்கியமான மனித உரிமை அமைப்பாகும். இங்கிலாந்தில் 1961-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 59 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளிலும், ஐ.நா சபையுடனும் தொடர்ந்து இயங்கி வருகிறது.
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் முழக்கத்துடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.
அம்னெஸ்டி இண்டர்நேஷ்னல் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவில் நிகழும் பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான சிக்கல்களில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக வேலை செய்து வருகிறது.
தொடர் நெருக்கடிகளுக்கு உள்ளான அம்னெஸ்டி
பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
- 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூரில், பாஜக-வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பினர் அம்னெஸ்டி இந்தியா அமைப்பு தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக சொல்லி வழக்கு பதிந்தனர்.
- 25 அக்டோபர் 2018 அன்று அமலாக்கத் துறையின் மூலமாக அம்னெஸ்டி இந்தியா அலுவலகத்தில் 10 மணிநேர ரெய்டு நடத்தப்பட்டது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில ஆவணங்களை ஊடகங்களில் வெளியிட்டு அம்னெஸ்டி அமைப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
- 2019-ம் ஆண்டு துவக்கத்தில் அம்னெஸ்டி அமைப்பிற்கு தொடர்ச்சியாக நன்கொடை அளிக்கும் 30 பேருக்கு வருமான வரித்துறை சார்பில் விசாரணைக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
- 2019 ஜூன் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் (Jammu Kashmir Public Safety Act) தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அறிக்கையினை வெளியிட ஸ்ரீநகரில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள அம்னெஸ்டியின் அலுவலகங்களில் FCRA விதிகள் மீறப்பட்டதாக சொல்லி சி.பி.ஐ ரெய்டு நடத்தப்பட்டது.
- ஆகஸ்ட் மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்தும், அதில் காவல்துறை வன்முறையாளர்களுக்கு துணைபோனதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகான ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 10-ம் தேதி அம்னெஸ்டி இந்தியா வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது.
மனித உரிமைக் குரலை முடக்குவதாக கூறும் அம்னெஸ்டி

கடந்து இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இந்திய அரசாங்கம் தங்களின் மீது ஒரு தாக்குதலை நடத்தி வருவதாக அம்னெஸ்டி இண்டர்நேஷ்னல் அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்தும், ஜம்மு காஷ்மீரில் நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்த்தாலேயே அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மீது ஏவப்பட்டதாக அந்த அமைப்பின் இந்தியப் பிரிவின் இயக்குநர் அவினாஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் 40,00,000 இந்திய மக்கள் தங்களுக்கு ஆதரவளித்திருப்பதாகவும், 1,00,000 பேர் வரை தஙகள் அமைப்பிற்கு நிதிப் பங்களிப்புகள் செய்திருப்பதாகவும் அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. அந்த பங்களிப்புகள் வெளிநாட்டு நன்கொடை தொடர்பான FCRA விதிகளுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதல்ல. சட்டத்திற்கு உட்பட்டு நிதி வசூல் செய்யும் வழிமுறைகளை நிதிமோசடியாக அரசு சித்தரிப்பதாகவும் கூறியுள்ளது.
மனித உரிமை அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் விமர்சனக் குரல்களை ஒழித்துவிட்டு, ஒரு அச்ச சூல்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது என அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது.
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக 150 ஊழியர்களுடன் இயங்கிவந்த அம்னெஸ்டி நிறுவனம் அலுவலகத்தினை மூடி தனது வேலையினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.