கொரோனா மருத்துவர்கள்

கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் சென்னையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்களும், செவிலியர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை செவிமடுக்காததன் விளைவை தற்போதும் சென்னையும், மொத்த தமிழ்நாடும் சந்தித்து வருகிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் நிலை

தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பாசிட்டிவ் ஆக இருக்கும் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,15,128 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 31,222 தொற்றாளர்கள் இருக்கிறார்கள். நேற்று ஒரு நாளில் சென்னையில் 5473 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 

ஓய்வின்றி உழைத்தாக வேண்டிய நிலையில் மருத்துவப் பணியாளர்கள்

அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வருவதால் மருத்துவப் படுக்கைகள் இன்றி நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதை பார்த்துவருகிறோம். இத்துடன் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையும் சேர்வது நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. இதன் காரணமாக இருக்கின்ற பணியாளர்கள் ஓய்வின்றி தொடர்ந்து உழைத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பணியாளர்கள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளை பார்த்துக் கொள்ள அமர்த்தப்படும் உறவினர்கள்

சென்னையின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்கு செவிலியர்களோ, பணியாளர்களோ இல்லாத காரணத்தினால், நோயாளிகளின் உறவினர்களே அவர்களின் படுக்கைகளுக்கு அருகில் அமர்த்தப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ICUவில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கு அருகிலும், அவர்களின் ஒரு உறவினர் எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாவதுடன், சமூகத்தில் நோய்ப் பரவலையும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. 

அரசு மருத்துவப் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. படுக்கைகள் மட்டுமே சிகிச்சையாகி விட முடியாது என்று மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இரண்டு, மூன்று மடங்கு அதிக நோயாளிகளை கவனிக்கும் செவிலியர்கள்

ஒரு செவிலியர் பொது வார்டில் 15 நோயாளிகளையும், ஆக்சிஜன் படுக்கைகளில் 8 நோயாளிகளையும், ICUவில் 4 நோயாளிகளையும் பார்த்துக் கொள்கிறார். ஆனால் தற்போது பெரும்பாலான செவிலியர்கள் இந்த எண்ணிக்கையை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமான நோயாளிகளை கவனிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நோயாளிகள் கழிவறைக்கு நடந்து செல்லும்போது பல சமயங்களில் கீழே விழுந்து விடுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு கூட பணியாளர்கள் இல்லை என்று மருத்துவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். 

மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்

ஓய்வில்லாமல் உழைப்பதால் உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் மருத்துவர்கள் சோர்ந்து போயுள்ளனர். ஒரு வார கால தொடர் பணி முடித்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகளும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு செய்து தரப்படவில்லை. வீடுகளுக்கோ, ஹாஸ்டல்களுக்கோ அவர்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. தஞ்சாவூரில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒருவார தொடர் பணிக்குப் பிறகு 3 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கால அளவு வழங்கப்படுவதாக தி ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார மையங்களில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை

ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, தமிழ்நாட்டின் பொது சுகாதார மையங்களில் மட்டும் 1540 மருத்துவர்கள் பற்றாக்குறை நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வட மாநிலங்களில் இந்த பற்றாக்குறையின் எண்ணிக்கை இன்னும் மிக அதிகம். இவை இன்னும் சரி செய்யப்படாமலேயே இருக்கிறது.

கோவையில் செவிலியர்கள் நடத்திய போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் நடத்திய போராட்டம்

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு செவிலியர்களை நியமிக்கக் கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் 218 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து தற்காலிகமாக 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்த செவிலியர்களாக 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 348 செவிலியர்கள் இருக்கிறார்கள். ஆனால் 900 செவிலியர்கள் இருந்தால் மட்டும்தான் நோயாளிகளை நல்ல முறையில் கவனிக்க முடியும் என்கின்றனர் செவிலியர்கள். ஒரு செவிலியர் கிட்டத்தட்ட 120 நோயாளிகள் வரை பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

ஆம்புலன்ஸ் டிரைவர்களின் சிக்கல்

மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் மிகப்பெரும் பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 1403 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் 52,000 கொரோனா தொடர்பான பிரச்சினைகளுக்கான இந்த ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. கொரோனா தவிர்த்த இதர மருத்துவ அவசரங்களுக்காக 90,000 முறை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பயணித்துள்ளனர். தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக 3000 பேர் இருக்கின்றனர். இவர்கள் விடுப்புக்கு கூட அனுமதிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஓட வேண்டிய நிலை இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலில் PPE உடை அணிந்து கொண்டு தொடர்ச்சியாக அலைவதன் மூலம் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படும் சூழலும் இருக்கிறது. 

எண்ணிக்கையை உடனே அதிகப்படுத்த வேண்டும்

இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை என்பது பல மடங்கு அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால், இறப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் அபாயம் இருக்கிறது. மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்ப்பது கொரோனாவை எதிர்கொள்வதற்கு மட்டுமின்றி, மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பை எதிர்காலத்தில் வலுப்படுத்துவதற்கும் உதவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *