பி.சுந்தரய்யா

22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா

பி.சுந்தரய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

புச்சலப்பள்ளி சுந்தரராம ரெட்டி என்ற பெயரைக் கொண்ட பி.சுந்தரய்யா 1 மே 1913 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார்.

அவருடைய முதல் பொது நடவடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் கப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்து வந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டதாகும். 

சிறுவயதிலேயே விடுதலைப் போராட்டம்

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் பொழுது விடுதலை போராட்ட இயக்கத்தில் செயல்பட்டார். 1932-ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் தஞ்சாவூர் சிறுவர் சிறைலும், பின்னர் திருச்சி மற்றும் இராஜமகேந்திரபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டார்.

24 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்

1933-34ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பொதுவுடைமைக் கட்சியை உருவாக்க வந்த அமீர் ஹைதர்கானின் தொடர்பால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார். பின்னர் 1934-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்சியை உருவாக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்திய குழுவின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1936-இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சி கட்டும் பணி

தென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சியைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் உருவாக்கியதில் பி.சுந்தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். 

இரண்டாம் உலகப் போரின் போது தலைமறைவு இயக்கம்

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியவுடன் கம்யூனிஸ்ட் கட்சி அந்த யுத்தத்தை எதிர்த்தது. இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் 1940-ம் ஆண்டில் நாடு முழுவதிலும் கம்யூனிஸ்ட்களை கைது செய்தபொழுது சுந்தரய்யா கைதாகாமல் தப்பினார். சென்னையில் தென்னிந்தியாவுக்கான கட்சியின் தலைமறைவு இயக்கத்தை உருவாக்கி வழிகாட்டினார். 

1951-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட போது, தலைமறைவிலிருந்து வெளியே வரும் பி.சுந்தரய்யா, மட்டுக்குரி சந்திரசேகர ராவ், சந்திர ராஜேஸ்வர ராவ், வாசுதேவராவ், பசவபுன்னையா ஆகியோர்

பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் புத்தக நிலையம்

1942-ம் ஆண்டில் தடை நீங்கிய பின், அவர் கட்சியின் முடிவுப்படி மும்பையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தலைமையகத்திலிருந்து செயல்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கென ‘பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ என்ற புத்தக நிலையத்தை உருவாக்கினார். 

நாடாளுமன்றக் குழு தலைவர்

1952-ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1955-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஆந்திர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுந்தரய்யா சட்டமன்றத்தில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரிந்தபோது

இந்திய கம்யூனிஸ்ட், கட்சி 1964-ம் ஆண்டில் பிளவுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முன்னணித் தலைவராக இருந்தவர்களில் ஒருவர். 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 

1969-ம் ஆண்டு ரோமானிய அதிபருடன் சுந்தரய்யா

1977-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் செயல்பட்டார். பின்னர் அவர் ஆந்திராவிற்கு திரும்பி, அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநிலச் செயலாளராக பணியாற்றினார்.

எமெர்ஜன்சியை எதிர்த்து

1975-76ம் ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமலில் இருந்தபோது தலைமறைவாக இருந்து இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க அடக்குமுறைக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.

தெலுங்கானா போராட்டம்

‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் குறித்த முழுமையான நூலாகும். 

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 1985-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி அதிகாலையில் உயிர் நீத்தார்

பி.சுந்தரய்யா

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துவங்கிய போராட்டத்திலிருந்து தொழிலாளர்கள் விவசாயிகள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய காலகட்டத்தில் அதன் அடித்தளமிட்டவர்களில் ஒருவரான பி.சுந்தரய்யாவின் பிறந்தநாள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *