கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நலத் திட்டம் (Pradhan Mantri Garib Kalyaan Yojana) மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (National Campign on Dalit Human Rights NCDHR)) என்ற அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களிடம் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2018-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏழைகள் என்று கருதப்படுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று இந்த திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களையும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி தொழிலாளர் குடும்பங்களையும் இலக்காகக் கொண்டு துவங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கொரோனா பரிசோதனை எடுக்கப்படும். கொரோனா பாதிக்கபட்டவர்களுக்கு இலவச சிகிக்சை வழங்கப்படும். கொரோனா இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வீட்டுக்கு வந்தார்களா என்று 3,230 பட்டியல் சமூக குடும்பங்களிடம் ஆய்வு செய்தபோது 1,132 குடும்பங்களுக்கு மட்டும்தான் சுகாதாரத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்கு வந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.
அதாவது ஆய்வுக்கு உட்படுத்திய மொத்த பட்டியல் சமூக குடும்பங்களில் 35% குடும்பங்களை மட்டும்தான் சுகாதரதுறை ஊழியர்கள் அணுகியுள்ளனர். மேலும் 56 பழங்குடி சமூகத்தினரின் குடும்பங்களில் ஆய்வு செய்தபோது வெறும் 2% குடும்பங்களுக்கு மட்டுமே சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர் என்று தெரிகிறது.
பெரும்பாலான பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின சமூகத்தின் வாழ்விடங்களில் கொரோனா குறித்தான பாதிப்பை அறிய முயற்சி எடுக்கப்படவில்லை. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இலவச கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறித்து விழிப்புணர்வு உள்ளதா என்று ஆய்வு செய்தபோது 49% பட்டியல் குடும்பங்களுக்கும், 13% பழங்குடி சமூக குடும்பத்தினருக்கும் மட்டும்தான் தெரிந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் என்னிக்கையை கணக்கெடுக்கும் போது வெறும் 5% பட்டியல் குடும்பங்களும், 2% பழங்குடி குடும்பங்களுக்கு மட்டும் இணைந்துள்ளனர்.
உஜ்வாலா யோஜனா: 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள்
பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம். வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் திட்டமாகும் இது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக அவர்களின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா கால ஊரடங்கில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக எரிவாயு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இது குறித்து விழிப்புணர்வு உள்ளதா என்று 2694 பட்டியல் சமூகக் குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 40% பேருக்கு அதாவது 1078 பேருக்கு இது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அதேபோல் 54 பழங்குடி சமூகத்தின் குடும்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 63% பேருக்கு இதைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தகவலை கொண்டு சேர்க்காமல் இருப்பதே அதன் முதல் தோல்வி. இந்த உஜ்வாலா யோஜனா திட்டத்தில் எவ்வளவு குடும்பங்கள் பதிந்துள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்ட போது 52% பட்டியல் சமூகத்தினரும், 74% பழங்குடி குடும்பங்களும் இதில் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது. இவற்றை போக்குவதற்கு அரசு என்ன தீர்வு நடவடிக்கை வைத்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்
ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமையை நிலைநாட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.
கொரோனா ஊரடங்கு துவங்கியதில் இருந்து குறிப்பாக 2020 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணத் தொகையை 20 ரூபாய் சேர்த்து ஒரு நாளைக்கு ரூபாய் 202 கூலி வழங்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு உள்ளதா என்று 2,739 பட்டியல் சமூக குடும்பங்களிடம் ஆய்வு செய்தபோது 75% குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்திய 55 பழங்குடி குடும்பங்களில் 33% பேருக்கு தெரியவில்லை. அதேபோல் இந்த திட்டத்தில் எவ்வளவு பேர் இனைந்துள்ளனர் என்ற ஆய்வு செய்யப்பட்டபோது 2732 பட்டியல் சமூக குடும்பங்களில் 74% பேர் தங்களை பதிந்துள்ளனர். ஆனால் 53% பழங்குடியின குடும்பங்கள் இத்திட்டத்தில் இணையவில்லை.
ஜன் தன் யோஜனா
ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் முப்பதாயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, இந்த வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் எத்தனை பேர் என்பதைப் பற்றி ஆய்வு செய்தபோது 2599 பேரில் 70% பட்டியல் குடும்பங்கள் இத்திட்டத்தில் சேரவில்லை என்றும், மேலும் 53 பழங்குடி குடும்பங்களில் 72% பேர் சேரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் அரசு துவங்கிய வங்கிக் கணக்கு 51% பட்டியல் குடும்பத்தினருக்கும், 87% பழங்குடி குடும்பத்தினருக்கும் உபயோகத்தில் இல்லை என்பது அதிர்ச்சியான தகவல்.
மேலும் கொரோனா காலகட்டங்களில் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள பெண்களுக்கு 500 ரூபாய் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இது குறித்து விழிப்புணர்வு உள்ளதா என்று 2,595 பட்டியல் குடும்பங்களிடம் கேட்டபோது, அவர்களில் 57% பேர் அதாவது 1,480 பேருக்கு இதுகுறித்து எந்த அறிமுகமும் இல்லை. அதேபோல் 53 பழங்குடி குடும்பங்களிடம் ஆய்வு செய்யப்பட்டபோது 74% பேருக்கு இதைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
பொதுவிநியோகம்
கொரோனா காலகட்டங்களில் கர்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கும், அங்கன்வாடியின் வழியாக ஊட்டச்சத்து நிறைந்த துணை உணவுகளை வழங்க அரசு தீர்மானித்தது. அதனடிப்படையில் உணவும் வழங்கப்பட்டது. இதுகுறித்து 2,612 பட்டியல் குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 86% பேரு இந்த துணை உணவுகள் சென்று சேரவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் 51 பழங்குடி குடும்பங்களில் 84% பேருக்கு சென்று சேரவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் பொது விநியோகத் திட்டத்தினூடாக கொரோனா ஊரடங்கு காலங்களில் 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு வழங்கப்பட்து. இந்த உணவு குடும்பங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ததா என்று ஆய்வு செய்தபோது 2,662 பட்டியல் சமூக குடும்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 81% குடும்பங்களுக்கு பற்றாக்குறையாக இருந்துள்ளது மேலும் 54 பழங்குடி குடும்பங்களில் ஆய்வு செய்தபோது 94% குடும்பங்களுக்கு பற்றாக்குறை இருந்துள்ளது.
கொரோனா காலகட்டங்களில் தினக்கூலிகள் ஏறத்தாழ 6 மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல், உணவுப் பற்றாக்குறையால் பரிதவித்தனர். அரசு தான் வழங்கும் உணவுத் திட்டங்கள், மக்களுக்கு போதுமான அளவில் உள்ளதா என்கிற முறையான ஆய்விற்கு உட்படுத்தாமல் செயல்பட்டுள்ளது.
இதில் இன்னும் வருத்தமான விடயம் என்னவென்றால் விநியோக திட்டத்தில் அரசு வழங்கிய உணவு தரமாக இருந்ததா என்று ஆய்வு செய்த போது 3,288 பட்டியல் சமூகத்தின் குடும்பங்களில் 47% மற்றும் 55 பழங்குடி குடும்பங்களில் 84% குடும்பங்கள் தரம் குறைவாக இருந்து என்று தெரிவித்துள்ளனர். போதிய உணவு வழங்கப்படாத சூழ்நிலை ஒருபக்கம், கொடுக்கப்பட்ட உணவில்லை தரம் இல்லாமல் மறுபக்கம் என்று மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துதகிறது.
திட்டங்களை அரசு மிகக் கவர்ச்சிகரமாகத் துவங்குகிறது. ஆனால் அந்த திட்டம் மக்களிடம் சென்று சேர்ந்ததா? இல்லையா?, அத்திட்டங்கள் மக்களிடம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, அவற்றினுடாக அரசின் படிப்பினைகள் என்னவென்று பார்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. திட்டங்களின் துவக்க விழாக்களுக்கு செலவு செய்யும் பணத்தையும், மனித வளங்களையும் அத்திட்டத்தின் விளைவுகளையும் குறித்து ஆய்வு செய்ய நமது அரசுகள் முன்வர வேண்டும்.