இந்தியாவை சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் ஈடுபடுத்த அமெரிக்கா முயன்று வருவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான கூட்டு உறவினை குறைப்பதற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Russian International Affairs Council நடத்திய கூட்டத்தில் வீடியோ மூலமாக லாவ்ரோவ் உரையாற்றியதன் முக்கிய விவரங்கள்:
மேற்குலகும், அமெரிக்காவும் இணைந்து அமெரிக்காவை மையப்படுத்திய ஒரு ஒற்றைத் துருவ உலகத்தினை உருவாக்க முயன்று வருகிறார்கள். ரஷ்யாவையும், சீனாவையும் நீக்கம் செய்த ஒரு துருவத்தினை மேற்குலகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அவர்களின் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், தொடர்ச்சியான அவர்களின் ஆக்கிரமிப்பு கொள்கைகள் மூலமாகவும் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஒரு பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து QUAD என்ற கூட்டமைப்பினை உருவாக்கி கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன.
ரஷ்யாவுடனான ராணுவ மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவினை தடுப்பதற்கு அமெரிக்கா இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
2018-ம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து கூட்டணியை மேம்படுத்துவதற்கான அறிக்கையினை வெளியிடப்பட்டது. அக்டோபர் 2018-ல் இந்தியா ரஷ்யாவுடன் 500 கோடி டாலர் மதிப்பிலான S-400 வகை ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதே இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் குறித்து அமெரிக்கா சிந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
S-400 ரக ஏவுகணைகள் 400 கி.மீ தூரம் வரையிலான விமானங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.
ரஷ்யாவையும், சீனாவையும் தனிமைப்படுத்தி மற்ற நாடுகளை ஒருங்கிணைத்து ஒரு ஒற்றை துருவ உலகத்தினை உருவாக்கவே அமெரிக்கா வேலை செய்து கொண்டிருப்பதாக அவர் பேசியுள்ளார்.