தீண்டாமைச் சுவர்

17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆண்டு 2.12.2019 அன்று அதிகாலை மூன்று மணிக்கு மக்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்தது. 

இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு வீடுகளை முற்றிலுமாக சுவரின் இடிபாடுகள் மூடிக் கொண்டது. அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகினர்.

சிவசுப்பிரமணியன் என்பவர் கட்டிய, 17 பேரை பலிகொண்ட அந்த தீண்டாமை சுற்றுச் சுவர் சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் கருங்கற்களைக் கொண்டு தூண்கள் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்தது. 

இடிந்து விழுவதற்கு முன்பு அந்த சுவர்
இடிந்து விழுந்து 17 உயிர்களைக் காவு வாங்கியபோது
எரிக்கப்பட்ட 17 உயிர்கள்
ஒரே ஆண்டில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள சுவர்

அந்த சுவரைக் கட்டிய சிவசுப்பிரமணியனை கைது செய்ய வலியுறுத்தி போராடியவர்களை தடியடி நடத்தி கலைக்கப் பார்த்தது அரசு. அப்போது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

இதனையடுத்து தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தில் தலித்துகளுக்கு நாதியற்ற நிலை இருப்பதால் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தனர்.

தமிழகம் தழுவிய பிரச்சனையாக தீண்டாமைச் சுவர் உருவெடுத்ததையடுத்து, சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அந்த சுவரை எழுப்பி விட்டார். வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரவில்லை. ஆனால் அவர்களின் உயிர்களை பலிவாங்கிய சுவர் அதே இடத்தில் அதே உயரத்தில் மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 17 உயிர்கள் பலியாக்கப்பட்டு ஒரே ஆண்டில் மீண்டும் அவர்களைக் கொன்ற சுவர் உயர்ந்து நிற்கிறது.

அரசு அனுமதியுடன் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த தீண்டாமை சுவர் கட்டப்பட்டது குறித்து தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோவை மார்க்ஸ் சார்பில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ராசாமணிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய விவரங்களை அடுத்த15 நாட்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *