1926-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 11/1927 இயற்றப்பட்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியது. ஆனால் இந்த சட்டத்திற்கு பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பார்ப்பனிய பத்திரிக்கைகளின் எதிர்ப்பு
சுதேசமித்திரன், தி இந்து உள்ளிட்ட பாரப்பனிய பத்திரிக்கைகள் இதனைக் கண்டித்து தலையங்கம் எழுதின. காங்கிரஸ் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி ஆண்டவனை சட்டம் போட்டு கட்டுபடுத்துவதா என்று கேட்டார். இந்த எதிர்ப்புகளை மீறிதான் மக்கள் ஆதரவுடன் இந்து அறநிலைய சட்டம் உருவாகியது. அன்று முதல் அறநிலையத்துறை மீதான தாக்குதலை உயர்சாதி பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஓமந்தூர் ராமசாமி அவர்களின் துணிச்சலான சீர்திருத்தங்கள்
மீண்டும் காங்கிரஸ் அரசில் ஓமந்தூர் ராமசாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது சட்டத் திருத்தங்கள் உருவானபோதும், மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்றும், வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்), உள்ளே ஒரு கதர் சட்டை ராமசாமி’ என விமர்சித்தனர். பார்ப்பனர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த போது, கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்த ஓமந்தூர் ராமசாமி இதெற்கெல்லாம் அஞ்சாமல் சீர்திருத்தங்களை செய்தார்.
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கோவில் சொத்துகளையும் அதன் வழியாக அதிகாரத்தையும் அனுபவித்த பார்ப்பனர்கள் இந்து அறநிலையத்துறை என்ற கடிவாளத்தை அது உருவாவதற்கு முன்பிருந்தே எதிர்க்கத் துவங்கினர்.
இந்து ஆலய மீட்புக் குழு
அதன்பின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்து சமய அறநிலையத்துறையை ஒழிப்பதற்காக தனியே பல கிளை அமைப்புகளை உருவாக்கியது. அதில் ஒன்று தான் ’இந்து ஆலயங்கள் மீட்புக்குழு’. இது இந்து மகா சபையின் ஒரு அங்கமாகும்.
அயோத்திக்கு படையெடுத்தது போல இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று தூண்டி விட்ட ஹெச்.ராஜா
கடந்த 2018-ம் ஆண்டு இந்து ஆலய மீட்புக் குழு தனது ஐம்பதாவது ஆண்டைக் கொண்டாடி இருக்கிறது. இந்த அமைப்பின் பொன்விழா ஆண்டு துவக்க விழா திருநெல்வேலியில் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் ஹெச்.ராஜா பேசும்போது, ”இந்து கோவில்களில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 38,685 கோவில்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த கோவில்களையும், கோவில் நிலங்களையும் மீட்க அயோத்திக்கு படை எடுத்தது போல், மீண்டும் இளைஞர்கள் தயாராக வேண்டும்” என்று பேசினார்.
இன்று ஜக்கி வாசுதேவிடமிருந்து இந்து ஆலயங்களை மீட்க வேண்டும் என்று வருகிற கோரிக்கை பக்தியில் இருந்து வருவதல்ல. தமிழகத்தில் ஒரு கலவரம் செய்து அதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வரும் பல்வேறு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் தொடர்ச்சியே.
இந்து ஆலய மீட்புக் குழுவின் பொன்விழா மாநாடு
இந்து ஆலய மீட்புக் குழுவின் பொன்விழாவையொட்டி மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் பாஜக-வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், விஷ்வ ஹிந்து பரிசத் மாநிலத் தலைவர் மணியன், சின்மயா மிசன் சிவயோகானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இதிலிருந்தே இந்த அமைப்பு எதன் கிளை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இன்று ஜக்கி வாசுதேவ் முன்வைக்கும் கோரிக்கை யாரால் உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இந்து ஆலய பாதுகாப்புக் குழு
இந்து ஆலய பாதுகாப்புக் குழுவின் தலைவர் டாக்டர் தெய்வப்பிரகாசம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ”கோடைக் கால பண்பாட்டு வகுப்பு” நிகழ்வில் பங்கேற்றதிலிருந்தே இந்த கோரிக்கையின் பின்புலத்தில் யார் இயங்குவது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
தமிழ் பாரம்பரியம் அறக்கட்டளை
தமிழ் பாரம்பரியம் (Tamil Heritage Trust) என்ற ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குழுவினருடன் இணைந்து செயல்படும் டி.ஆர்.ரமேஷ் தன்னை கோவில் செயற்பாட்டாளர் என்று கூறிக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக நீண்ட காலமாக செயல்படுகிறார்.
அறநிலையத்துறை குறித்து அவதூறுகளைத் தொகுத்து புத்தகங்கள் கூட வெளியிட்டுள்ளார். இவர் நடத்தும் http://templeworshippers.in/ இணையத்தில் அவர்களின் நோக்கம் என்று மதச்சார்பற்ற அரசின் பிடியிலிருந்து கோவில்களை மீட்க வேண்டும் என்றும், இழந்த பழைய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை மீட்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இழந்த கலாச்சாரத்தை மீட்பது என்பது கோவிலுக்கு அனைவரும் சென்று வழிபடுவதைத் தடுப்பதில் இருந்து தேவதாசி முறை வரை உள்ள சனாதன வாழ்க்கையையும், பார்ப்பனர்களுக்கு பிறப்பின் வழியாக கிடைத்த அபரிவிதமான சொத்துகளையும், அதன் மீதான கட்டற்ற உரிமையையும் மீட்பதுதான். அதற்கு முதல் படியாகத்தான் ஒரு நவீன ஜனநாயக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை பிடுங்குவது என்று துவங்கியிருக்கிறார்கள்.
இன்றும் கோவில் சொத்தின் மீதான இவர்களது பிடியைத் தளர்த்தி கோவிலில் அனைவருக்கும் சம உரிமை நிலைநாட்டவில்லை என்றாலும், அதைநோக்கி இந்து அறநிலையத்துறை செயல்படுவதால் தான் இந்த பார்ப்பன அதிகாரவர்க்கம் புனிதமற்ற மதச்சார்பற்ற அரசு என்று தூற்றுகிறது. கோவில் மீட்பு என்று ஜக்கி பாடுவது ஆர்.எஸ்.எஸ் குரலைத் தான் என்று நாம் மட்டும் சொல்லவில்லை; ஜக்கியை ஆதரிக்கும் டி.ஆர்.ரமேசும் கூறுகிறார்.
சுப்ரமணிய சுவாமி
இந்துசமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி.
இந்து முன்னணி
’ஆலயங்களை விட்டு அரசே வெளியேறு’ எனும் முழக்கத்துடன் இந்து முன்னணி அமைப்பானது தொடர் பரப்புரைகளை இந்து அறநிலையத் துறைக்கு எதிராக மேற்கொண்டு வருகிறது. 2018-ம் ஆண்டு இந்த முழக்கத்துடன் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களையும் இந்து முன்னணி நடத்தியது. சசிகுமார் என்பவரின் மரணத்திற்குப் பிறகு கோவையில் நடைபெற்ற கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இந்து முன்னணி அமைப்பு என்னென்ன கோரிக்கைகள் மற்றும் வாதங்களை தங்கள் பிரசுரங்களில் கொடுத்தார்களோ, அதே வாதங்களைத் தான் இப்போது பரப்புரையாக கோவையிலிருந்து ஜக்கி வாசுதேவ் செய்து கொண்டிருக்கிறார்.
எச்.ராஜாவின் ஆலயங்கள் மீட்பு இயக்கம்
கடந்த 2018-ம் ஆண்டு பாஜக-வின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஆலயங்கள் மீட்பு இயக்கம் என்ற ஒன்றை உருவாக்கியது. அதற்கும் தமிழக மக்களிடம் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இந்து அறநிலையத் துறை எப்படியாவது ஒழித்துவிட ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஜாக்கி வாசுதேவ் களமிறங்கியுள்ளார். ’இந்து ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்’ என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து ஐம்பது ஆண்டுகளாக தோற்றுப் போன ஆர்.எஸ்.எஸ் ஜக்கியின் பரப்புரையில் புதிய உற்சாகத்தினைக் கண்டுள்ளது.
ஹெச்.ராஜா சொன்னது போல இன்னொரு அயோத்தியைப் போன்ற கலவரத்தை இங்கு நிகழ்த்த வேண்டும் என்ற புள்ளியை நோக்கித்தான் ஜக்கி வாசுதேவின் பரப்புரையும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
முகப்புப் படம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகத்துடன் ஜக்கி வாசுதேவ்