கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயிர் பிழைப்பதற்கான உத்திரப்பிரதேச மாநில மக்களின் போராட்டமானது ஒருவருக்கு காய்ச்சல் வருவதிலிருந்து தொடங்குகிறது. தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவர அவர் அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கவேண்டும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக பதில் வந்துவிடாது. 20 முதல் 25 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர் அவர்கள் அழைப்பை எடுத்து “நீங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு விட்டீர்களா? இல்லை என்று பதில் அளித்தால் உடனடியாக பரிசோதனை செய்துவிட்டு பின்னர் அழைக்கவும்” என்று தெரிவித்து விட்டு உடனடியாக அழைப்பை துண்டித்து விடுவார்கள்.
என் வீட்டில் எனது தாய், அண்ணி, மருமகள், மருமகன் மற்றும் லோக்கி (எங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்கார அக்கா) என மொத்தம் ஐந்து நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. கடந்த ஏப்ரல் 6-ம் தேதி கொரோனா உத்திரப்பிரதேசத்தில் பல குடும்பங்களை பாதித்தது. (தற்போதும் பாதித்து வருவதைப்) போலவே எங்கள் குடும்பத்தையும் முடக்கிப் போட்டது.
ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேடல்
எங்கள் வீட்டில் அனைவருக்கும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது. பின்னர் எங்கள் குடும்பத்தில் லோக்கி அக்காவைத் தவிர எல்லோரும் கொஞ்சம் மீண்டு விடவே லோக்கியின் உடல்நிலை மட்டும் மிகவும் மோசமடைந்து கொண்டே சென்றது. சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்ததால் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தாள் லோக்கி. உடனடியாக லோக்கிக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டதால் எனக்கு தெரிந்த மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் உட்பட எல்லோருடனும் ஆக்சிஜன் சிலிண்டர் பெறுவதற்காக தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் என் அழைப்பை யாரும் எடுக்கவில்லை.
இறுதியாக அவசர காலத் தேவைக்காக ஒரு சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருந்த என் உறவுக்காரர் ஒருவர் தந்து உதவினார். இந்த உதவி மேற்கொண்டு ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எங்களுக்கு கூடுதலாக 3 மணி நேரம் அவகாசம் தந்து உதவியது. பெரும் சிரமத்திற்கு பின்னர் ஒரு 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை என்னால் வாங்க முடிந்தது. ஆனால் அதையும் தொடர்ச்சியாக நிரப்ப வேண்டிய அவசியம் இருந்தது. இரவு 2 மணி அளவில் சிலிண்டர் சுத்தமாக தீர்ந்து போனது.
மீண்டும் ஆக்சிஜனை நிரப்ப 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்தில் நடார்கஞ்ச் எனும் இடத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் நடார்கஞ்க்கு சென்ற நான் அங்கே பார்த்த காட்சிகள் எனக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது.
மருத்துவமனையின்றி, ஆக்சிஜன் இன்றி கதறும் மக்கள்
சுமார் 40 வயது மதிக்கத்தக்க தனது மகனுக்கு தேவையான ஆக்சிஜனைப் பெற முதியவர் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அருகில் மற்றொரு 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி தனது இரு பெற்றோர்களுக்கும் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவை என கையேந்தி கொண்டிருந்தாள். இதேபோன்று அங்கே ஆக்சிஜன் நிரப்ப வந்திருக்கும் அனைவருக்கும் ஒரு கதை இருந்தது. அவர்கள் தங்கள் உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல். ஏனென்றால் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே வழி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் உறவினர் கைகளில் பல்ஸ் ஆக்சி மீட்டர் பொருத்தி அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவது மட்டுமே.
கொரோனா பரிசோதனை செய்வதே சவால்தான்
லக்னோவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது என்பது மிகப்பெரும் சிக்கல்களுக்குள் செல்வது போன்றானது. அரசு நிறுவனங்கள் அல்லது அரசு மருத்துவமனைகள் தவிர பிற தனியார் நிறுவனங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ள மாட்டார்கள். பரிசோதனை மேற்கொள்ள நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலைமையில் உள்ளவர்கள். ஒருவழியாக மருத்துவமனை சென்று சேர்ந்தால் அங்கே படிவங்களை நிரப்புவதற்கும், பரிசோதனை மேற்கொள்வதற்கும் ஊழியர்களை மன்றாட வேண்டும்.
பாஜகவினர் பரிந்துரை இல்லாமல் மருத்துவப் படுக்கை கிடைக்காது
இவை எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டு விட்டால் நல்லது. ஆனால் பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உங்கள் முடிவின் தொடக்கம் இங்கே ஆரம்பமாகிவிடும். உங்களுக்கு யார் பரிந்துரைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பாக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அல்லது பாஜக அலுவலக பொறுப்பாளர் பரிந்துரைத்தால் ஒழிய உங்களுக்கு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தரப்படமாட்டாது.
தனியார் மருத்துவமனைகளிலும் வெண்டிலேட்டர்கள் கிடையாது
இதையும் மீறி நீங்களாகவே தனியார் மருத்துவமனையில் படுக்கைகளில் கிடைக்க ஏற்பாடு செய்து கொண்டால் அதற்காக உற்சாகம் அடைய வேண்டாம். ஏனென்றால் தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான வெண்டிலேட்டர் வசதிகள் இல்லை. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களே “என்ன வேண்டுமானாலும் நேரலாம்; எதற்கும் தயாராக இருங்கள். ஏனென்றால் எங்களிடம் வெண்டிலேட்டர் இல்லை” தெரிவித்து விடுகின்றனர்.
மருத்துவமனைக்குள் செல்வதே போராட்டம்தான்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதாகவும் மேலும் தேவையான படுக்கைகளில் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்புக்கு களநிலவரம் முரணாக உள்ளது. ஏனென்றால் மருத்துவமனைக்குள் செல்வதற்கே உத்தரபிரதேசத்தில் மிகப் பெரும் போராட்டமாக உள்ளது. இதுபோன்ற சூழலில் கடவுள்களாக காட்சி அளிக்கும் முன்னணி களப்பணியாளர்கள் கூட இரக்கமற்று யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர்.
இங்கு அருகிலேயே ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு உள்ளது. ஆனால் அதில் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஏன் அவர்கள் உங்களிடம் பேசக் கூட மாட்டார்கள். அங்கே பணிபுரியும் ஊழியர்கள் உங்களிடம் பேசுவதற்குக் கூட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே சாத்தியம். தலைமை மருத்துவ அதிகாரியின் ஒப்புதலைத் தவிர்த்து பரிசோதனை, சிறப்பு பரிந்துரைகள் உட்பட எந்த ஒரு ஆவணமும் எடுபடாது.
ஒரே வாய்ப்பு தனியார் மருத்துவமனைதான்
அதனால் இருக்கும் ஒரே வாய்ப்பு தனியார் மருத்துவமனை மட்டுமே தனியார் மருத்துவமனை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவை பணத்தை கரைக்கக் கூடியது தான். பல உயிர்களை பலிவாங்கிய பின்னர் ஏப்ரல் 23-ம் தேதி அரசு தலைமை மருத்துவ அதிகாரியின் ஒப்புதல் இல்லாமலே நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுமதிக்க உத்தரவிட்டது உபி அரசு.
வாய் திறக்காத யோகி ஆதித்யநாத்
நான் தொடர்ச்சியாக இணையத்தில் லக்னோவில் கொரோனா இரண்டாவது அலைக்கான தயார் நிலை குறித்து உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஏதாவது பேசியுள்ளாரா என்பதைத் தேடினேன். ஆனால் அதில் ஒன்றிய அரசிடமிருந்து தேவையான நிதி வழங்க வேண்டும் என்பதைத் தவிர பெரிதாக எதுவும் பேசவில்லை.
நான் மேலே கூறியவை எல்லாம் எனது சொந்த அனுபவங்களின் ஊடாக சொல்லப்பட்டதே.
மருத்துவர்களிடம் கெஞ்சினேன்
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி லோக்கியை ஒரு தனியார் மருத்துவமனையில் இரவு 9 மணி அளவில் அனுமதித்தோம். அங்கே வென்டிலேட்டர் வசதி இல்லாததால் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. அங்கே பணிபுரிந்து வந்த மருத்துவர்கள் தொடர்ச்சியாக “இவருக்கு வென்டிலேட்டர் தேவை; ஆனால் எங்களிடம் இல்லை. அதனால் எந்த சூழலிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நடந்ததற்குப் பின்னர் கேள்விகளோ வாதங்களோ செய்யக்கூடாது” என எச்சரித்துக் கொண்டே இருந்தனர்.
பின்னர் இரவு நேரம் செல்லச் செல்ல லோக்கியின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே சென்றது. இரவில் பணியிலிருந்த மருத்துவர்களிடம் ஏதாவது செய்யும்படி மன்றாடினேன். இதனைத் தொடர்ந்து மறுநாள் மதிய வேலையில் வென்டிலேட்டர் கருவி ஏற்பாடு செய்தனர். இருந்தும் லோக்கியின் நிலைமை மோசமாகிக் கொண்டே தான் சென்றது. மருத்துவர்கள் எங்களால் அவளுக்கு உதவ முடியாது என தெரிவித்து தயவுசெய்து அவளை வேறு ஒரு கொரோனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்தனர்.
ஆனால் கொரோனா மருத்துவமனையில் அவ்வளவு எளிதாக இடம் கிடைக்காது என்பதைத் தெரிவித்து ஏதாவது செய்யும்படி மருத்துவர்களை மீண்டும் மீண்டும் மன்றாடினேன். ஆனால் அவர்கள் “எங்களால் எதுவும் செய்ய முடியாது, அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்” என தெரிவித்ததோடு, அவர்கள் போதுமான அக்கறை செலுத்தி கவனித்துக் கொள்ளவுமில்லை.
ரெம்டெசிவர் மருந்தும் இல்லை
பின்னர் ஏப்ரல் 20-ம் தேதி மருத்துவமனையின் உரிமையாளரிடம் லோகிக்கு ரெம்டெசிவர் மருந்து செலுத்துமாறு கெஞ்சினேன். “முதலில் மருந்து எங்கள் கையிருப்பில் இல்லை. 1500 ரூபாய் மதிப்புள்ள அம்மருந்து தற்போது 15,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பத்து நாளைக்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் எங்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை தர முடியவில்லை.” என மருத்துவமனையின் உரிமையாளர் தெரிவித்தார். ஆனால் நான் “அதற்கான விலையை தர தயாராக உள்ளேன், என்னால் முடிந்ததை நான் செய்யத் தயாராக உள்ளேன்” என கூறி தொடர்ச்சியாக கெஞ்சினேன்.
இறந்து கிடந்தாள் லோக்கி
பின்னர் என்னை மருத்துவமனையின் உரிமையாளர் பத்து நிமிடங்களுக்கு பின்னர் வரச் சொன்னார். அப்பொழுது நான் லோக்கியை காணச் சென்றேன். அங்கே அவள் அசைவில்லாமல் இருந்தாள். அவள் உயிர் உடலில் இருந்து பிரிந்தது. பணியிலிருந்த மருத்துவர்களிடம் இருமுறை அவளை சோதனையிடுமாறு தெரிவித்தேன். அவர்களும் அவளை பரிசோதித்துவிட்டு இவ்வுலகத்தை விட்டு சென்று விட்டாள் என்பதை உறுதி செய்தனர்.
உடலை தகனம் செய்வதில் கூட சிக்கல்
“அவள் கொரோனா நோயாளி, ஆதலால் சில நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தேவை உள்ளது” என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் “உடலைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களோ அல்லது எங்களிடம் விட்டுவிட போகிறீர்களா” என கேட்டனர். உடைந்து போயிருந்த நான் இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அதற்கு மருத்துவர்கள் “கொரோனா தடுப்பு நெறிமுறையில் உடலை நீங்கள் தனனம் செய்வீர்கள் என்று எங்களிடம் உறுதிப்படுத்திய பிறகு உடலை எடுத்துச் செல்லலாம். இல்லையெனில் லக்னோ நகர் நிகாம் அதிகாரிகள் வரும் வரை உடல் இங்கேயே இருக்கும்” என தெரிவித்தனர்.
பின்னர் நான் உறுதி ஏற்றுக்கொண்டு ஆம்புலன்சை அழைத்தேன். மருத்துவமனையில் ஒரு பெரும் தொகையைக் கட்டச் சொன்னார்கள். நான் அவர்களிடம் பேரம் பேசும் வலிமை இல்லாத நிலையில் இருந்தேன். கேட்ட தொகையைக் கட்டினேன். பின்னர் 5 கடைகளுக்கு மேல் அலைந்து ரூபாய் 2000 கூடுதலாக விற்பனை செய்யப்பட்ட உடலை மூடி எடுத்து செல்லும் பை மற்றும் 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 2 மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி (PPE கிட்டு) உடலை அப்புறப்படுத்தும் மருத்துவமனை ஊழியர்களிடம் கொடுத்ததற்குப் பின்னர் லோக்கியின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.
தகணம் செய்யும் இடத்திற்கு வெளியே தூரத்தில் நின்று கொண்டிருந்த நான் லோகியின் உடல் உள்ளே எடுத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்நேரத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைக்கிறோம். உங்க வீட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இருப்பதாக தகவல் வந்துள்ளது” என தொலைபேசியில் மறுமுனையில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த கொரோனா இரண்டாவது பெருந்தொற்று அலையில் இருந்து லக்னோ நகர மக்கள் உயிர் பிழைப்பார்கள் அல்லது கொடுமையில் உழலப் போகிறார்களா என்பது யாருக்கும் தெரியாது.
நன்றி: தி வயர் (TheWire.in)