கொரோனா மருத்துவர்கள்

நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்

கொரோனா தொற்று அதித்தீவிரமடைந்து மருத்துவமனைகள் நிரம்பி, மருத்துவப் படுக்கைகள் இல்லாமல், ஆக்சிஜன் இல்லாமல், வெண்டிலேட்டர் இல்லாமல், போதிய மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் மரணத்திற்கு தள்ளப்படும் கொடூரமான நிலை உருவாகியிருக்கிறது.

இப்படிப்பட்ட சவால் நிறைந்த சூழலில் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு சக டாக்டர்களின் கோரிக்கையாக உடனே செய்ய வேண்டியவைகள் குறித்து கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஹரிஹரன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் கோரிக்கையாக மிக முக்கியமான கோரிக்கைகளை உள்ளடக்கிய அந்த கடிதம் பின்வருமாறு:

மதிற்பிற்குரிய முதல்வர் மு.க. ஸ்டாலின் DMK – Dravida Munnetra Kazhagam அவர்களுக்கு,

என் பெயர் டாக்டர் ஹரிஹரன், MBBS, MD. கோவையில் இருந்து எழுதுகிறேன்.

கோவிட் பெருந்தொற்று, வரலாறு காணாத வகையில் அதிகமாகி உள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 2021 வரை இருக்கும் எனவும், அதற்குப்பின் தான் குறைய ஆரம்பிக்கும் எனவும் சில வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஆகஸ்ட் 2021 வரை தாங்குவோமா என்று தெரியவில்லை. இன்றைய நிலவரப்படி, பெரு நகரங்களில் வென்டிலேட்டர் வசதி உள்ள படுக்கைகள் காலியில்லை. அதற்கான காத்திருப்போர் பட்டியல் வெகு நீளம், அதற்கான சிபாரிசும் மிகப்பெரிய லெவலில் உள்ளது.

ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா வார்ட் படுக்கைகள் இல்லையெனும் நிலை இன்னும் இரு நாட்களில் வரலாம். ஹோட்டல்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு கொரோனா வார்டாக மாற்றப்பட்ட மையங்களும் இன்னும் ஓரிரு நாட்களில் படுக்கை வசதி காலியாகும் நிலையில் உள்ளது. இதெல்லாம் பெரு நகரங்களில்.

சிறு நகர மற்றும் கிராமங்களில் இப்போது தொற்று அதிகமாக ஆகியிருக்கிறது. அங்கே உள்ள வசதிகள் குறைவு என்பதால், அவர்கள் நகர்களுக்கு படையெடுக்கும் போது, உண்மையான பேரழிவு என்றால் என்ன என்று புரிபடும், சுனாமி போல.

நான் மற்றும் என் சக MBBS மற்றும் அதற்கு மேலான டாக்டர்கள் கேட்பது இதைத்தான்:

1. உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வியக்க வைக்கின்றன. அதற்கான துறை மற்றும் அமைச்சகம் ஏற்படுத்தப் போவது என்பது எங்கும் காணக்கிடைக்காத செயல்.

2. தங்கள் கட்சியில் பலர் இந்த தொற்றின் மூலம் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். சென்னை திரு அன்பழகன் ஒரு எடுத்துக்காட்டு.

3. கோனுக்கு அழகு மக்களைக் காப்பது என்பதை நீங்கள் அறிவீர். எங்களைக் காப்பாற்றும். இன்று மே 5, 2021. இன்றைக்கு கொரோனாவால் பல நூறு உயிர்கள் ஐசியுவிலும், வார்டிலும், மருத்துவமனை வாசலில் ஆம்புலன்சிலும், வீட்டிலும் சாகப் போகின்றன. உங்களை முதல்வராக்கி அழகு பார்க்கத் துடித்த விரல்களில், ஆயிரம் விரல்கள் இன்று நாடி இல்லாமல் ஆகப்போகின்றன.

4. இன்றைய நிலவரப்படி யாரும் தங்களை எதையும் நிர்பந்திக்கவில்லை. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம். மக்கள் கோபிக்க மாட்டார்கள். பொதுமக்களான எங்களைக் காப்பீர். அதுவே தங்களின் முதல் கையெழுத்தாக இருக்க வேண்டும்.

5. நாங்கள் கேட்பது

அ. நாளை முதல் தமிழ்நாடு முழு லாக்டவுன். அடுத்த அறிவிப்பு வரும் வரை. இது தான் முழு முதல் பலனைத்தரும்.

ஆ. எல்லா ரேஷன்கார்டு தாரர்களுக்கும் மே மாதம் மட்டும் 10,000 ருபாய் தரவும். லாக்டவுன் தொடந்தால், அடுத்த மாதமும் தரவும்.

இ. லாக்டவுன் காலத்தில் எந்த நிறுவனமும் ஒரு ஆளைக் கூட டிஸ்மிஸ் செய்யக்கூடாது. செய்தால், நிறுவனம் முடக்கப்படும். முழு சம்பளம் வழங்கவில்லை எனில் நிறுவனம் முடக்கப்படும்.

ஈ. எல்லா லாட்ஜ்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவற்றை கொரோனா வார்டாக மாற்றவும். Current industrial salary standards படி டாக்டர்கள் நர்ஸ்களை வேலைக்கு எடுக்கலாம். வருவார்கள்.

உ. தமிழ்நாட்டில் ஒரு கரோனா கண்ட்ரோல் ரூம். ஆயிரம் பணியாளர்கள். அவர்கள் வேலை, மக்களுக்கு 24×7 கேட்கும் தகவலுக்கு பதில் அளித்து, அவர்கள் ஊரில் கோவிட் படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதி போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக தேடிக் கண்டுபிடித்து பதில் தந்து, அந்த நோயாளியை படுக்கையில் சேர்த்தல் வரை ஆன்லைனில் துணையாக இருப்பது.

ஊ. எல்லா கொரோனா வார்டுகளையும் அரசு தத்தெடுப்பது. அரசின் கட்டண விகிதம் மிகக்குறைவு என எல்லோருக்கும் தெரியும். பிராக்டிகலாக சிந்தித்து, ஒவ்வொரு ஊரிலும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அதை அரசே செலுத்த வேண்டும். கலைஞர் காப்பீடு திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டு வந்த தாங்களுக்கு இது ஒன்றும் பெரிதல்ல.

எ. தனியாரும் அவர்கள் வசதிக்கேற்ப இயங்கட்டும்.

ஏ. அதே போல், கொரோனா தடுப்பூசி. 45 வயதிற்கு கீழ் எந்த பிரச்சினையும் இல்லாத பல லட்சம் பேருக்கு சிபாரிசு மற்றும் பல விதங்கள் மூலம் கோவிட் தடுப்பூசி கிடைத்திருக்கிறது. இரண்டாம் டோஸ் ஊசிக்கு இன்றைக்கு பேயாய் அலைவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அதை STREAMLINE செய்வது பற்றி ஆராய வேண்டும்.

6. தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறாமல் இருப்பது உங்கள் கையில். தமிழத்தில் ஒரு லட்சம் MBBS டாக்டர்கள் நீங்கள் சொல்வதை செய்ய இருக்கிறோம். பல லட்சம் நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆணையிடுங்கள். இன்னும் ஒரு உயிர் போகாமல் இருக்க எங்கள் உயிரையும் தருவோம், உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம்.

Dr. V. Hariharan, MBBS, MD.
Coimbatore

மருத்துவர் ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *