விவசாயிகள் MSP

விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.

ஜார்கண்ட், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பீஹார், ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில அரசுகள் சம்பா சாகுபடி பயிர்களுக்கான ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய MSP விலையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

நெல், சோளம், திணை, பருப்பு மற்றும் பிற முக்கிய சம்பா பயிர்கள் தற்போது நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு அதிக நெல் வாங்கப்பட்டதாக இந்திய ஒன்றிய அரசு கூறினாலும், குறுவை சாகுபடி பயிர்களில் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதுவும் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும்  கூறுகின்றனர். 

அரசின் அதிகாரபூர்வ தரவுகளும் விவசாயிகளின் கூற்றையே உறுதிப்படுத்தும் வண்ணமாக உள்ளது. ஒன்றிய அரசு இந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் பயிர்களில் 90 சதவீதம் நெல் பஞ்சாப் மற்றும் ஹரியானவில் இருந்து மட்டுமே பெறப்பட்டது.

அரசாங்க நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படாத நிலையில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு தாங்கள் நிரணையித்த குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் பல்வேறு மாநிலங்களில் பயிர்கள் விளைவிக்க ஆகும் பயிர்களுக்குக்கான உற்பத்தி செலவு ஆகியவற்றை ஒப்பீடு செய்து பார்த்தால் அந்த ஒப்பீடு நமக்கு மிகவும் ஆபத்தான குறியீட்டை உணர்த்துகிறது. ஏனெனில் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட MSP-யானது பல மாநிலங்களில் பயிர் உற்பத்தி செலவை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது.

இதன் விளைவாக, 2020-ம் ஆண்டுக்கான சம்பா சாகுபடி பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட MSP விலை போதுமானதாக இல்லை என்றும், மாநில வாரியாக உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலைகளை நிர்ணயிக்கக் கோருவதாகவும் மத்திய அரசுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் கடிதம் எழுதியுள்ளன.

நெல், சோளம், முத்து திணை, ராகி, மக்காச்சோளம், பருப்பு, அவரை, உளுந்து, நிலக்கடலை, சூரியகாந்தி, சோயாபீன் போன்ற சம்பா சாகுபடி பயிர்வகைகள் மீதான ஒன்றிய அரசு கொண்டுவந்த விலை நிர்ணயித்ததில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்று ஜார்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஆந்திரா மற்றும் ஒடிசா போன்று மாநில அரசுகள் கோருகின்றன.

மாநில அரசுகள் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசு இது தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டது. மாநிலங்கள் பரிந்துரைத்த MSP குறைந்தபட்ச விலைக்கும் ஒன்றிய அரசு நிரணையித்த தொகைக்கும் குவிண்டாலுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 7800 வரை வித்தியாசம் உள்ளது. அதாவது மாநில அரசின் MSP மதிப்பீட்டின்படி, ஒரு விவசாயி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,800 வரை இழப்பை சந்திக்க நேரிடும்.

இந்த MSP பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை தொடர்பாக பல மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசிடம் கடிதங்கள் எழுதியுள்ளது.

ஜார்க்கண்ட்

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், கொரோனோ பெருந்தோற்று காரணமாக சொந்த மாநிலம் திரும்பியுள்ள விவசாயிகளுக்கு இந்திய அரசு MSP-யை உயர்த்தி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போது தான் அவர்கள் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு ஏதுவான சூழல் இருக்கும் என கூறியுள்ளார். மாநில வேளாண் செயலாளர் அபுபக்கர் சித்திக் ஒன்றிய அரசின் வேளாண் அமைச்சக கூடுதல் செயலாளருக்கு  எழுதிய கடிதத்தில் மாநில அரசு கோரிய MSP விலையையும் ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள விலையையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

நெல்லுக்கு ஜார்கண்ட் அரசு வழங்கக் கோரிய MSP-யானது குவிண்டாலுக்கு ரூபாய் 2784. ஆனால் ஒன்றிய அரசு குவிண்டாலுக்கு வழங்கியுள்ள விலையானது ரூபாய் 1868. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.3 சதவீதம் இங்கு உற்பத்தியாகும் நெல்லுக்கு கிட்டத்தட்ட மாநில அரசு கோரிய விலையை விட ஒன்றிய அரசு நிர்ணயித்த தொகையானது ரூபாய் 916 குறைவாகும். அதாவது கிட்டத்தட்ட 1000 ரூபாய் குறைவான தொகையாகும். 

இதுமட்டுமில்லாது மைதா குவிண்டாலுக்கு ரூபாய் 3,526 ஜார்க்கண்ட் அரசு கோரியதில், ரூபாய் 1850 மட்டுமே  மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது பாதிக்கு பாதி குறைவான விலையாகும். அதாவது கிட்டத்தட்ட ரூபாய் 1700 குறைவான தொகையாகும். 

நிலக்கடலையின் MSB ஒரு குவிண்டால் ரூ .7,594 ஆக நிர்ணயிக்க ஜார்க்கண்ட் அரசு கோரியிருந்தது.  ஆனால் மத்திய அரசு இதை ஒரு குவிண்டால் ரூ .5,275 ஆக நிர்ணயித்துள்ளது. இதுவும் உத்தேச விகிதத்தை விட ரூ.2,319 குறைவாகும். 

அதேபோல், சோயாபீனுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,037 மற்றும் சூரியகாந்திக்கு குவிண்டால் ரூ.11,331 என கோரியிருந்தது. எவ்வாறாயினும், சோயாபீனுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ .3,880 ஆகவும், சூரியகாந்திக்கு குவிண்டால் ரூ .5,885 ஆகவும் MSP-யை நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான்

2020 மே 6 அன்று ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் டி.பி.குப்தா அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தில் திணை, மக்காச்சோளம், அவரை மற்றும் உளுந்து ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தக் கோரியுள்ளார்.

அந்த கடிதத்தின்படி, திணையின் MSP-யை ராஜஸ்தான் அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2,210 ஆக உயர்த்தக் கோரியது. ஆனால் மத்திய அரசு அதை ஒரு குவிண்டால் ரூ .2,150 ஆக நிர்ணயித்தது. 

இதேபோல், மக்காச்சோளத்தின் MSP-யை குவிண்டால் ரூ .3,200 ஆக நிர்ணயிக்க ராஜஸ்தான் அரசு கேட்டுக் கொண்டது.  ஆனால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .1,850 என்று மட்டும் மத்திய அரசு அறிவித்தது. இது பரிந்துரைக்கப்பட்ட விகிதங்களை விட ரூ .1,350 குறைவாகும். 

சோயாபீனைப் பொறுத்தவரையில், ராஜஸ்தான் அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,200 என்ற MSP யைக் கோரியது. ஆனால் ஒன்றிய அரசு அதனை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,880 ஆக நிர்ணயித்துள்ளது. 

அதேபோல் உளுந்தின் விகிதத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,470 ஆக உயர்த்துமாறு அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் இந்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ .7,196 என்ற மிகக் குறைந்த வீதத்தை அறிவித்தது. 

ராஜஸ்தான் மாநிலம் மேற்கூறிய அனைத்து பயிர்களிலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராஷ்டிரா

மராட்டிய அரசைப் பொறுத்தவரை மாநில அரசு கோரிய விலையில் கிட்டத்தட்ட 53 சதவீதம் குறைவான MSP விலையையே மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பயிர்களுக்கு மாநில அரசு கேட்ட விலையும் மத்திய அரசு நிர்ணயித்த தொகையும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மராட்டிய அரசு குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 3968, சோளத்திற்கு ரூபாய் 3745, திணை வகைக்கு ரூபாய் 4182, மக்காசோளத்திற்கு ரூபாய் 2163, பருப்பு ரூபாய் 6211, பச்சைப் பயிர் ரூபாய் 10444,  உளுந்து ரூபாய் 8900, நிலக்கடலை ரூபாய் 9511, அவரை வகைகளுக்கு 6070 ரூபாய் என குறைந்தபட்ச ஆதார விலையை மஹாராஷ்டிரா அரசு கோரியது. 

இப்படி இருக்க நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையானது 1868 ரூபாயாகும். இது மாநில அரசு நிர்ணயித்த தொகையை விட 53 சதவீதம் குறைவானதாகும். 

இதேபோல் சோளத்திற்கு 30 சதவீதம் குறைவாகவும், திணை வகைக்கு 49 சதவீதம் குறைவாகவும், மக்காசோளத்திற்கு 14 சதவீதம் குறைவாகவும், நிலகடலைக்கு 45 சதவீதம் குறைவாகவும், பருத்திக்கு 29 சதவீதம் குறைவாகவும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 

கர்நாடகா

பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் இந்த புதிய விவசாய சட்டத்திருத்திற்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன. கர்நாடக அரசின் விவசாயத் துறை மத்திய அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள MSP-யானது பயிர் அறுவடைக்கு ஆகும் செலவை விட குறைவாகவே உள்ளது என தெளிவாகவே தெரிவித்துள்ளது. 

நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த தொகையை ரூபாய் 2782 வரை கர்நாடக அரசு உயர்த்திக் கொடுக்கக் கோரியது. அந்த தொகையானது மைய அரசு நிர்ணயித்த தொகையைவிட 1868 ரூபாய் குறைவானதாகும். 

இதேபோல், வெள்ளை சோளம் , திணை, ராகி, மக்காச்சோளம், பருப்பு, பச்சைப்பயிர், நிலக்கடலை, சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பருத்தி ஆகியவற்றிற்கான MSP-யை ரூ.4,671, ரூ.4,932, ரூ.5,698, ரூ.4,704, ரூ.2,025, ரூ.8,999, ரூ.13,881, ரூ.8,395, ரூ.9,613, ரூ.9,293 மற்றும் ரூ.5,665 முறையே மாநில அரசு உயர்த்தித் தரக் கோரியது. இதில் பருத்தியைத் தவிர மற்ற அனைத்து பயிர்களுக்கும் மாநில அரசு கோரிய தொகையை விட குறைவான விலையையே நிர்ணயித்துள்ளது.

பீகார்

பாஜக ஆதரவுடைய பீகார் நிதிஷ் அரசாங்கமும் மைய அரசு அமைத்த MSP-க்கு மறுப்பு தெரிவித்ததோடு, அதை அதிகரிக்கவும் முயன்றது. அம்மாநில விவசாயத் துறை செயலாளர் சரவணகுமார் எழுதிய கடிதத்தில், குவிண்டால் நெல்லுக்கு 2,532 ரூபாயாகவும், மக்காச்சோளத்திற்கு குவிண்டால் 2,526 ரூபாயாகவும் MSP யாக வைக்கக் கோரினார். ஆனால் மத்திய அரசு நிர்ணயித்த தொகையானது நெல்லுக்கு 1868 ரூபாயாகவும், மக்காச்சோளத்திற்கு 1850 ரூபாயாகவுமே நிர்ணயிக்கப்பட்டது எனவும் கடிதத்தில் அடிக்கோடிட்டுள்ளார். இருப்பினும் இது தொடர்பாக மாநில அரசு கோரிய கோரிக்கைகளை மைய அரசு நிராகரித்தது.

இதுமட்டுமில்லாது, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் MSP-யை சாகுபடிக்கு தேவையான உற்பத்தி செலவு, ஆட்களுக்கான கூலி மற்றும் 50 சதவீத லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. 

இவ்வாறு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட, பெரும்பாலான மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு வந்தபோதும் MSP-யை மாற்றியமைக்கக் கோரியும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை மாற்றவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *