மருத்துவர்கள்

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று  உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு முதலீடு செய்து உருவாக்கி இருக்கும் இந்த மருத்துவமனைகள் அந்த மாநில மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த பயன்படவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மாநில அரசின் ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பவர்களுக்கும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் படிப்பவர்களுக்கும் ஒரே அளவில் நிதி ஒதுக்கீட்டினை மாநில அரசு செய்வதால், அகில இந்திய ஒதுக்கீட்டில் படிப்பவர்களும் கட்டாய சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 

மேலும் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால், தனது  மாநில மக்களுக்கு தரமான சுகாதார வசதியை கொடுக்க மாநில அரசு கடமைப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தரமான மருத்துவர்களை உருவாக்க நிதி செலவழித்து மருத்துவர்களை உருவாக்குகிறது. எனவே மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கிய இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் படிப்பவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனையில் கடடாய சேவை ஆற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்த கருத்து

இது குறித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  மருத்துவர் ரவீந்திரநாத் அவர்கள் நம்மிடம் பேசிய போது,

“உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே. வெளி மாநிலங்களில் இருந்து இங்கே படிக்க வரும் மாணவர்கள் படித்து முடித்தபின் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மீண்டும் சென்று விடுவது நம் மாநிலத்திற்கு பெரும் இழப்புதான். 2 வருடத்திற்கான கட்டாய சேவை அல்லது 50 லட்சம் ரூபாய் பணம் கட்டிவிட்டு வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனைகள் சரியானதே. மேலும் இதன்மூலம் நம் மாநில மாணவர்களின் மேற்படிப்பிற்கான இடங்களை பாதுகாக்கவும் முடியும். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொது மருத்துவக் கட்டமைப்பையும் இதன் மூலம் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆனால் இந்த நடவடிக்கை நீண்ட நாட்களுக்கு பயன் தராது. இது போன்ற கட்டாய சேவை முறையை பயன்படுத்துவதால் ஏற்கனவே இங்கே படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும். இதற்கான தீர்வாக அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு என்று ஒதுக்குவதே சரியாக இருக்கும். 

இந்த கட்டாய சேவைக்கு எதிரான வழக்கை அதிகமாக வெளிமாநிலத்தவர்களே தொடுத்துள்ளனர். வெளிமாநில மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் உடனடியாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தடையாக இருந்த 50 லட்சம் ரூபாய் தொகையை செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளவே இந்த வழக்கை அவர்கள் தொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *