தற்போது நடைபெற்று வரும் உலக வர்த்தக் கழகத்தின் (WTO) கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வலியுறுத்தும் ஒப்பந்தம் பேசப்பட இருக்கிறது. 2020-க்குள் மானியங்களை நீக்கும் ஒப்பந்தத்தினை நிறைவேற்றி விட வேண்டும் என்ற இலக்கு வைத்து WTO கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை சிதைவுக்கு உள்ளாக்கும் இந்த ஒப்பந்தத்தினை இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
WTO மீனவ ஒப்பந்தத்தில் மானியம் குறித்து சொல்லப்படுவது என்ன?
மீனவ மானியங்கள் குறித்து WTO-வில் முன்வைக்கப்படும் போது அதனை ரத்து செய்யக் கோருவதற்கான காரணமாக இரண்டு வகையான வாதங்கள் WTO-வினாலும், வளர்ந்த பணக்கார நாடுகளாலும் முன்வைக்கப்படுகிறது.
- ’சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல்’ (Illegal, Unreported and Unregulated fishing – IUU fishing) என்று ஒரு வரையறையை WTO முன்வைக்கிறது. அதனடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படாத அல்லது பதிவு செய்யப்படாத மீன்பிடி வகையினரை சட்ட விரோத மீன்பிடித் தொழில் செய்பவர்களாக வகைப்படுத்த வழி செய்கிறது. அதனைத் தான் IUU Fishing என்ற பெயருடன் விவாதிக்கிறார்கள்.
மேலும் மீனவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி சென்று மீன் பிடித்தாலும் அதனையும் சட்டவிரோதம் என்று வகைப்படுத்த முடியும். இந்த வகை மீன்பிடித்தல்களுக்கு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்கிறது WTO.
- ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளிலுள்ள மீனவர்களுக்கு சிறப்பு மானியங்கள் அதிகமாக வழங்கப்படுவதால் அந்த நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் அதிகமான அளவில் (OverFishing) மீன்களைப் பிடித்து விடுகிறார்கள். இதன் காரணமாக மீன்களின் எண்ணிக்கை கடல்பரப்பில் குறைந்து வருகிறது என்று சொல்லி, அதிக மீன்பிடித்தலைத் தடுத்திட அந்த மானியங்களை நிறுத்த வேண்டும் என்கிறது.
இந்த மொத்த விவாதங்களின் சாராம்சம் என்னவென்றால் மீனவர்கள் அதிகமான அளவில் மீன்களை சுரண்டுவதால், எதிர்காலத்தில் மீன்கள் இனம் அழிவை சந்திக்கும் ஆபத்திருக்கிறது. எதிர்கால சந்தத்தியினருக்கு மீன்கள் இல்லாமல் போய்விடும். அதனால் அனைத்து மீன்பிடித்தலையும் சர்வதேச அளவிலான சில ஒழுங்குமுறை சட்டங்களுக்குள் கொண்டுவர வேண்டும். அதிக மீன் பிடித்தலை மீனவர்கள் செய்வதற்கு மானியங்கள் வழிவகுப்பதால் அதனை அளிக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் வாதம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீனவர்களின் நிலை
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை இந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி பல ஆண்டுகளாக WTO-வில் பணக்கார நாடுகள் அழுத்தத்தினை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் வளர்ந்த நாடுகளில் இருப்பதைப் போன்று மீன்பிடி தொழில் என்பது கார்ப்பரேட் மயமாக நடக்கவில்லை. இங்கு மீன்பிடித் தொழிலை செய்பவர்கள் பெரும்பாலும் சிறு குறு மீனவர்களே. இந்த மீனவர்கள் மீன்களை அதிகம் பிடித்து விடுகிறார்கள் என்று சொல்வதே அடிப்படையில் ஒரு அபத்தமான வாதமாகும். உரிமம் பெறும் நிறுவன வகைப்பாட்டிற்குள் வராத அனைத்து மீனவர்களையும் சட்டவிரோத மீனவர்களாக அறிவிப்பதே IUU Fishing என்ற சொற் பிரயோகத்தின் நோக்கமாக இருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்படாத பாரம்பரிய மீனவர்களின் படகுகள் உள்ளன. இவற்றையெல்லாம் சட்டவிரோதமான மீன்பிடி படகுகள் என்று சொல்வதை நோக்கியே இந்த ஒப்பந்தம் இட்டுச் செல்கிறது.
உண்மையில் மீன் வளத்தினை சுரண்டுவது யார்?
2000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் எந்த காலகட்டத்திலும் மீன்கள் இனம் அழிவை சந்திக்கவில்லை. எப்போது மீன்பிடித் தொழில் என்பது கார்ப்பரேட் மயமாக்கப்பட்டு பெரிய கப்பல்களும், நிறுவனங்களும், நவீன ராட்சத இயந்திரங்களும் அனுமதிக்கப்பட்டதோ அப்போதிலிருந்துதான் மீன்கள் பற்றாக்குறை என்ற சூழலே உருவாகிறது. ஆனால் WTO ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை மானியங்கள் நீக்கத்தினால் பாதிக்கப்படப் போவது என்னவோ சிறு குறு மீனவர்கள்தான். இதனால் தான் வளரும் நாடுகள் ஒன்றாக இணைந்து இந்த ஒப்பந்தத்தினை ஏற்க மறுத்து வருகின்றன.
அக்டோபர் 5-ம் தேதி துவங்கி 10-ம் தேதி வரையில் WTO கூட்டத்தொடரின் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன.
சிறு குறு மீனவர் சங்கங்கள் இந்திய அரசின் பிரதிநிதிகளுக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதம்
அக்டோபர் 4-ம் தேதி ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உலக வர்த்தக கழக அமைப்பின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் சான்தியாகோ வில்ஸ் ஆகியோருக்கு 19 மாநிலங்களைச் சேர்ந்த சிறு மீனவ தொழிலாளர்களுக்கான கூட்டமைப்பு (NPSSFW) ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளது. அதில் சர்வதேச வணிகத்தின் அடிப்படையில் சிறு, குறு மீனவர்களின் மானியங்களை தீர்மானிக்கவோ ஒழுங்குபடுத்தவோ கூடாது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர்.
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் உட்பட மீனவத் தொழிலாளர்கள் குறித்தான முடிவுகள் எடுக்கும் அதிகாரம் என்பது அந்தந்த பிராந்திய, தேசிய, மாகாண அமைப்பின் அதிகாரிகளுக்கு மட்டுமே உரியது என்று தெரிவித்திருப்பதுடன், இது போன்ற முடிவுகள் எடுக்கும்போது முதன்மை பங்குதாரர்களாகிய மீனவர்களின் முன்னிலையிலே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
WTO என்பது மீனவர்களை நிர்வகிக்கும் அமைப்போ அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்போ கிடையாது. அது முற்று முழுவதுமாக அதன் உறுப்பு நாடுகளின் வணிக நலன்களை மையப்படுத்தி மட்டுமே செயல்படும் அமைப்பாகும். ஆனால் இன்று உலக வர்த்தக அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கிற போர்வையில் ஒப்பந்தம் போட முயன்று வருகிறது. ஆனால் இந்த அமைப்பு பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டுக்குமே இறுதியில் தீங்கு விளைவிக்கக் கூடியதே என NPSSFW அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
அழிவுகரமான மீன்பிடி சாதனங்கள் மற்றும் பெரிய அளவிலான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடித் துறைக்கு வழங்கப்படும் மானியங்களை நீக்கி, பிராந்திய சூழலுக்குப் கேடுவிளைவிக்காத சிறிய அளவிலான மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை NPSSFW வைத்திருக்கிறது.
உலக வர்த்தகக் கழகம்
அடிப்படையில் உலக வர்த்தகக் கழகம் (WTO ) என்கிற சர்வதேச நிறுவனம், வளர்ந்த நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வணிகத்திற்காக ஏழை மற்றும் வளரும் நாடுகளின் சந்தைகளைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்து கொடுத்திடும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.
1947-ம் ஆண்டிலிருந்து உலகின் பல நாடுகளுக்கிடையிலான வணிக ஒப்பந்தமாக செயல்பட்டு வந்த GATT (General Agreements on Tariffs and Trade (GATT) எனும் ஒப்பந்தத்திற்கு பதிலாக ஜனவரி 1, 1995-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக WTO எனும் அமைப்பு மர்ரகேஷ் ஒப்பந்தத்தின் (Marrakesh Agreement) கீழ் செயல்படத் துவங்கியது.
இந்த அமைப்பு நாடுகளுக்கிடையே எழும் வணிக முரண்களை உலக வர்த்தக கழகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமூகமான தீர்வுகாண வழிவகுப்பதாகக் கூறிக் கொள்கிறது. இந்த ஒப்பந்தங்களில் உறுப்பு நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, ஒப்புக் கொண்டவற்றை தங்கள் நாட்டு நாடாளுமன்றத்திலும் சட்டங்களாக இயற்றிட வேண்டும்.