கடந்த பத்து நாட்களாக அதிமுக-வில் நடந்து வந்த பதவிச் சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் தேனியிலும், மதுரையிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை உருவாக்கி வந்தது.

- செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த மோதல் வெளிப்படையாகவே வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் நேரடி வாக்குவாதமாகியது.
- நான் ஜெயலலிதாவால் முதல்வர் ஆக்கப்பட்டேன். நீங்கள் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டீர்கள் என்று ஓ.பி.எஸ் பேசினார்.
- இருவருமே சசிகலாவால் தான் முதல்வர் ஆக்கப்பட்டோம் என்று எடப்பாடி பதில் சொல்லி, இரும்புப் பெண்மணி என்றும் துணிச்சலாக முடிவெடுப்பவர் என்றும் சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் முடிவுகளை எடுத்தது சசிகலாதான் என்று அதிமுக-வின் 30 ஆண்டுகால ரகசியத்தை போட்டுடைத்தார்.
- எந்த முடிவும் எடுக்காததால் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
- இதற்குப் பின்னர் ஓ.பி.எஸ் வீட்டிலும், எடப்பாடி வீட்டிலும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
- அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 6 அன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னைக்கு வரும்படி செய்தி வெளியிட்டு, பின்னர் அது டெலிட் செய்யப்பட்டது.
- காந்தி நினைவு நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் கவர்னர் முன்னிலையில் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி எல்லோருக்கும் வணக்கம் வைத்தபோது அதை கண்டு கொள்ளாமல் கடந்து போனார் ஓ.பி.எஸ்.
- இருவரும் ராமர் லட்சுமணன் போல செயல்படுவார்கள் என்று அமைச்சர் உதயகுமார் பின்னர் பேட்டி கொடுத்தார்.
- சொந்த ஊருக்குச் சென்ற பன்னீர்செல்வத்தை அவரது பண்ணை வீட்டில் சென்று சந்தித்தார் அமைச்சர் உதயகுமார்.
- உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிடச் சென்ற பன்னீர் செல்வத்திற்கு பெரும் வரவேற்பைக் கொடுத்தார் உதயகுமார். சாதி ரீதியான அணி சேர்த்தலை ஓ.பி.எஸ் செய்வதாக சொல்லப்பட்டது.

”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்று ட்விட்டரில் பதிவு செய்தார் பன்னீர்செல்வம். 2017-ம் ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கொண்டு தவம் செய்து ஒரு பரபரப்பை உருவாக்கியதை யாருக்கோ நினைவூட்டும் வகையில் பன்னீர் செல்வம் பகவத் கீதை வரிகளை பதிவிட்டிருப்பதாக பேசப்பட்டது.
- தொண்டர்களின் நலன் கருதியும், கட்சி நலன் கருதியும் முடிவெடுப்பேன் என்று பன்னீர்செல்வம் மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்.
- ”அதே நாளில் மதுசூதனன் கட்சியின் அவைத் தலைவராக நானே தொடர்ந்து நீடிப்பேன். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதிமுகவின் அவைத் தலைவர் என்ற பொறுப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எனக்கு வழங்கினார். நான் இருக்கும் வரை அதிமுக அவைத் தலைவராகவே நீடிப்பேன்” என்று பேட்டி கொடுத்தார்.
- இன்று அதிகாலை 3 மணி வரை ஆலோசனை நடத்திய பின் காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்தில் கூடியபோது, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம், ”முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி” என்று அறிவித்தார்.
ஏற்கனவே முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் இருக்கும் நிலையில், மீண்டும் அதே முடிவுகளை அறிவிக்க தேவையற்ற பல பரபரப்புகளை ஏற்படுத்தியது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதள பதிவுகளில் ஒன்று
”சரி.. இதுக்கு முன்னாடி யாரு இருந்தா..?
அவங்களேதான்..
அப்போ எதுக்கு இந்த நாடகம்..?
வேளாண் சட்டம்னு ஒன்னு வந்துச்சே, இப்போ மறந்து போச்சா..
அட.. ஆமா..!