நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பதவியேற்ற நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
கல்வி, அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பார்ப்பனர் அல்லாதார் புறக்கணிக்கப்படுவதை மாற்ற 1916-ம் ஆண்டு பார்ப்பனரல்லதார் முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட தலைவர்கள் சென்னை விக்டோரியா அரங்கில் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதனைத் தொடங்கினர்.
பார்ப்பனரல்லாத மக்களிடம் அரசியல் உணர்வை ஊட்டுவதே இச்சங்கத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்த அமைப்பு ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ என்ற செய்தித்தாளையும், தமிழில் ‘திராவிடன்’ என்ற செய்தித்தாளையும் வெளியிட்டது. அதனால் இவ்வமைப்பினர் ‘நீதிக் கட்சியினர்’ என அழைக்கப்படலாயினர்.
சட்டமன்ற இயல்பை மாற்றியமைத்த மாண்டேகு – செம்சுபோர்டு சீர்திருத்தம்
1919-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தம் இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களின் இயல்பினை மாற்றுவதாக அமைந்திருந்தது. மாநில ஆட்சியின் நிர்வாகத் துறைகள், ஒதுக்கப்பட்ட துறைகள், மாற்றப்பட்ட துறைகள் எனப் பகிர்வு செய்யப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறைகளை ஆளுநரும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரும் நிர்வகித்தனர். மாற்றப்பட்ட துறையானது பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தினரின் பொறுப்பின் கீழ் வந்தது.
முதல் பொதுத்தேர்தல்
மாண்டேகு-செம்சுபோர்டு சட்டப்படி அமையப்பெற்ற சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல் 1920-ம் ஆண்டு நவம்பர் 30, டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெற்றது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு தீவிரப் பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ் நீதிக் கட்சியை எதிர்த்தது.
நீதிக்கட்சி மாண்டேகு – செம்சுபோர்டு சீர்திருத்தங்களை ஏற்க முடிவு செய்தது. தேர்தல் பிரச்சாரத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்கொண்டு பெருவாரியான வெற்றியும் பெற்றது. 98 இடங்களில் 63 இடங்களைக் கைப்பற்றியது. நியமன உறுப்பினர்களில் இக்கட்சியின் ஆதரவாளர்கள் 18 பேர் இடம் பெற்றனர். 127 பேர் அடங்கிய அவையில் நீதிக்கட்சியின் வலிமை 81 ஆக இருந்தது.
நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை
பார்ப்பனரல்லாத மக்களுக்கு இடங்கள் ஒதுக்கியதால் சட்டமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெற ஒதுக்கீடு வாய்ப்பாக அமைந்தது. இது நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை என்பது மட்டுமல்லாது சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சரவையாகவும் அமைந்தது. 1920-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17-ம் நாள் புதிய அமைச்சரவை பதவியேற்றது.
அப்போது முதலமைச்சர் என்ற பதவி கிடையாது. ஆனால் அவர் ஆங்கிலத்தில் பிரிமியர் எனவும் அல்லது முதன்மை அமைச்சர் எனவும் அழைக்கப்பட்டார்.
நீதிக்கட்சியின் தலைவர் சர் பி.டி.தியாகராயர் முதன்மையமைச்சர் ஆவார் என்று எதிர்பாக்கபட்டபோது, அவர் சுப்பராயலு அவர்களை முதன்மை அமைச்சராக அமைச்சரவைக்கு தலைமை தாங்கச் சொன்னார். கல்வி, பொதுப்பணி, கலால், பதிவுத் துறைக்கு பனகல் அரசர், கே.வி.ரெட்டி நாயுடு ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
உடல்நலக் குறைவினால் மிகக் குறுகிய காலத்திலேயே சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகினார். அதனால் பனகல் அரசர் முதன்மை அமைச்சராகவும், கூடுதலாக அமைச்சரவையில் ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவையில் பார்ப்பனரல்லாதவர்களே முழுவதும் இருந்தனர். அதனால் ஆளுநர் பி.இராஜகோபாலாச்சாரி, பி.சீனிவாச ஐயங்கார், சி.பி.இராமசாமி ஐயர் ஆகியோரை மிக முதன்மைப் பொறுப்புகளில் நியமித்தார்.
எல்லா சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு எனும் ஆணை
1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் சென்னை சட்டமன்றம் தொடங்கியது. முழு அதிராகமும் ஆளுநர் கையில் இருந்தபோதும் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு பல சமூக முன்னேற்றத் திட்டங்களை நீதிக்கட்சி செயல்படுத்தியது.
பானகல் அரசர் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் எல்லா சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனும் ஆணையைப் பிறப்பித்தார்.
மேலும் இதற்காக ஒரு மசோதாவையும் நீதிக்கட்சியினர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தனர். “உத்தியோகத் துறையில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள்தொகையை அடிப்படையாக் கொண்டு உத்தியோகங்களை வழங்க வேண்டும்.” என்று அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எழுந்தது. ஆனாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வகுப்புவாரி பிரதிநிதிதுவ ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆளுநருடன் நெருக்கமாக இருந்த உயர் ஜாதியினர் அதனை செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
கல்லூரிகளில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் நுழைவதற்கான வாய்ப்பு
பெரும்பாலான அரசுக் கல்லூரிகளின் பொறுப்பு பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஏ.பி.பாத்ரோ பல முயற்சிகளை செய்தார். அதன் தொடர்ச்சியாக 2-9-1921 அன்று சென்னை சட்டமன்றத்தில் டி.சி.தங்கவேலுப்பிள்ளை எனும் நீதிக்கட்சி உறுப்பினர் முன்மொழிந்த தீர்மானத்தையொட்டி நீதிக்கட்சி அரசு தன் ஆணை எண் 636 சட்டம் (கல்வி) 20-5-1922 மூலம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க குழுக்களை நியமித்தது.
ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற இந்த ஆணைக்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.
அறநிலையத்துறை உருவாக்கம்
கோயில்களில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடுகளை முடிவுக்குக் கொண்டு வர, அறநிலையத்துறை பாதுகாப்பு சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டது. இது நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில்தான் அது நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு முதல் முதலாக வாக்குரிமை
உலகம் முழுவதுமே பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லாமலிருந்தது. உலகம் முழுவதுமே வளர்ந்த நாடுகளில் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாத காலத்தில் 1917 ரஷ்யாவில் புரடசிக்குப் பின் அமைந்த இடைக்கால அரசு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய பின் இங்கிலாந்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்கள் வாக்களிக்க கூடாது என்று இருந்த தடையை அரசு ஆணை எண் 108 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) மூலம் 10-5-1921 அன்று பனகல் அரசர் நீக்கினார்.
1921 முதல் சென்னை மாகாணப் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் தான் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை முதலில் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒடுக்கப்பட்ட சமூக மக்களை முன்னேற்ற நீதிக்கட்சி முன்னெடுத்த முக்கியமான நடவடிக்கைகள்
- பொதுத்துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.
- தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டன. பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு, அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை, இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.
- தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்கு கடன் வசதி செய்து தரப்பட்டது.
- ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
- ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
- ஆதிதிராவிடர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
- தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
- சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
- தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.