விவசாயிகள் போராட்டம்

நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்

விவசாயிகள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்கி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து விவசாய சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் 21-வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுத்த நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரபடுத்தி வந்தனர். அதன்படி இன்று  விவசாயிகள் டெல்லி மற்றும் நொய்டா இடையேயான சில்லா எல்லையை மூடினர்.

கடந்த வாரம்,ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் “நக்சல் மற்றும் மாவோயிசக் குழுக்கள்” ஊடுருவியுள்ளதாக எந்தவித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து வரும் முன்னாள் ராணுவத்தினர் காட்டமான பதில்களை அளித்துள்ளனர்.

ஜோகிந்தர்

ஜோகிந்தர் சிங்

சுமார் 28 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஜோகிந்தர். தற்போது டெல்லி எல்லையில் போராடும் சக விவசாயிகளுடன் அமர்ந்து விவசாய சட்டங்களுக்கு எதிராக தன் போராட்டத்தை நடத்தி வருகிறார். 

“1990-ம் ஆண்டு முதல் இந்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நம் நாட்டின் வளங்களை தாரைவார்த்து வருகிறது. தற்போது அவர்கள் (இந்திய அரசு) விவசாயிகளின் நிலத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள். இந்த போரில் வென்ற பின்னரே நான் வீட்டிற்கு செல்வேன்” என ஜோகிந்தர் தெரிவித்தார்.

1991-ம் ஆண்டில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜோகிந்தர் பஞ்சாபிற்கு சென்று விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜோகிந்தர் பேட்டி அளிக்கையில், முன்னால் ஜனாதிபதி வெங்கட்ராமன் தன்னுடன் கைக்குலுக்கிய படி இருக்கும் ஒரு பழைய புகைப்படம் ஒன்றை எடுத்துக் காட்டினார்.

முன்னாள் குடியரசுத் தலைவருடன் ஜோகிந்தர் சிங்

ஒன்றிய அரசுக்கு ஒத்துஊதும் ஊடகங்கள் போராடும் விவசாயிகளை, “நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகள்” என முத்திரை குத்தி வரும் மனநிலை குறித்து ஜோகிந்தர்- யிடம் எழுப்பிய கேள்விக்கு, அரசாங்கத்தைப் குறிப்பிட்டு “அவர்களுக்கு மூளை இல்லை,” என ஜோகிந்தர் தெரிவித்தார். “இந்த போராட்டத்தில் நக்சலைட்டுகள் இருந்திருந்தால், நான் ஏன் எப்படி இதில் இணைந்திருப்பேன்?”

மேலும் தொடர்ந்த ஜோகிந்தர், “நரேந்திர மோடியும் அமித்ஷாவும் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் இந்த நாட்டிற்காக நாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்தோம்”. “என்னைப் போன்ற தேசபக்தர்களை நக்சல் என்று அழைத்தால், நாம் ஏன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்? இதற்காக அவர்களே வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இக்பால் சிங்

இக்பால்சிங்

50 வயதான இக்பால் சிங் கடந்த ஆண்டு தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 30 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியவர். நவம்பர் 26 முதல் சிங்கு எல்லையில் போராடிவரும் அவர், தான் இராணுவத்தில் இருந்த நாட்களில் கூடாரங்கள் அமைத்துப் பணியாற்றிய அனுபவத்தில் இருந்து, தற்காலிகமாக நெடுஞ்சாலையில் கூடாரம் அமைத்து போராடுவது எளிதாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அமிர்தசரஸ் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த இக்பால், இந்தியாவின் நான்கு மூலைகளில் உள்ள எல்லைகளிலும் பணியாற்றியவர். அது மட்டுமின்றி 2010-ம் ஆண்டு ஐ.நா-வின் அமைதிகாக்கும் படையின் சார்பாக சூடானிலும் பணியாற்றியவர். பின்னர் இறுதியாக அவர் சுபேதாரக ஓய்வு பெற்றார். மேலும் 1999-ம் ஆண்டு கார்கில் போரில் ஈடுபடத் தயாராக இருந்தவர்.

“நாங்கள் காலிஸ்தானியர்களாக இருந்தால், எங்களை ஏன் 30 ஆண்டு காலம் இராணுவத்தில் பணியாற்ற அனுமதித்தீர்கள்” என இக்பால் சிங் கேள்வி எழுப்பினார். “எங்கள் மகன்கள் தற்போது இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? சிறைகளில் அடைப்பீர்களா?” என அரசை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இக்பால்” மோடி அரசாங்கம் தனது  பதவிக்காலத்தில் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் அரசியலால் பிளவுபட்டு இருந்த விவசாயிகளை, குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் விவசாயிகளை  ஒன்றிணைத்துள்ளார்”.மேலும் அவர் “இவளோ பெரிய போராட்டத்தை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா? போரட்டகார்கள் சுமார் 40 கி.மீ தூரம் வரை பரவி போராடி வருகிறார்கள்” என கூறினார்.

இந்திய அரசாங்கம் போராடும் விவசாயிகளை “தேச விரோதிகள்” என்று அழைப்பது  வருத்தம் அளிப்பதாக இக்பால் தெரிவித்தார். “நாங்கள் நாட்டிற்கு சேவை செய்தோம், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு இராணுவ அதிகாரியாக எங்கள்  கடமையை நாங்கள் நிறைவேற்றினோம்” என்று அவர் தெரிவித்தார். பாஜக-வை சேர்ந்த கோயல் போன்ற மூத்த அரசியல்வாதிகள் போராடும் விவசாயிகளுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்கள் அச்சுறுத்தலாக இருப்பதற்கு காரணம் என்னை போன்ற விவசாயிகளால் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்படவில்லை என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவித்தார்.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முஸ்லீம்-விரோத படுகொலையைக் குறிப்பிட்டு பேசிய இக்பால் சிங், “மோடி தனது சொந்த மாநிலத்தில் செய்த இந்த சம்பவம் தவறானது” என கூறினார். “ராணுவ கண்டோன்மண்ட்களில் நாங்கள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். அப்போது உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இருந்தார்கள். பெரிய நிறுவனங்களுடன் பிரதமருக்கு தொடர்பு இருப்பது பற்றி நாங்கள் அறிவோம். அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே விற்றுவிடுவார் என்று நாங்கள் முன்னரே எண்ணினோம்” எனவும் தெரிவித்தார்.

குர்செவ் சிங்

குர்செவ் சிங்

தனது 18 வயதில் இருந்து இராணுவத்தில் பணியாற்றும் 60 வயதான குர்செவ் சிங் ஆயுதப் படையில் நாகாலாந்து, கெளஹாத்தி, யூரி, மீரட் போன்ற இடங்களில் பணியாற்றியவர் ஆவார்.

மத்திய அமைச்சர் போராடும் விவசாயிகளை நக்சல்பாரிகள் என குற்றம்சாட்டியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு குர்செவ் சிங், ​​ “அவர் (பியூஷ் கோயல்) மட்டும் இங்கே வந்து இதை சொல்லி இருந்தால், அவர் பலாரென் அறை வாங்கியிருப்பார்” என தெரிவித்தார். மேலும் அவர் சொன்னதெல்லாம் ஒரு விடயமே கிடையாது, ” நாய் வாலை என்றைக்கும் நிமிர்த்த முடியாது” என தெரிவித்தார்.

நன்றி – NewsLaundry, அன்னா பிரியதர்ஷினி.
புகைப்படங்கள் : ஆயுஷ் திவாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *