ரஷ்யாவிடமிருந்து S-400 ரக ஏவுகணைகளை வாங்கியதற்காக துருக்கி மீது சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் 14-12-2020 அன்று கொண்டுவந்துள்ளது. நேட்டோ படையின் கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது இத்தகைய தடையினை முதல் முறையாக அமெரிக்கா கொண்டுவந்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்த செயலானது இரு நாடுகளுக்கும் இடையில் பரபரப்பினை உருவாகியிருக்கிறது. நேட்டோ கூட்டணி உடையுமா எனும் பரபரப்பும் உருவாகியிருக்கிறது. அமெரிக்காவின் CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act) எனும் சட்டம் இத்தகைய பொருளாதாரத் தடைகளை ஒரு நாட்டின் மீது கொண்டுவருவதற்கு வழிவகை செய்கிறது. அச்சட்டத்தின் பிரிவு 231-ஐப் பயன்படுத்தி இத்தடைகளை துருக்கியின் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ளது.
இதே சட்டத்தினைப் பயன்படுத்தி அமெரிக்காவானது ஈரான், ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளின் மீதும் தடைகளை இதற்கு முன்னர் விதித்திருக்கிறது.
S-400 ஏவுகணை வகை என்பது என்ன?
S-400 என்பது ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட தரையிலிருந்து நகர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தக் கூடிய ஒரு ஏவுகணை அமைப்பாகும். இது 400 கி.மீ தூரத்திற்கு 30 கி.மீ உயரம் வரை குறிவைத்துத் தாக்கக் கூடிய நவீன ரக ஏவுகணை ஆகும். இதன் மூலம் தங்கள் நாட்டை நோக்கி வரும் ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் கூட குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். S-400 அமைப்பானது பல்திறன் கொண்ட ரேடார், குறிவைத்து கண்டுபிடிக்கும் அமைப்பு என பல தொழில்நுட்பங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.
ரஷ்யாவால் 2007-ம் ஆண்டில் முதன்முதலாக இந்த S-400 வகை பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 2015-ம் ஆண்டு சிரியாவில், ரஷ்யாவின் கப்பல் மற்றும் விமானப் படை சொத்துக்களை பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டது. கிரீமீயாவில் ரஷ்யாவின் பலத்தை நிரூபிப்பதற்காகவும் நிறுத்தப்பட்டது.
2018-ம் ஆண்டு இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் S-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. 500 கோடி டாலர் மதிப்பிலான S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கியின் மீது என்னென்ன தடைகள்?
- துருக்கியின் ராணுவ தொழிற்சாலைகளின் அதிபரும், ராணுவ கொள்முதல் நிறுவனத்தின் (military procurement agency) தலைவருமான இஸ்மாயில் டெமிர்,
- துணைத் தலைவர் ஃபரூக் இஜித்,
- வான் படை மற்றும் விண்வெளித் துறையின் தலைவர் செர்ஹாட் கென்கோக்லு
- பிராந்திய வான் படை இயக்குநகரகத்தின் மேலாளர் முஸ்தஃபா அல்பர் டெனிஸ்
ஆகிய நால்வருக்கும் அமெரிக்காவில் நுழைவது உள்ளிட்ட முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிக்குள் உள்ள அவர்களது சொத்துகள் மற்றும் முதலீடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எவரும் இவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வது தடை செய்யப்படுகிறது.
- மேலும் துருக்கி ராணுவ தொழிற்சாலைகளுக்கான அமெரிக்க ஏற்றுமதி உரிமங்கள் தடை செய்யப்படுகின்றன.
- துருக்கி ராணுவ தொழிற்சாலைகளுக்கு அமெரிக்க நிதி நிறுவனங்கள் கடன் அளிப்பதும், பொருட்கள் அல்லது தொழில்நுட்பங்களை இந்த நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்வதும் தடை செய்யப்படுகிறது.
- துருக்கி ராணுவ தொழிற்சாலைகளோடு வணிகம் மேற்கொள்ளும் எந்த நிறுவனங்களுக்கும் அமெரிக்க வங்கிகள் கடன் அளிக்கக் கூடாது.
ஈரான் மீதும் வடகொரியா மீதும் விதித்ததைப் போல கடுமையான பொருளாதாரத் தடைகளை இன்னும் துருக்கி மீது அமெரிக்கா விதிக்கவில்லை. இது முதல் கட்டமாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் அமெரிக்கா துருக்கிக்கு சிவப்பு அட்டையை அளிக்கவில்லை, எச்சரிக்கைக்கான மஞ்சள் அட்டையை கொடுத்துள்ளதாகவே சர்வதேச நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
அமெரிக்கா என்ன சொல்கிறது?
ரஷ்யாவிற்கும், துருக்கிக்கும் இடையில் S-400 ரக ஏவுகணைகள் குறித்த ஒப்பந்தம் போட்டதற்காகவே ஏற்கனவே F-35 எனும் போர்த்திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திலிருந்து துருக்கியை அமெரிக்கா நீக்கியது.
S-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது அமெரிக்க ராணுவத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், மேலும் இது ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கணிசமான நிதி பலத்தை அளிக்கும் என்றும், துருக்கியின் பாதுகாப்புத் துறையை ரஷ்யா பயன்படுத்திட வழிவகுக்கும் என்றும் பலமுறை ஏற்கனவே துருக்கியிடம் தெளிவுபடுத்திவிட்டதாக அமெரிக்க அரசுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
துருக்கியின் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதற்கு S-400க்கு மாற்றான தொழில்நுட்பங்கள் நேட்டோவிடம் இருக்கும்போதிலும், துருக்கி ரஷ்யாவின் S-400ஐயே தேர்வு செய்து சோதனையும் மேற்கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இப்பிரச்சினையை உடனடியாக துருக்கி அமெரிக்காவுடன் பேசி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
துருக்கி என்ன சொல்கிறது?
S-400 ஏவுகணைகள் நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற கருத்தை துருக்கி மறுத்துள்ளது. இது நியாயமான முடிவல்ல என்றும் இதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்காவை துருக்கி வலியுறுத்தியுள்ளது. இது துருக்கியின் இறையாண்மை மீதான தாக்குதல் என்றும், சரியான நேரத்தில், சரியான விதத்தில் இதற்கு எதிர்வினை ஆற்றுவோம் என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.
சிரியா, லிபியா மற்றும் அசெர்பைஜான் போர்சூழல்களில் துருக்கி பயன்படுத்திய ஆளில்லா விமான ஆயுதத் தயாரிப்புகள் தங்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியிருப்பதாக துருக்கி கருதுகிறது. உள்நாட்டு ஆயுத உற்பத்தியினை அதிகப்படுத்தும் முயற்சியிலும் துருக்கி இறங்கியிருக்கிறது.
இந்தியாவிற்கு சொல்லப்படும் செய்தி என்ன?
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் S-400 வாங்குவதற்கு 500 கோடி டாலருக்கு ஒப்பந்தம் போடப்பட்டபோதே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொருளாதாரத் தடைகள் குறித்து சிந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை இந்தியாவிற்கு விடுத்திருந்தார். கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ரஷ்யாவுடனான ராணுவ மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவினை தடுப்பதற்கு அமெரிக்கா இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
நீண்டகாலமாக ரஷ்யா இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவதில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 74% ஆயுதங்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவையாக இருந்தன. 2013-ம் ஆண்டிற்குப் பிறகு இது 62% சதவீதமாகக் குறைந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆயுத இறக்குமதி 9% சதவீதத்திலிருந்து 26% சதவீதமாக அதிகரித்தது. 2010-2017 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் ஆயுத இறக்குமதி இந்தியாவில் 1470% சதவீதம் அதிகரித்தது.
அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரும் சந்தையாக தற்போது இருக்கிறது. 2008-ம் ஆண்டிலிருந்து 1500 கோடி டாலர் அளவிற்கான ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா இந்தியாவுடன் போட்டிருக்கிறது. இந்தியாவின் ஆயுத சந்தையின் மொத்த வியாபாரியாக அமெரிக்கா மட்டுமே இருக்கவேண்டும் என்று பார்க்கிறது.
துருக்கியின் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த பொருளாதாரத் தடையானது, ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தைக் கைவிட இந்தியாவிற்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரஷ்யா என்ன சொல்கிறது?
சர்வதேச சட்டத்தின் மீது அமெரிக்கா தனது திமிர்பிடித்த அணுகுமுறையை மீண்டும் காட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட முறைகேடான, ஒருதலைபட்சமான திணிப்பைத் தான் அமெரிக்கா தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்து வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளுடன் ராணுவ ஒப்பந்தங்களை எவரும் போட அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் அமெரிக்கா இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்கா தன் தலைமையிலான ஒரு ஒற்றை துருவ உலகத்தினை உருவாக்க முயன்று வருவதாகவுன் பார்க்கப்படுகிறது.