இந்திய ஒன்றியத்தில் கடந்த 4 வருடங்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2015-ம் ஆண்டு 3.2 லட்சம் வழக்குகளில் இருந்து, 2016-ம் ஆண்டு 3.38 லட்சம் வழக்குகளும், 2017-ல் ஆம் ஆண்டு 3,59,849 வழக்குகளும், 2018-ம் ஆண்டு 3,78,236 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 4,05,861 வழக்குகளாக அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2018-ம் ஆண்டைவிட 7.3 சதவீதம் 2019-ம் ஆண்டில் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2019-ல் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நடந்திருப்பதாக தரவுகள் கூறுகிறது. மொத்த குற்றங்களில் பெண்களுக்கு எதிரானவை மட்டும் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகள் மூலம் நமக்கு தெரிகிறது
எந்தெந்த மாநிலங்களில் அதிகம்?
2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் முதலிடமாக பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் மட்டும் 59,853 வழக்குகள் ஒட்டுமொத்த இந்திய வழக்குகளில் 14.7 சதவீத வழக்குகள் இங்கு மட்டும் பதியப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ராஜஸ்தானில் 41,550 வழக்குகளும், ஒட்டுமொத்த இந்திய அளவில் 10.2 சதவீத வழக்குகள் இந்த மாநிலத்தில் பதியப்பட்டுள்ளது.
மூன்றாவதாக மகாராஷ்டிராவில் 37,144 வழக்குகளும் உள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய அளவில் 9.2 சதவீதம் ஆகும்.
2019 ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் அதிகபட்சமாக, அசாமில் 177.8-ம் (குறைந்தபட்சம் 1 லட்சம் மக்கள் தொகையில் ) ராஜஸ்தானில் 110.4 யும், ஹரியானாவில் 108.5 யும் பதியப்பட்டுள்ளது.
தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள்
2019 ல் பெண்களுக்கு எதிரான குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகளில் ராஜஸ்தானில் மட்டும் மொத்தம் 554 பாலியல் வன்புணர்வு குற்றங்கள் வழக்குகளாக இருக்கிறது
இரண்டாவதாக உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் 537 தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகளும்,
மூன்றாவதாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் 511 தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகள் என்று அதிகரித்துள்ளது.
2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளின் நிலை
கடந்த காலங்களிலுமே உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் வழக்குகளும் அதிகபட்சமாக நடந்திருப்பதை தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் உறுதிபடுத்துகிறது.
2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் கூட இதே நிலைதான். இடங்கள் சற்று முன்பின் மாறுகிறதே தவிர மாற்றங்கள் பெரிதாய் ஏற்படவில்லை. 2017-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்திரப் பிரதேசம் 56,011 (14.5%) வழக்குகளுடன் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் மாநிலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களில் 5,450 வழக்குகளோட முதலிடத்தில் உள்ளது. அதே பாலியல் வன்புணர்வு குற்றங்களில் உத்திரபிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளது
2018 ஆம் ஆண்டும் இதே மாதிரியான புள்ளிவிவரங்களே இருக்கிறது. 2018 ஆம் ஆண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 59455 குற்றங்களுடன் உத்திரபிரதேசம் முதலிடத்திலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களில் மத்திய பிரதேசம் 5,450 வழக்குகளோடு முதலிடத்திலும் உள்ளது.
இதில் அனைத்து வகையான பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வருடத்திற்கு வருடம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இன்னும் குறிப்பாக ஒரு சில மாநிலங்கள் தான் எல்லா வருடமும் தொடர்ந்து முதல் மூன்று இடங்களை வகிக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் உத்திரப் பிரதேசம், மத்திய பிரதரேசம், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தான் தொடர்ந்து முதலிடலில் எல்லா வருடமும் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த தகவலின் மூலம் ஒன்று மட்டும் தெரிய வருகிறது. பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில் அரசு உடனடியாக செயல்பட்டு பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.