ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை

சோழ நாட்டின் தலைநகராகவும், நெற்களஞ்சியமாகவும் விளங்கிய தஞ்சை மாநகரமானது “சோழநாடு சோறுடைத்து” என்று இலக்கியங்களில் புகழப்பட்டது. நெற்குவியல்களை களத்தில் யானைகளைப் பூட்டி அடித்த பெருமையும் சோழ நாட்டிற்கு உண்டு. நெற்களஞ்சியமாக விளங்கிய சோழநாடு இன்று எப்படி இருக்கிறது?

விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுக்களாய் ஆவது ஒருபுறம். காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் விவசாயத்தினை விட்டு வெளியேறுவது ஒரு புறம்.  மீத்தேன், ஹைட்ரோகார்பன் எண்ணெய் எரிவாயு திட்டங்கள் இன்னொரு புறம். இப்போது புதிதாக விவசாயத்தினை கார்ப்பரேட் விவசாயமாக மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வேளாண் மசோதாக்கள் வேறு.

தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கிலே தமிழுக்கு இடமில்லை என ஒரு கூட்டம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறது.

கஜா புயல் வந்து சிதறடித்த மக்களின் வாழ்வை இப்போது கொரோனா வந்து இடித்துத் தள்ளியிருக்கிறது. தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்கினால் வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கிறார்கள்.

இயற்கையின் கோரம் ஒருபுறம், அரசின் கொள்கைகளின் இறுக்கம் மறுபுறம் என மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. 

இந்த சூழ்நிலையில் சோழர்கள் திரும்ப வந்து தங்கள் நாட்டைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும். ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் சோழர்கள் தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும் என்று ஒரு இளைஞர் புகைப்பட எடிட்டிங் மூலமாக ஒரு வித்தியாசமான கற்பனையை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த இளைஞர் பெயர் பெத்து ராஜ் (Pethu Raj). பயணப் புகைப்படங்கள் எடுப்பதில் பெருவிருப்பம் கொண்டவர். சுயாதீன திரைப்பட இயக்குநராக உருவெடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறார். தான் ஒரு வருடத்திற்கு முன்பு காவிரி ஆற்றங்கரைகளில் பயணித்த போது, அப்பகுதிகள் வறண்டு போயிருந்ததைப் பார்த்திருக்கிறார். சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தினை மீண்டும் பார்த்த போது, தான் பார்த்த காவிரிப் பகுதிக்கு இந்த சோழர்கள் இப்போது சென்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அந்த படங்களை உருவாக்கியதாக சொல்கிறார்.

எளிமையானதாகவும். அதே சமயம் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும் அவரது இந்த கிரியேட்டிவிட்டியானது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 

தாய் தின்ற மண்ணே!
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல் !

நெல்லாடிய நிலம் எங்கே?

சொல்லாடிய அவை எங்கே?

வில்லாடிய களம் எங்கே?

கல்லாடிய சிலை எங்கே?

காவிரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது நாசி !

தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோளே அழாதே!

கடைசியாக இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களை பார்க்கிறான் சோழன்!

இப்படி முடிகிறது அந்த மீம் தொடர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *