பொதிகை தமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கோரி இந்திய பொது ஒளிப்பரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதி உத்தரவு வெளியிட்டுள்ளது. தினமும் காலை பதினைந்து நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வேண்டுமென அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் சேனல்களில் சமஸ்கிருதத் திணிப்பு
தூர்தர்ஷன் பொது இயக்குநரால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவில் பிராந்திய மொழிகளில் இயங்கும் தூர்தர்ஷன் சேனல்கள்,
1. தினமும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரையிலும் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கவும்,
2. பிரதி வாரம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அல்லது தகுந்த குறிப்பிட்ட நேரத்தில் வார்தவள்ளி என்னும் ஒன்றிய அரசின் சமஸ்கிருத வாரப் பத்திரிக்கை குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் பொது ஒளிப்பரப்பு சேவை நிறுவனமான பிரசார் பாரதியின் இத்தகைய சமஸ்கிருத திணிக்கும் போக்கிற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.
மோடி தலைமையிலான அரசின் இத்தகைய சஸ்கிருத திணிப்பு நடவடிக்கைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் தனது ட்வீட்டர் பக்கத்தில்,”பொதிகை தொலைகாட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும்.
”கேட்க ஐந்து ஆள் இல்லை
ஊத எதற்கு ஆறு முழ சங்கு?” என பதிவிட்டுள்ளார்.
சமஸ்கிருத வளர்ச்சிக்கு சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற அமைப்பு
மோடி அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்தே சமஸ்கிருதம் தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. சமஸ்கிருத வளர்ச்சிக்காக டெல்லி ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான் அமைப்பை நிறுவியுள்ளது. இதன் மூலம் பல்வேறு வழிகளிலும் பிற மொழித் தேசிய இனத்தினர் மீது சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை செய்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம்
புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாக சமஸ்கிருதத்தை கல்வி நிறுவனங்களிலும் திணிக்கின்ற வேலை மறைமுகமாக அரங்கேற்றப்பட்டது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைகழக மாணவர்கள், பொறியியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் கற்க வேண்டும் என கூறப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வி துணை இயக்குநர் சார்பாக, ஒன்பதாவது முதல் பண்ணிரெண்டாவது வரை பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றால் உதவித் தொகை வழங்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இப்படியாக பிற மொழி தேசிய இனத்தினர் மீது, ஆரிய- இந்துத்துவ கொள்கை கொண்ட மோடி அரசால் தொடர்ந்து சமஸ்கிருத மொழியும், பண்பாடும் பல்வேறு வழிகளிலும் திணிக்கப்படுகிறது.
130 கோடி மக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு மட்டும் முன்னுரிமை
மறுபுறமோ மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் மக்கள் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படுகிறது. சமஸ்கிருதம் சன்ஸ்தான் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று ரூ. 643.84 கோடி மோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள பிற பழம்பெரும் மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியாவிற்கு ரூ.29 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
கடந்த மூன்றாண்டுகளில் சொம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மூலமாக தமிழ் வளர்ச்சிக்கென்று ரூ. 22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான நிதி ஒதுக்கீடு, முந்தைய ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிட 56% குறைக்கப்பட்டது.
கடந்த மூண்றாண்டுகளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் வளர்ச்சிக்கு தலா மூன்று கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மலையாளம் மற்றும் ஒடியா மொழி வளர்ச்சிக்காக ஒற்றை ரூபாய் கூட ஒன்றிய அரசால் ஒதுக்கப்படவில்லை.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டோரின் எண்ணிக்கை 24, 821 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 0.00198% ஆகும். ஒரு சதவீதம் கூட இல்லாத ‘சமஸ்கிருதத்தினருக்காக’, பிற மொழி பேசும் மக்களின் வரிப்பணம் ரூ. 643 கோடி செலவிடப்படுகிறது. சமஸ்கிருத உயர்சாதியினரின் ஆரிய- இந்துத்துவ பண்பாட்டை பல்வேறு தேசிய இன மக்கள் மீது திணிக்கும் மோடி அரசின் இப்போக்கானது, இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மைக்கும், ஒன்றிய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் விரோதமானதாகும்.
சமஸ்கிருதமானது மக்களின் வளர்ச்சிக்கான அறிவுசார் பங்களிப்பு இல்லாததால் வழக்கொழிந்து போன மொழியாகும். வழக்கொழிந்த போன சமஸ்கிருதத்திற்கு பொருளாதார, கால, மனித வளத்தை செலவழிப்பதன் மூலம், நவீன தொழில்நுட்ப யுகத்திலும் தன்னை தகவமைத்துக் கொண்டு மக்களின் வளர்ச்சியில் பங்களிக்கும் தமிழ் போன்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.