கவிஞர் இன்குலாப்

மக்கள் கவிஞர் இன்குலாப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த போது!

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

”நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்”

என்று பாடிய இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ.சாகுல்அமீது கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில்  கவிஞர் மீரா அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.

மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்த போது, மதுரை தியாகராசர் கல்லூரியில் உடன் படித்த மாணவர்களான கவிஞர் நா.காமராசன், கா.காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல்துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.

கீழ்வெண்மணியின் தாக்கம்

திமுக ஆதராவளாராக இருந்த இன்குலாப் கீழ்வெண்மணியில் 1968-ல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு, மார்க்சிய  இயக்கங்களை நோக்கி நகர்ந்தார். கம்யூனிஸ்ட் இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும், அதன் பின்னர் இடதுசாரி அடிப்படையில் இயங்கிய தமிழ்த்தேசிய விடுதலைக்கான ஆதரவாளராகவும் ஈடுபட்டு இயங்கினார்.

கீழ்வெண்மனி படுகொலைகளுக்கு நீதிகேட்டு இவர் எழுதிய ”மனுசங்கடா! நாங்க மனுசங்கடா” பாடல் இன்றுவரை போராட்டகளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தன் கவிதைகளைப் பற்றி இன்குலாப்

” எழுதியதெல்லாம்
மொழி பெயர்ப்புத்தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச் சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று மொழி பெயர்த்திருக்கின்றேன்“  

என்று எழுதியிருப்பார்.

மானுட விடுதலை என்பது ஒடுக்கப்பட்டோர் விடுதலை தான்  என்று சொல்லும் இன்குலாப், ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற கவிதைக்கான அறிமுகத்தில் இன்குலாப் இப்படித்தான் விளக்கியுள்ளார்.

”உழைப்பவர் மேனியை உயிரோடு கொளுத்தி
வெந்த சாம்பலைப் பூசிய தெய்வங்கள்
சாம்பல் மேட்டில் சாம்பலாய்க் குவிய…
ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம்
யாக குண்டம் போல எரிகிறது.”

என்று முடியும் அவர் கவிதை.

இந்தியாவின் ஆளும் வர்க்கமாக எப்போழுதுமே பார்ப்பனியம் இருந்ததை அடையாளப்படுத்தி எழுதிய கவிதை.

”மூவேந்தர்களின் கொடிகள் தொடங்கி
மூவண்ணக் கொடியின்
இன்று வரைக்கும்
எல்லாக் கொடிகளும் ஏற்றப்படுவது
எந்த நூலால்?
பூணூலால்.”

கவிஞர் இன்குலாப்

பெண்ணியக் கருத்துகள்

பெண்ணியக் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்ற கவிஞரின் கவிதைகளில் பெண்களுக்கெதிரான அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான குரல் ஓங்கி ஒலித்தது.

“கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும்—நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ?
கிளைகளும் பச்சை .இலைவிரிக்கும்—-ஓ
கிளிகளே! உங்களின் சிறகெங்கே?”என்று கேட்டு
“இறக்கை வெட்டிய கிளிகளாய்—நீங்கள்
எத்தனை காலம்இக் கூண்டுக்குள்ளே.
பறக்கத் துடிக்கும் பறவைகளே—இங்குப்
பரந்து கிடக்குது பிரபஞ்சம்”  

என்று எழுதியதோடு,

தாமரைப் பூவில் சரசுவதியாய்—பெண்ணை
தாங்கள் மதிப்பதாய்க் கதைஅளப்பார்.
தாமரைப் பூவினில் வாழாத—சேரிச்
சரசுகள் எத்தனைபேர் படித்தார்?

என்றும் கேள்வி கேட்பார்.

முதன்முதலில் அவசர நிலையின் போது  விடியல் என்ற தொடர் நாடகத்தை எழுதியுள்ளார். பின்னர் துடி, மீட்சி, குரல்கள், ஒளவை, மணிமேகலை, குறிஞ்சிப்பாட்டு ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இன்குலாப்பும்

தமிழ்கத்தில் இடதுசாரி இயக்கங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் ஆதரிக்க மறுத்த போது தேசிய இன விடுதலையின் மீது விருப்பம் கொண்ட பாவலர் விடுதலைப் போராட்டத்தையும், புலிகளையும் ஆதரித்து கவிதைகள் எழுதினார். அது மட்டுமல்ல அதை ஆதரிக்காத இடதுசாரிகளை கேள்வி கேட்டும் அவர் பேனா எழுதியது.

”சிறகு முளைத்து விதையொன்று அலையும்…முளைக்க ஒருபிடி மண்தேடி” என்று  எழுதினார்.

பிரபாகரன் அவர்களை சந்தித்த போது

தமிழீழம் சென்று 2002-ம் ஆண்டு பிரபாகரனை சந்தித்தவர் நேர்காணல் ஒன்றில், தான் சந்தித்த தலைவர்களில் சிறந்த தலைவர் என்று கூறினார்.

”சென்ற நூற்றாண்டின் நடுவண் ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். அது யுகப் புரட்சியாளர்களை பெற்றுத்தந்த நூற்றாண்டு. அவர்களில் யாரையும் நான் கண்டிலேன்.

இந்த நூற்றாண்டின் இளங்காலை ஆண்டுகளில் நிற்கிறோம். இதன் 2002-ம் ஆண்டு எனக்கு பெருமைக்குரிய தலைவர் ஒருவரை சந்தித்த ஆண்டாக இருந்தது. அவரை சுற்றி ஒளிவட்டம் எதுவும் சுழலவில்லை. அப்படி ஒன்றை சுழல விடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

சந்தித்து நாங்கள் கைகுலுக்கிய போது, ”வருவேன் வன்னியே” என்ற என் கவிதை வரியைச் சொன்னார். தலைவருடன் தனித்தனியாக நாங்கள் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். அவரும் நானும் நிற்கும்போது ஒளிப்படக்கருவி பளிச்சிடும் முன்பு அவர் கூறினார் “வாழும் பேனையும்”.

அதன்பின் நாங்கள் கலந்துரையாடினோம் பல்வேறு செய்திகள் பரிமாறப்பட்டன.

தமிழீழத்தில் இஸ்லாமிய சிக்கல் குறித்து

நான் சில இக்கட்டான கேள்விகளை முன்வைத்தேன். ”இஸ்லாமிய சமூகத்தினரின் மறுவாழ்வுக்கு தங்கள் தரப்பிலான முயற்சிகள் என்ன?” என்று கேட்டேன். அவர் முகத்தில் வருத்தம் இழையோடியது. ”என்னை சந்திக்க வருகிறவர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்கிறார்கள். ஆமாம் எனக்கு புரிகிறது. எங்கள் தரப்பில் நாங்கள் இஸ்லாமியர்களை மீள அழைக்கிறோம். அதை அறிவித்து விட்டோம். அவர்களுடைய புனர்வாழ்வுக்கு செயல்பட வேண்டியது அமைச்சர் ரவூப். அவரை அணுகி செய்யவேண்டியதை வற்புறுத்திச் சொல்லுங்கள்” என்று தனது கருத்துக்களை சிறிதும் பதட்டம் இன்றி முன்வைத்தார்.

எனது கேள்விகளின் அந்த கணங்கள் அவரை எப்படி வருத்தியிருக்கும் என்பதை அறிவேன். அந்த அதில் இஸ்லாமியர் வெளியேற்றத்திற்கு புலிகள் தெரிவித்த வருத்தத்தின் நினைவுகளும் உண்டு. புலிகளை கண்டிக்கும் விமர்சகர்கள், இஸ்லாமியர் தரப்பில் புலிகளுக்கு எதிராக என்னவெல்லாம் செய்யப்பட்டன என்பது குறித்து வாய் மூடி இருப்பதை நானும் அறிவேன். இஸ்லாமிய தலைமைகள் மன உறுத்தல் எதுவுமின்றி இந்த நிகழ்ச்சிகளுக்கு புலிகளை மட்டுமே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதும் அந்த கணங்களில் எனக்கு வருத்தமாக இருந்தது.

முதன்மையான தலைவராக பிரபாகரன் அவர்களை கருதுகிறேன்

”பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒருவர் தோழமையும் மனிதநேயமும் கனிய ஒரு மனிதராக இயங்கிதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். பட்டிமன்ற அரசியல் தலைவர்கள் மட்டுமே ஆராதிக்கப்படும் ஒரு மண்ணிலிருந்து போய், செயலை விட சிறந்த சொல் வேறு இல்லை, சொல்லுக்கும் வாழ்வுக்கும் வேறுபாடு இல்லை என்று வாழ்ந்த அந்தத் தலைவரை சந்தித்து அவரை முதன்மையான தலைவராக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கலைமாமணி விருதை திருப்பிக் கொடுத்தார்

இனப்படுகொலை நடந்து கொண் டிருந்தபோது அதைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கலைமாமணி விருதையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தார்.

நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை
வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்
கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்
பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்
வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.
கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?
ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?
எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?
கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!
உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்மௌன மொழிகளில்!;

அப்போது நடைபெற்ற செம்மொழி மாநாடு குறித்து பின்வருமாறு எழுதினார்.

குருதி சொட்டும் செம்மொழி
அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?
இவை
விடை வேண்டும் கேள்விகள்
தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்
விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்
அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்
விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….  

என்று எழுதினார்.

கவிஞர், பேராசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கியவர் என்றாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக்குரலாகக் காலமெல்லாம் ஒலித்துக் கொண்டேயிருந்தவர். 1.12.2016 அன்று இறப்பின் மடியில் துயில் கொண்ட பொழுதுவரை அவர் ஒரு போராட்டக்காரராகவே வாழ்ந்திருந்தார். அவரது மரணத்திற்கு பிறகு, அவருக்கு வழங்கபட்ட சாகித்திய அகாதமி விருதினை அவரது குடும்பத்தினர் திருப்பி அனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *