2020 செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து விவசாயிகள் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தனர். கடந்த 26/11/2020 அன்று டெல்லியை நோக்கி போராட்ட அணிவகுப்பைத் தொடங்கி இன்றோடு 5 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்றும் வேகம் குறையாமல் டெல்லி மாநில எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
முன்னர் டெல்லி காவல்துறை மாநிலத்திற்குள் செல்ல அனுமதித்து புராரி மைதானத்தில் இடம் ஒதுக்கிய நிலையில், விவசாயிகள் அங்கே செல்ல மறுத்து தொடர்ந்து மாநில எல்லைகளிலே போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளே பல நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களுடன் வந்த சூழலில் மேலும் தேவையான உதவிகளை பல்வேறு குருத்வாரா அமைப்புகள் செய்து வருகின்றனர்.
மேலும் பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்திற்கு உத்வேகம் கொடுத்து வருகின்றனர். நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
நேற்று வரை நடந்தவை
- “நாங்கள் ஒருபோதும் புராரி மைதானத்திற்கு செல்லப் போவதில்லை. இது மைதானம் அல்ல. இது ஒரு திறந்தவெளி சிறை” என்று பாரதிய கிசான் யூனியனின் மாநிலத் தலைவர் சுர்ஜீத் சிங் புல் தெரிவித்தார்.
- “மூன்று கறுப்புச் சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் மின்சார மசோதாவை திரும்பப் பெறுதல் ஆகிய முக்கிய கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு மாறாக, விவசாயிகள் எங்கு முகாமிட வேண்டும் என்பதற்கான விவாதத்தை அரசாங்கம் செய்து வருகிறது” என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷின் அறிக்கை தெரிவித்துள்ளது.
- பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாய சங்கங்கள் ஞாயிற்றுக்கிழமை(29/11) காலைநேரத்தில் ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் விவசாயிகள் அரசு ஒதுக்கிய இடத்தை மறுத்து சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளிலேயே தங்கி விட முடிவு செய்தனர்.
- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவில் விவசாயிகளை சந்தித்துப் பேசியதாக ‘தி இந்துஸ்தான் டைம்ஸ் ‘ செய்தி வெளியிட்டது. சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
- “இந்த மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமல்ல உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் சகோதரர்களும் டெல்லியின் எல்லைகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என கிசான் கிரந்திகாரி சங்க தலைவர் தர்ஷன் பால் ‘ தி இந்து’ செய்தியில் தெரிவித்தார்
- ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் உற்சாகமூட்டும் விதமாக பாடல்களைப் பாடி வருவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.
- போராட்டம் ஒரு பக்கம் தொடர இன்னொருபுறம் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கொரோனா சோதனை மற்றும் காயம்படுபவர்களுக்கு மருத்துவ உதவியும் வழங்கப்பட்டு வந்தது.
- டெல்லியில் அரசு ஒதுக்கிய இடத்திற்கு விவசாயிகள் செல்ல மறுத்ததால் டில்லியின் எல்லைகளான சிங்கு மற்றும் திக்ரி ஆகிய இரு எல்லை நுழைவாயில்களும் மூடப்படுவதாக ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்தது.
- “விவசாயிகளே வாருங்கள்… அணிவகுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்… இது ஒன்றிய அரசுடன் நேரடி மோதலாகும்” மற்றும் “ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மக்களை டிராக்டர்- தள்ளுவண்டிகளில் திரட்டுவோம் … சாவகாசமாக நடந்தால் இலக்கை எட்ட முடியாது” மற்றும் “நம் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தால் வெற்றி அடைவோம்” போன்ற வரிகள் இடம் பெறும் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
- “விவசாயிகளின் நலன்களுக்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணியுடனான தனது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சி எச்சரிக்கை விட்டு இருந்தது.
- தற்போது வரை பஞ்சாபைச் சேர்ந்த 30 விவசாய சங்கங்களுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், போராட்டத்திற்கு வந்து இருக்கும் பிற உழவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் ‘ANI’ செய்தியில் தெரிவித்து இருந்தார்.
- “அரசியலமைப்பு சாசனம் மக்களால் மக்களுக்கான ஆட்சியை நிறுவுகிறது, ஆனால் தற்போது அது கார்ப்பரேட்டுகளுக்கான கார்ப்பரேட்டுகளின் ஆட்சியாகிவிட்டது,” என ஹரியானா மாநிலம் பாரதிய கிசான் சங்கத்தை சேர்ந்த குர்னம் சிங் தெரிவித்தார்.
- விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஆறு வழிச்சாலையை அகலப்படுத்தும் திட்டத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாய சட்டம் விவசாயிகளுக்கு சாதகமாக பல திட்டத்தை உள்ளடக்கி அமைக்கபட்டுள்ளதாக தெரிவித்து உரையாற்றியுள்ளார்.
- கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய விடுதலை) மற்றும் அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முதலிய ஐந்து கட்சிகளும் இணைந்து விவசாயி போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி ஒன்றாக அறிக்கை வெளியிட்டனர்.