கொரானா தடுப்பூசி போடப்பட்ட வயதான 23 பேர் இறந்துவிட்டதாக நார்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்களுக்கு போட்டு வருகின்றன . இந்த நிலையில் நார்வே நாட்டில் ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) என்ற தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே 23 பேர் இறந்துள்ளனர் அவர்கள் 80 வயதுக்கு மேற்பட்ட பலவீனமான உடலைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து நார்வே மருத்துவர்கள் ஆராய தொடங்கியுள்ளதாக தி ப்ளூம்பெர்க் (the bloomberg)செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் தடுப்பூசிக்கும் இந்த மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக இன்னும் நிரூபணமாகவில்லை என்றாலும், இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிராக நார்வே பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நார்வேயில் டிசம்பர் மாத இறுதிவரை 30,000 பேருக்கு ஃபைசர் அல்லது மாடர்னா ( Pfizer or Moderna ) தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டது. அதில் 23 முதியவர்கள் இறந்தவுடன் யார் யார்கெல்லாம் தடுப்பூசி போட வேண்டாம் என்பது குறித்து மருத்துவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 21 பெண்களுக்கும் மற்றும் எட்டு ஆண்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக நார்வே மருந்து நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இறந்தவர்களைத் தவிர, ஒன்பது பேருக்கு கடுமையான பக்க விளைவுகளும், ஏழுபேருக்கு குறைவான பக்கவிளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது நோயாளிகள் ஒவ்வாமை மற்றும் கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்களுக்கு தடுப்பூசி பெரிதும் பயன்தராது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஐரோப்பா நாடுகளில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி விநியோகமானது தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.