பொங்கல்

பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறு

பொங்கல் வாழ்த்து
வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்!
எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம்
ஈங்கிவை தாக்கிடினும்,
ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட
பொங்கற் புதுநாள் அன்று மட்டும்
புதுப்புன லாடி புத்தாடை அணிந்து,
பூரிப் புடனே விழா நடத் திடுவோம்
என்னையோ வெனில்,
உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு
உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே
விழைவு மிகக் கொண்டோம் அதனால்!
காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?
உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.
உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அதனால்!
ஆவினம் போற்றினோம். அஃது எதனால்?
பரிந்து தீஞ்சுவைப் பால் அளிப் பதனால்!
எனவே இவ்விழா,
நன்றி கூறிடும் நல்விழா வாகும்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்றுநம் வள்ளுவர் எடுத்து உரைத்திட்டார்.
குறள் நெறி குவலயம் பரவிடல் வேண்டும்!
குறள்வழி நடந்துநாம் காட்டிடல் வேண்டும்!
குறள்நமை இருட்குகை காடுபோ என்று
கூறிட வில்லை! மாண்பு பெறுதற்குக்
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!”
என்று கூறிடுது கான்!
காடும் – கழனியும் ஏரும் – எருதும்
காட்டிடும் பாடம் படிப்போம்.
களை முளைத் திட்டால் எடுத்திடும்
உழவு முறையின் கருத்தும உணர்வோம்
உணர்ந்து,
நல்லன கொண்டு அல்லன தள்ளி,
நமதுயர் நாடு நானிலம் மெச்சிடும்
நன்னிலை காணநாளும் உழைத்திடு வோமே!
உழைப்பால் ஏற்படுடம் களைப்புப்போக
விழாவும் ஓர்வழி, ஆமாம்!
விழா தரும் மகிழ்ச்சியும், மிகுதியும் பெற்றிடல்
உழைப்பின் உயர்வு பெறத்தான்!
“நேற்று நேர்த்திமிகு ஒளி அளித்தேன் நானே!
இன்றுஓய்வு கொள்ளப் போகிறேன்” என்று
கூறிடுவ தில்லை உதயசூரியன் தானும்!
நாமும் அதுபோல,
உழைத்தபடி இருந்திடுபோம் உலகு உய்ந்திடவே!
சிறந்த செயல் இது போன்று
செய்து வரும்செம் மல்களை
வாழ்த்துகின்றேன்; வாழ்த்துகின்றேன்

உள்ள நிறை வோடு!
அண்ணன்,
அண்ணாதுரை
(திராவிடன் – 1963)

பாஜகவினர் கொண்டாடும் பஞ்சு பொங்கல்

மகா சங்கராந்தி வாழ்த்து என்று பாரதிய ஜனதா கட்சி சுவரொட்டி ஒட்டி இருக்கிறது. நம்ம வீட்டு பொங்கல் என்று பஞ்சு பொங்கலை குஷ்புவும், எல்.முருகனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், தமிழர் என்று சொன்னாலே ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் இன்று அரசியல் காரணங்களுக்காக தமிழர் திருநாளைக் கொண்டாடத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த பொங்கல் ஒரு தேசிய இன திருவிழாவாக மாற்றப்பட்டு முன்னிறுத்தப்பட்டது திராவிட இயக்கத்தால் என்பது மறுக்க முடியாத உண்மை.

பார்ப்பனரல்லாதோருக்கான விழாவாக பொங்கலை முன்னிறுத்திய பெரியார்

பொங்கல் குறித்து பேசுகிற தந்தை பெரியார் தமிழனுக்கு என்று பார்ப்பனரல்லாதாருக்கு இன்று இருக்கின்ற ஒரே திருவிழா இந்த பொங்கல் திருவிழா என்று கூறினார். அறிவியலுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளைக் கொண்ட கதைகள் பின்னணியாக இல்லாத ஒரே திருநாளாக பொங்கல் இருக்கிறது என்பதை பெரியார் சுட்டிக்காட்டுகிறார்.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை அவ்வாண்டு முதல் தடவையாக சமைப்பதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்றும், இது தமிழனுக்கே உரியதாகும் என்றும் பொங்களின் பொருள் குறித்து விளக்குகிறார் தந்தை பெரியார்.

திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொங்கலைக் கொண்டாட அழைப்பு விடுத்தார்

இங்கு கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனர்கள் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான் முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் நன்றி பெருக்கிற்கு உதாரணமாகத் திகழுகின்ற திருவிழா என்பதனை உள்வாங்கி அதில் செய்யப்பட்டிருக்கும் புரட்டுகளை மறுத்து தமிழர்கள் திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் அழைப்பு விடுத்தார் பெரியார்.

பொங்கலை சங்கராந்தியாக்கும் சதி

இதை பார்ப்பனர்கள் தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனைக் கதைகளை புகுத்தி, ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள் என்று பொங்கல் விழாவில் இடையில் செய்யப்பட்டிருக்கும் சதிகளையும் அம்பலப்படுத்தினார் பெரியார். பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கல்வி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு, ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள் அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

நம்மை இழிவுபடுத்தாத மதச்சார்பற்ற பொங்கல்

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்ற வகைப்பாடுகள். ”இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய (பார்ப்பனரல்லாதார்) பண்டிகையாகும். எப்படியெனில் பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும். இதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள். பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழா கொண்டாடுவது அவசியமாகும்” என்று பெரியார் கூறினார்.

மற்ற பண்டிகைகள் அனைத்தும் நம்மை இழிவுபடுத்துபதை என்பதையும், பொங்கல் மதச்சார்பற்ற பண்டிகை என்பதையும் தெளிவாகக் கூறிவந்தார். “மதச்சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மதம் சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார் பெரியார்.

பொங்கலை இனத்தின் திருவிழாவாகக் கொண்டாடிய திராவிட இயக்கத்தினர்

பொங்கல் திருவிழாவை ஓவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதை ஒரு வழக்கமாகவே திராவிடர் கழகம் கொண்டுள்ளது. பெரியார் மட்டுமல்ல அவர் வழிவந்த திராவிட இயக்கத்தினர் பொங்கலை இனத்தின் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அமைக்கப்பட்ட பதிப்பகங்களில் புத்தாடை உடுத்தி தைத்திருநாளில் கட்சிக் கொடி ஏற்றிக் கொண்டாடினர்.

கலை நிகழ்ச்சிகள் நடத்தி பண்பாட்டுப் பேருரைகள் நிகழ்த்தி பல்வேறு போட்டிகளும் நடத்தி பொங்கல் பண்டிகையை தமிழ் இனத்தின் திருநாளாய் மாற்றினார்கள். மகா சங்கராந்தி, சூரிய நமஸ்காரம் என்று அறுவடைத் திருநாளை திசைதிருப்ப முயன்றவர்கள் அந்நியப்பட்டுப் போன இடம் இதுதான். கட்சியினரின் கடமைகளில் ஒன்றாக பொங்கலை ஊர்கூடி கொடியேற்றிக் கொண்டாட வேண்டுமென்று நாவலர் நெடுஞ்செழியன் அறிக்கைவிட்டு கேட்டுக்கொண்டார்.

மற்ற பண்டிகைகள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்துவும், சுரண்டுவதற்கும் கொண்டாடப்பட்டது என்று கூறி அண்ணா பொங்கலை “மே தின”த்திற்கே முன்னோடி என்றார். மற்ற விழாக்களைப் போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே! ஈசன் பாதம் சேர்ந்திடுவாய்! என்ற வாழ்க்கை நிலையாமை பற்றிய எண்ணத்தின் மீது எழுந்ததன்று. வாழ்க்கைப் பெரும் பொறுப்பு, தூய கடமை என்று கொண்டு அதில் சுவையை துய்ப்பதுடன், பயன்பெறும் முறையும், கண்டுபெற்ற பயன் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகை கண்டு அதற்கேற்ப நாம் நடந்து செல்ல வேண்டிய நன்னெறியாகும். எனவேதான் இந்த விழாவினிலே ஏற்புடைய கருத்துகட்கு நெஞ்சம் இடமளித்திடும் பாங்கு காண்கிறோம். வாழ்த்துகிறோம்! வாழ்த்து பெற்று மகிழ்கிறோம் என்றார்.

அண்ணாவின் கடைசி கடிதம்

அண்ணா தன் தம்பிகளுக்கு எழுதிய கடைசி கடிதம் 1969-ம் ஆண்டு எழுதிய பொங்கல் வாழ்த்து கடிதம் தான். அதில் மற்ற பண்டிகைகள் எல்லாம் போகும் இடத்தைப் பற்றியது, பொங்கல் திருநாள் மட்டும் தான் வாழும் நிலத்தைப் பற்றியது என்று எழுதிய அண்ணா, மேலும் துவக்கத்திலேயே நாம் இதைக் கூறிய பொழுது நம்மை ஏளனம் செய்தவர்கள் இன்று இந்த கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று எழுதியிருப்பார். தமிழர் வரலாற்றை இலக்கியங்களை பெருமைகளைப் போற்றிப் புகழ, எல்லோருக்கும் எடுத்துச்சொல்ல ஏற்ற நாள் இந்த தமிழர் திருநாள். ஆதலால் ஒவ்வொருவரும் இதனை பல பேரிடம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பார்.

உலகத்தில் பொங்கல் போல் வேறு எந்த விழாவும் கொண்டாடப்படவில்லை என்று கூறியவர், தான் பயணித்த நாடுகளில் எல்லாம் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கேளிக்கைளிலும் சாலைகளில் வேகமெடுத்து சென்று விபத்துக்களும் கொண்டதாக இருப்பதாகக் கூறியவர், ஆரவாரங்கள் ஏதுமற்று அகமகிழ் திருநாளாக நமது தமிழர் திருநாள் இருக்கிறது என்று கூறினார்.

பொங்கலன்று பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடு

அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற 1967-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின், காத்திருந்து 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தைத்திருநாளைத் தேர்ந்தெடுத்து அன்னைக்கு பெயர் வைத்த மகனாகத் திகழந்தார் அண்ணா.

தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு

குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலில் – ஜாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது. “பிரபவ” ஆண்டில் தொடங்கி “அட்சய” ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்!

கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்” என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுகொள்ள முடியாது என்று திராவிட இயக்கத்தவர்கள் கூறினார்கள்.

1921-ம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். திரு.வி.க, கா.சு.பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் பல பேரறிஞர்கள் கலந்துகொண்டனர்.

1939-ம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க., மறைமலை அடிகளார், உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

மறைமலையடிகள் முதல் பாரதிதாசன் வரை பல்வேறு தமிழ் அறிஞர்கள் கூடி ஆய்வுகளின் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்றும், தை ஒன்றே தமிழருக்கு புத்தாண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை, பின்பு வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சட்டமாக இயற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

சைவ ஞானியான மறைமலையடிகள் என்ற தமிழ்ப் புலவன் தலைமை தாங்கி நிறைவேற்றிய தமிழ்ப்புத்தாண்டு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது இந்துக்களுக்கு எதிரானது என்று கதறிய இந்துத்துவ வலதுசாரிகள் இன்று ’நம் வீட்டு பொங்கல்’ என்று நம் கலாச்சாரத்தை பண்பாட்டை திருடுவதற்கு வந்திருக்கிறார்கள்.

பேராசிரியர் தொ.பரமசிவம் பொங்கல் குறித்து எழுதுகிற பொழுது, அது தமிழ்த்தேசிய இன திருவிழா என்று கூறுவார். அந்த தமிழ்த்தேசிய இன திருவிழாவை தமிழர், தமிழ்நாடு என்ற ஒர்மையின் கீழ் அணி திரட்டியதில், தமிழர் திருநாளை தமிழர்கள் வாழும் இடமெல்லாம் தமிழனின் தனிப்பெரும் திருவிழாவாக முன்நிறுத்தியதும் திராவிட இயக்கம் என்பது வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *