உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.
கோவிட் 19 என்ற நோய் உருவாகி ஒரு வருடத்திற்குள்ளான நிலையில் அதற்கு தடுப்பூசி தயார் என்று மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறார்கள் என்றால் அதன் பாதுகாப்புத் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற கேள்விதான் இப்போது முக்கியமாக எழுப்பப்பட்டு வருகிறது.
எந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு வருடத்திற்குள்ளாக தடுப்பூசியின் வேலை செய்யும் திறன், செலுத்திக்கொண்டோருக்கு ஏற்படும் எதிர்விளைவுகள் போன்றவற்றை உறுதி செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இன்றளவும் கூட கொரோனா கிருமி உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது என்ற சூழலில் எப்படி இந்த தடுப்பூசி நோய்த் தொற்றை தடுக்கும் என்ற கேள்வி எழுகிறது. அவசர அவசரமாக மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியிருப்பது மக்கள் மீதான அக்கறையா அல்லது லாபநோக்கமா?
தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர எவ்வளவு காலம் எடுக்கும்
நோய்க்கு காரணமான கிருமியை வலுவிழக்கச் செய்வதன் மூலமோ அல்லது கொல்வதன் மூலமோ அல்லது அந்த குறிப்பிட்ட கிருமியின் ஒரு பகுதியையோ மூலப்பொருளாகவும் அதனை பாதுகாக்க Preservatives, Adjuvants, Stabilizers போன்றவைகள் சேர்த்து தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
நோய்த் தொற்றை ஏற்படுத்தும் கிருமி குறித்தான ஆய்வு(Exploratory Stage)
தடுப்பூசி உருவாக்கத்தின் தொடக்க கட்டமாக தொடர்புடைய கிருமிகள் குறித்தான ஆய்வும் அது எப்படி நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும், பின்பு அந்த நோயைத் தடுக்கக்கூடிய ஆண்டிஜன் எனப்படுகிற கிருமிகளையோ அல்லது அதன் பகுதியோ கண்டறியப்படுகிறது.
ஆய்வுக்கூட மற்றும் விலங்குகள் மீதான பரிசோதனை(Pre Clinical Stage)
நோய் தொற்றை ஏற்படுத்துகிற கிருமி குறித்தான ஆய்வை தொடர்ந்து எலி,குரங்கு உள்ளிட்ட விலங்குகள் மீது செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. விலங்குகள் மீதான இந்த பரிசோதனையில் இந்த தடுப்பூசி நோய் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, விலங்கின் உடல் எதிர்ப்பாற்றலை தூண்டுகிறதா என்பதையும் மேலும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா,பாதுகாப்பானதா என்பதையும் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட பிறகு மனிதர்கள் மீதான பரிசோதனை நடத்தப்படுகிறது.
மனிதர்கள் மீதான மூன்று கட்ட பரிசோதனை
முதல் கட்ட பரிசோதனையில் 20 முதல் 100 நபர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கணக்கானோருக்கும், மூன்றாம் கட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு பரிசோதனைக் கட்டத்திலும் நோய்த்தொற்றை தடுக்கும் தன்மை, செலுத்திக் கொண்டோரின் உடல்நலம், பக்கவிளைவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அடுத்தகட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வுக்கூட ஆய்வுகள் தொடங்கி இத்தனை பரிசோதனைக் கட்டங்களும் வெற்றிகரமாக முடிந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 10 வருடங்கள் ஆகின்றன. விதிவிலக்காக வரலாற்றில் ஓரிரு தடுப்பூசி மட்டுமே 5 வருடங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இப்படி தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளினாலும் கூட பக்க விளைவுகள் ஏற்படத்தான் செய்கிறது.
கொரோனா தடுப்பூசி குறித்து மருத்துவர் வினீதா பால் (Dr. Vineeta Bal, immunologist and Faculty, Indian Institute of Science Education and Research (IISER), Pune, and former scientist, National Institute of Immunology, New Delhi) இவ்வாறு கூறுகிறார்.
”தடுப்பூசியின் பாதுகாப்பு செயல்திறன் அறியாமல் பயன்படுத்துவது விதிமீறல். மேலும் உருமாற்றம் அடைந்துவிட்டது என்ற காரணத்தை சொல்லி அவசர அவசரமாக அனுமதி அளிப்பது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. Covaxin-ஐப் பொறுத்தவரையில் ஏற்கனவே இருக்கும் கொரோனாவை தடுக்கக்கூடிய சோதனைக் கட்டத்தைக் கூட முடிக்காத நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா கிருமியை தடுக்கும் என நிறுவுவதற்கும் முறையான ஆய்வுகள் இல்லை. மருந்துகள் தடுப்பூசிகள் பயன்படுத்துவதில் விதிமுறைகள் உள்ளது. அது கடைபிடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இத்தனை ஆண்டுகளாக நாகரிகமடைந்த சமூகமாக வளர்ந்த நிலையை இழப்போம். தடுப்பூசியில் செயல்திறன், பாதுகாப்புத் தன்மையைப் பற்றி ஆய்வு புள்ளி விவரங்கள் தெரியாமல் ஆரோக்கியமான மனிதர்களுக்கு செலுத்துவது விதிமீறல்.
தடுப்பூசி வரலாற்றில் ஒவ்வொரு தடுப்பூசியும் பரிசோதனைக் கட்டங்கள் முடித்து பயன்பாட்டிற்கு வருவதற்கு 5 முதல் 20 வருடங்கள் எடுத்திருக்கிறது. “
தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகும் அதன் பக்க விளைவுகள் கண்காணிக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமெரிக்க அரசு வழிமுறைகள் வகுத்துள்ளது.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மையத்தின் தகவலின் படி(CDC) 2006 முதல் 2018 வரை 3.7 பில்லியன் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக 7589 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 5317 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 1988 முதல் 22919 வழக்குகள் பாதிக்கப்பட்டோரால் தொடரப்பட்டுள்ளது. இதில் 77754 நபர்களின் பக்கவிளைவு தொடர்பான வழக்குகள் ஏற்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற பாதிக்கப்படுபவர்கள் இழப்பீடுகள் பெற இந்தியாவில் தெளிவான வழிமுறைகள் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு விவகாரங்கள்
அமெரிக்காவில் Pfizer தடுப்பூசிக்கு டிசம்பர் 11 அன்று அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து டிச 23 வரை 1,893,360 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதில் 4400 எதிர் விளைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 175 பேருக்கு anaphylaxis உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பின்லாந்திலும்-Pfizer தடுப்பூசி எடுத்துகொண்டோருக்கு எதிர்விளைவுகள் ஏற்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்விளைவுகளை மறுக்க முடியாது, எனவே மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தடுப்பூசி சோதனையில் ஈடுபடுத்திக்கொண்ட தன்னார்வலர் ஒருவர், தான் தீவிர பக்கவிளைவுகளால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இழப்பீடு கோரியிருந்தார். ஆனால் இதை மறுத்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், பாதிக்கப்பட்டவர் பொய் சொல்கிறார் எனவும் பொய் குற்றச்சாட்டிற்காக அவரிடமிருந்து 100 கோடி இழப்பீடு கோர உள்ளதாகவும் மிரட்டியது.
போபாலில் பாரத் பயோடெக் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் தடுப்பூசி போட்டுக்கொண்டதிலிருந்து ஒன்பதாவது நாள் இறந்து மரணமடைந்தார். ஆனால் அந்த தடுப்பூசி நிறுவனம் தடுப்பூசிக்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பில்லை என்று மறுத்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவர் ஒருவர் இரண்டு வாரத்தில் மரணமடைந்துள்ளார். pfizer நிறுவனம் தடுப்பூசிக்கும் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று மறுத்துள்ளது.
போபாலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக செலுத்தப்பட்டது என்பதையும், அது குறித்தான தகவல்கள் கொடுத்து ஒப்புதல்(Consent Forms) பெறப்படவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான கல்வியறிவு பெறாதவர்களிடம் இந்த தடுப்பூசி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
போர்ச்சுகல்-கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார துறை ஊழியர் இரண்டு நாட்களில் மரணமடைந்தார். இப்படி நீண்டுக்கெண்டே செல்கிறது கொரோனா தடுப்பூசியின் எதிர்விளைவுகள். இதிலிருந்து முறையாக ஆயுகள் நடத்தாமல் பல கட்ட பரிசோதனைகள் செய்யப்படாமல் பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகளை இந்திய அரசு கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். ஆனால் இந்திய அரசோ அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி என்ற பெயரில் மக்களை சோதனை எலிகளாக மாற்றுகிறது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளாப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த பாதிப்புகள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட குறுகிய நாட்களில் ஏற்பட்டது. ஆனால் இதன் காரணமாக நீண்டகால பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்ற தகவல்கள் இல்லை.
தடுப்பூசியின் தீவிர விளைவுகளில் ஒன்றான Anaphylaxis
Anaphylaxis என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை. தோலில் ஏற்படும் ஒவ்வாமை, குமட்டல், வாந்தி, மூச்சுத் திணறல், உடல் உதறல் (Symptoms include a skin rash, nausea, vomiting, difficulty breathing and shock) உள்ளிட்ட தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
சனவரி 16 முதல் தடுப்பூசி-தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மறுப்பு
இந்திய அரசு ஜன16ம் தேதியிலிருந்து முதல் கட்டமாக 30 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்குகிறது. இதில் களத்தில் முதல் நிலையில் பணி புரியும் சுகாதார துறையைச் சேர்ந்த பணியாளர்கள் 3 கோடி மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்திய மருத்துவ கழகமும் (IMA) அதன் உறுப்பினர்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது . ஆனால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும், தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கமும் தடுப்பூசி மீதான பாதுகாப்பு குறித்து ஐயங்களை எழுப்பி தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்துள்ளனர் .
சட்டப் பாதுகாப்பு கோரும் தடுப்பூசி நிறுவனங்கள்
தடுப்பூசிக்குப் பிறகான பக்கவிளைவுகள் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசு சட்டப் பாதுகப்பு வழங்க வேண்டும் என்று சீரம் நிருவனம் தெறிவித்திருக்கிறது.மேலும் இழப்பீடுகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தின் படி தயாரிப்பு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும். சட்ட வல்லுனர்களின் கருத்துப்படி தடுப்பூசி காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்காக இழப்பீடு பெரும் வழிமுறைகள் எளிதான ஒன்று அல்ல. நீதிமன்றத்தில் சென்று நிரூபித்து இழப்பீடு பெறுவதென்பது பெரும் செலவு ஏற்படுத்தும் நடைமுறையாகவே உள்ளது.சாமனிய மக்களுக்கு சாத்தியமற்றதாகவே உள்ளது. இது குறித்தான தெளிவான வழிமுறைகளை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மேலும் Covisheild தடுப்பூசியைப் பொறுத்தவரையில் தடுப்பூசிக்கான அனுமதியானது Form CT-23 இன் கீழ் வழங்கப்பட்டுள்ளதால் இழப்பீடு பெற முடியாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.