கடந்த 9 மாத காலத்தில் 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் லாக் டவுன் காலம் தொடங்கி இன்று வரை பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளை சந்தித்து வருவதாக எவிடன்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் களஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்தித்த பிரச்சனைகள் சில
சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தப்பட்டது, அரசு விழாவில் கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்டது, ஊராட்சி மன்றத் தலைவரின் நாற்காலியில் அமர விடாமல் தடுக்கப்பட்டது, பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் சென்று தங்கள் பணியை மேற்கொள்ள விடாமல் தடுக்கப்பட்டது, ஊராட்சி மன்றத் தலைவர் தன் பெயரை பெயர்ப்பலகையில் எழுத விடாமல் மிரட்டப்பட்டது. மேலும் இறந்தவர்களை புதைப்பதற்கு குழிகள் வெட்ட வற்புறுத்தப்பட்டது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த 15 சம்பவங்களும் புகார் மற்றும் வழக்குகளாக தொடர்ந்து பதிவு செய்யப்பட்டவை. இதுபோன்ற ஒடுக்குமுறைகள் இன்னும் பல வெளியே தெரியாமல் நடைபெற்று வருகின்றன. இந்த 15 சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் சுதந்திரமாக வெளியில் தான் இருக்கிறார்கள் எனக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார் எவிடன்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கதிர்.
அரசு விரிவான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்
உள்ளாட்சிப் பணிகளில் 26.4% பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளில் பணியாற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் எந்தவித தடையுமின்றி பணியை மேற்கொண்டு வருகிறார்களா என்பதை அரசு முறையான கணக்கெடுப்பு செய்து உறுதி செய்ய வேண்டும்.
“அரசு விரிவான கணக்கெடுப்பு எடுத்தற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என கதிர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற ஒடுக்குமுறைகளைத் தடுக்க குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொண்டார்.
பஞ்சாயத்து தனி தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் துணை ஊராட்சி மன்றத் தலைவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களாகவே நியமிக்குமாறு பஞ்சாயத்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கதிர் கேட்டுக்கொண்டார்.
வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (The scheduled Caste and Scheduled Tribes (Prevention of Atrocities) Amendment Act,2015 ) நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் தலித் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சமூக நீதி, அரசாட்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்தான முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும். மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதற்கு மாவட்ட ஆட்சியரே நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கொல்லப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள்
1996-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சாதிய வன்முறையில் ஆறு தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவளவு கிராம பஞ்சாயத்தில் நடந்த தேர்தல் தொடர்பான வன்முறை மிகவும் கோரமான சம்பவம் ஆகும். இந்த சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட ஏழு தலித்துகள் ஆதிக்க சாதியினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சில மாதங்களுக்கு முன்னர் ஆளும் ஆதிமுக அரசால் விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.