ஃபெமினா பத்திரிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பெண்களைப் பற்றி அனைத்தும்’(All About Women) என்கிற தலைப்பில் ஆராய்ச்சி தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் முதல் பதிப்பில் ஆயிரக்கணக்கான உழைக்கும் தாய்மார்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது இரண்டாவது பதிப்பு இந்திய நகர்ப்புற இல்லத்தரசிகளின் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம் தரும் விதமாக வெளிவதுள்ளது.
மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, லக்னோ, பாட்னா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 8 பெருநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத சிறிய நகரங்களில் 1200-க்கும் மேற்பட்ட நகர்ப்புற இல்லத்தரசிகள் மற்றும் 250 கணவர்களிடம் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் முடிவாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் 22 முதல் 45 வயதுக்குட்பட்ட கூட்டு மற்றும் தனி குடித்தனமாக வாழ்பவர்கள் ஆவர். மேலும் 70% வீட்டு இல்லத்தரசிகள் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டபடிப்பை முடித்தவர்கள் ஆவர்.
பாரம்பரிய இல்லத்தரசிகளைப் போல் அல்லாமல் நவீனகால இல்லத்தரசிகள் தங்களை வீட்டு மேலாளர்களாகவே கருதுகிறார்கள். அவர்கள் கார்ப்பரேட் நிறுவன பெண்களைப் போலவே கடின உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள்.
ஆய்வில் வெளிவந்துள்ள சில முக்கிய முடிவுகள்
- 80% பெண்கள் தங்களை அதீத ஆற்றல் படைத்த பெண்களாக(Super Women) தங்களைப் பார்க்கிறார்கள். எந்த ஒரு நன்றிக் கடனும் எதிர்பாராமல் தொடர்ச்சியாக வீட்டுப் பணிகளை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
- 70% பெண்கள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பு கிடைக்கவில்லை என உணர்வதாகவும், மேலும் தாங்கள் செய்யும் வேலைகளுக்கு நிகரான மதிப்பு வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
- 80% தங்கள் தாயை உத்வேகம் ஊட்டுபவராக அடையாளப்படுத்துகிறார்கள். மேலும் பாலிவுட் பிரபலங்களிடமிருந்தும் மற்றும் பிரபல சமையல்காரர்களிடமிருந்தும் உத்வேகம் பெறுகிறார்கள்.
- பெரும்பாலான நகர்ப்புற பெண்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு நிலையான நிதி ஆதாரம் மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான சிறப்பான கல்விப் புலமையை பெற விரும்புகிறார்கள்.
- 70% பேர் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக பணத்தைப் பார்க்கிறார்கள்.
- 64% இல்லத்தரசிகள் வீடு மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக, திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்குப் பிறகு தங்கள் பணிகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.
- மூன்றில் ஒரு இல்லத்தரசி தனக்கு சாதகமான ஒரு வேலைவாய்ப்பைப் பெற விரும்புகிறார்கள்.
- 60% இல்லத்தரசிகள் ஆன்லைன் அல்லாத நேரடி பண பரிவர்த்தனைகளையே (Offline/Cash Transfers) விரும்புகிறார்கள்.
- 50% பேர் அதிகமாக ஆன்லைனில் அத்தியாவசி பொருட்களை வாங்கியுள்ளனர்
- 70% இல்லத்தரசிகள் வரவு செலவு பண விடயம் குறித்து தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் முதலீடுகள் தொடர்பான முடிவுகளை சரிபார்க்க தங்கள் இணையர்கள் மற்றும் நண்பர்களின் உதவியையே நாடுகிறார்கள்.
- திருமணம் பெண்களின் வேலைக்கு தடையாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவே விரும்புவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
இல்லத்தரசிகளின் உலகில் கொரோனாவின் பாதிப்பு
2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்தது. பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிற்குள்ளே இருந்த இல்லத்தரசிகள் சமையல் மற்றும் சமையலறை பொறுப்புகளை மன அழுத்தம் தரும் பணிகளாகக் கருதுகின்றனர். குறிப்பாக மற்ற குடும்ப உறுப்பினர்களின் உதவியின்றி கடுமையான மன அழுத்தம் தருவதாகக் கருதுகின்றனர்.
- 39% பெருநகர அல்லாத சிறிய நகரங்களில் வீட்டுவேலைகளை மேற்கொள்ளும் பெண்கள் சமையல் வேலைகளை மிகவும் மன அழுத்தம் தருவதாக கருதுகின்றனர்.
- 41% பெருநகர பெண்கள் சமையலறை வேலைகள் தவிர பிறவற்றை மிகவும் மன அழுத்தம் தருவதாக கருதுகின்றனர்.
- 33% கணவர்கள், சமையலறை பணிகள் தங்கள் இணையர்களுக்கு மன அழுத்தமாக இருப்பதை அறிந்திருக்கவில்லை.
- இந்த லாக் டவுன் காலத்தில், 51% பெண்கள் புதிய உணவு வகைகளை செய்து பார்க்கத் தொடங்கியுள்ளனர் மற்றும் 41% பெண்கள் ஆன்லைன் வீடியோ பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
- பெருநகரங்களில் 60% இல்லத்தரசிகள் பதப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுகின்றனர்.
- பெருநகரம் அல்லாத சிறிய நகரங்களில் 50% இல்லத்தரசிகள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுகின்றனர்.
- 38% இல்லத்தரசிகள் தாங்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்.
- 72% இல்லத்தரசிகள் தங்கள் இணையர்களுடனான உறவு லாக் டவுன் காலத்தில் மேம்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.