சென்னையில் உயர் சிறப்பு மருத்துவமனையாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சிகிச்சை பெற அல்லது சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
இவர்களில் பலர் சாலை ஓரங்களில் சுயநினைவின்றி கிடந்தவர்கள் மற்றும் காவல்துறை மற்றும் நண்பர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர். ஆனால் இதில் பெரும்பாலானோர் குடும்பங்கள், நெருங்கியவர்கள் என யாரும் இல்லாத ஆதரவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
பெரும்பாலானோர் 55 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 50% மேற்பட்டவர்கள் வயது மூப்பு தொடர்பான பிரச்சனைகளான மூட்டு வீக்கம்,எலும்பு முறிவு, நீரிழிவு மற்றும் பாக்டீரியாவில் ஏற்படும் ரத்ததொற்று போன்ற நோய்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை கவனித்துக்கொள்ள சொந்தங்கள் இல்லாததால் பலர் மருத்துவமனையிலேயே நீண்டகாலம் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக 50 வயதை கடந்த ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக மருத்துவமனையிலையே தங்கி பல அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
“அவர்கள்(ஆதரவற்றவர்கள்) மீதான கவனிப்பு சமரசம் செய்யப்படாமல், அறுவை சிகிச்சைகள் உட்பட தடையற்ற பல சிகிச்சையை வழங்குவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறோம் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தேரணி ராஜன் தெரிவித்தார். மேலும் அவர் நோயாளிகளுக்கு தேவையான தேநீர் மற்றும் உணவுகளை சரியான நேரத்திற்கு வழங்கி செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அக்கறையுடன் அவர்களை கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் இருந்த மக்களுக்கு ஆதரவாக இருந்தது அரசு மருத்துவமனைகளே. இன்றும் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் காரணங்களாலேயே மக்கள் தைரியமாக வெளியே வந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதரவற்றவர்களையும் இச்சமூகத்தில் ஒரு அங்கமாக சேர்த்து பணியாற்றும் உணர்வு அரசு கட்டமைப்புகளின் கீழ் தான் நடைபெறும் என்பது இந்த செய்தியிலிருந்து வெளிப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் தனியார்மயமாக்கபடும் பட்சத்தில் இதுபோன்ற செய்திகளை நாம் எப்போதும் பார்க்க முடியாது.