அறிஞர் அண்ணா

நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணா

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

இந்தியாவில் அமைந்த மூன்றாவது நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்ற அண்ணாவின் கன்னிப் பேச்சு இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க பேச்சாக திகழ்கிறது.

இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பத்தாண்டுகளில் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகம் ஒரு இளம்பருவ வளர்ச்சி அடைகிற போதே அதில் ஜனநாயகம், சோசலிசம், தேசியம் என்பதற்கான மறுவரையறையை தனது முதல் உரையிலேயே கோரியவர் அண்ணா. 

1947-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெளியேறியபோது தனித்தனி அரசுகளாக இருந்த 565 சமஸ்தானங்களை சாம, தான, பேத, தண்ட வழிகளைப் பயன்படுத்தி இந்தியா என்கிற ஒற்றை ஏகாதிபத்தியமாக வல்லபாய் படேல் வடிவமைத்த பத்து ஆண்டுகளில், அதனை சட்டை செய்யாமல் இந்தியாவை ஒரு தேசியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றவர் அண்ணா. தமிழ்நாட்டின் தெருக்களில் மக்கள் மன்றத்தில் இந்தியாவை ஒரு நாடு அல்ல என்று பேசினார். அதையேதான் நேரு மற்றும் இன்னபிற இந்திய தேசிய வெறி கொண்டவர்களின் முன்னிலையிலும் பாராளுமன்றத்திலும் பேசினார்.     

பாரதிய ஜனசங்கம், அகிலபாரத இந்து மகா சபை, அகில இந்தியா ராம் ராஜ்ய பரிசத் என்று அகண்ட பாரதத்தின் கனவுகளைக் கொண்டவர்கள் ஒரு பக்கம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என்று ஒற்றை இந்தியாவை கட்டி எழுப்புகிற வேலைத்திட்டத்தில் இருப்பவர்கள் இன்னொரு பக்கம். இப்படியானவர்கள் நிரம்பி வழிந்த அவையில் இந்தியாவினை ஒரு ‘உபகண்டம்’ என்று பேசியதன் மூலம் இது ஒரு நாடு அல்ல, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட கூட்டமைப்பு என்ற பொருளை அண்ணா முன்வைத்தார். 1962-ம் ஆண்டு காலக்கட்டத்தை பொறுத்தவரையில், இது இந்திய பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் மிகப் பெரிய புரட்சிகர கருத்தாகும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவமே ஜனநாயகம் என உரைத்தார் 

“ஜனநாயகத்தைப் பொறுத்த வரையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறையும் இந்த பெரிய உபகண்டத்தில் அமலாகாதவரை ஜனநாயகத்திற்கான எந்தப் பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது”

என்பதை அண்ணா முன்வைத்தார்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் பல்வேறு மொழி, வட்டார, இனங்களைக் கொண்ட இந்தியாவில் உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும் என்று அண்ணா பேசியதைத் தான் இன்று மாநில உரிமை ஒடுக்கப்பட்டடோர் விடுதலைக்கு போராடும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போனறவர்கள் இப்பொழுதும் கோரிக்கையாக வைக்கிறார்கள்.

அண்ணாவின் குரல் ஏற்கப்பட்டிருந்தால்

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 37.36% வாக்குகளை மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா 55.80% பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று தனிப் பெருமான்மையில் விவாதங்களற்று மசோதாக்களை சட்டமாக்கி இந்த உபகண்டத்தின் தலையெழுத்தினை மாற்றிக் கொண்டிருக்கிறது. அண்ணா கேட்ட விகாதாச்சார பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் தேவை இப்பொழுது அண்ணாவின் காலத்தை விட அதிகமான அவசியமாக இருக்கிறது.  

பேசுவது மட்டுமல்லாமல், முக்கியமான பிரதான சிக்கலுக்கு நேரடியாக மக்கள் ஒப்புதல் பெறவேண்டும் என்று 1962-ல் முழங்கிய அண்ணாவின் குரலுக்கு இடதுசாரிகள் வலுசேர்த்து கோரிக்கை நிறைவேற்றி இருந்தால்  இன்று விவாதங்களே இல்லாமல் முக்கிய மசோதாக்கள் அனைத்தும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சூழல் வந்திருக்காது.

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் என்று ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தின் வழியாக பெரும்பான்மைவாதத்தை கட்டியெழுப்பி வெறும் 37 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டு மாநில உரிமைகளை மறுத்து கல்விக் கொள்கையும், வரிக் கொள்கையையும், கனிமக் கொள்கையையும், பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் மோசடிகளையும் பாராளுமன்றத்தின் வழியாகவே நிகழ்த்துவதாக காட்டுகிற இந்த போலி ஜனநாயகம் இல்லாமல் போயிருக்கும்.

சூழலியல் சிக்கலுக்குக் கூட கருத்துக்கேட்பு கூட்டங்கள் தேவையில்லை என்று சொல்கிற சர்வாதிகாரத்தின் கீழ் பெரும்பான்மையின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும் ஆளப்படுகிறோம்.

சோசலிசம் திரிக்கப்படுவதை எதிர்த்த அண்ணா

நேருவின் காலத்தில் கலப்புப் பொருளாதாரத்தை அவர் முன்வைத்ததாகவும், அவரை சோசலிசவாதி என்றும் பலர் புகழ்ந்து கொண்டிருந்தபோது,

நலத்திட்டங்களும், சேமநல அரசும் (welfare state) சோசலிசம் அல்ல. சமத்துவம்தான் சோசலிசம் என்று இந்திய கம்னியூஸ்ட்களும் பிரஜா சோஷலிஸ்ட்களும் இருந்த அவையில் அண்ணா பேசினார். 

”சோசலிசம் என்பது சேமநலம் மட்டுமல்ல, சேமநலத்திற்கு உறுதி தருவது மட்டுமல்ல. சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது.”

இந்தியாவில் தனியார் துறை குறித்தான விவாதத்தில், தனியார் துறையில் பெருமுதலாளிகளின் லாபம் எல்லாம் பங்குதாரர்களுக்குத்தான் செல்கிறது என்று பொருள்படும்படி பேசிய உறுப்பினரை மறுத்து,

”(ஏற்கனவே பேசிய உறுப்பினர்) கோடி கோடியாக இலாபம் குவிக்கப்பட்டாலும், டாடா, பிர்லாக்களின் பணப்பெட்டிக்குள் போகாமல், பங்குதாரர்களுக்குப் போய்விடுவதை எடுத்துச் சொன்னார். இதுதான் பொருளாதார விளக்கம் என்றால் நமக்கேன் பொதுத்துறை, தனியார்துறை என்ற இரண்டு. எனது மதிப்பிற்குரிய நண்பர் தனியார் துறைதான் பொதுத்துறை என்றும், டாடா – பிர்லாக்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுத்துறையைச் சேர்ந்தவை என்றும் கருதினால் பொதுத்துறை, தனியார் துறை என்று ஏன் வேறுபாடு காட்டவேண்டும்? பங்குகளும் இலாபங்களும் பிரிக்கப்பட்டு தரப்படுகிறது என்று குறிப்பிட்டபோது, வேறு குறிக்கோளை நோக்கி அவர் குறிக்கோளை விட்டு எங்கேயோ போய்விட்டார்.

இந்த பிரச்சினையைப் பற்றி ஆராய நாம் அமைத்த குழுக்கள், பலமுள்ள தொழில் சாம்ராஜ்யங்கள் ஏக போக உரிமைகளின் மேல் வளர்ந்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. பிரதம மந்திரிகூட இந்த பிரச்சினையைப் பற்றி கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டு திட்டங்களினால் உற்பத்தியான வளம் எங்கே, எப்படிப் போயிற்று என்பதைக் கண்டுபிடிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

எனவே, இங்குள்ள சோஷலிசம் வேறு வகையானது என்று வாதிடுவதைவிட வேறு ஏதாவது பெயர் தந்துவிடலாம். சோஷலிசத்தின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அதற்கு உங்கள் சொந்த விளக்கத்தை ஏன் தருகிறீர்கள்?”

என்று கேள்வி எழுப்பி கலப்புப் பொருளாதாரம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியினை ஒட்டுமொத்த துணைக்கண்டத்தின் வளர்ச்சியாக காட்ட முயற்சிப்பதையும் கண்டித்தார்.

தேசியமும் ஒருமைப்பாடும்

தேசிய ஒருமைப்பாடு என்று பேசுகிறவர்கள் முன்வைக்கும் தேசியம் வேறு. நாங்கள் சொல்லும் தேசியம் வேறு என்பதைப் பேசிய அண்ணா, 

மக்களிடம் இணக்கமும் ஒற்றுமையும் உருவாக வேண்டும். ஒரே தேசமாக இருந்திருந்தால் அது இந்த 15 ஆண்டுகளில் உருவாகியிருக்கும். ஆனால் பதினைந்து ஆண்டுகளாக பல முயற்சிகள் எடுத்தும் ஒற்றுமை ஏற்படாமல் இருப்பதுதான் உண்மை” என்பதை இந்தியப் பாராளுமன்றத்தில் பேசினார்.

“ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது?” என்று கேட்டார்.

பாராளுமன்றத்தில் இந்திய தேசிய கட்சிக்காரர்களின் மொழி ஆதிக்கம் குறித்து பேசுகிற போது, இங்கு காங்கிரஸ் உருவாக்குகிற மரபுகளை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெள்ளத் தெளிவாக தனி ஒரு ஆளாக நின்று மாநிலங்களவையில் வைத்த அண்ணா அனைத்து தேசிய கட்சிகளின் இந்தி ஆதரவை தோலுரித்துக் காட்டினார்

“தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டிற்கான வழியா?”

”இந்தியா ஒன்று என நினைப்போருக்கு சொல்லேன், அது இங்குமங்கும் குழப்பம் மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதைக் காட்டிலும் நேசப்பான்மையுள்ள பல நாடுகளாக இருப்பது நல்லதல்லவா?” 

என்று பேசிய அண்ணாவிடம் தென்னகம் பிறந்தால் அங்கு என்ன மொழி ஆட்சி மொழியாக இருக்கும் என்று கேட்டார் கேரளாவிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸப் மேத்தன். 

அதற்கு அண்ணா, ”மொழி மற்றும் இதர விபரங்கள் அரசியல் நிர்ணய சபையில் தீர்மானிக்கப்படும்” என்று பதில் கொடுத்தார் .

திராவிட நாடு சுயநிர்ணய உரிமை குறித்து

அண்ணாவிடம் நீங்கள் சுயநிர்ணய உரிமை கேட்பது சரி என்றால் எல்லா தேசிய இனங்களுக்கும் கேட்க வேண்டும் என்று குறுக்கிட்டுக் கேட்ட, எம்.என்.லிங்கத்திற்கு, ”ஆமாம் அதற்கும் வாதிட முடியும்” என்றவர், மேலும் “நான் எனது திராவிட நாட்டிற்கு கேட்கிறேன். அப்படிக் கேட்பது ஏதோ குரோதத்தால் கேட்கவில்லை. அப்படி நாடு பிரிக்கப்பட்டால் சிறிய, ஒன்றுபட்ட, ஒரே மாதிரியான மக்கள் வாழும் நாடாக மாறும். எல்லா பகுதியும் கலந்து பழகி, வளர்ச்சிப்பூர்வமாக ஒன்றுபடுவார்கள். அப்போது பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும் மிக நல்ல முறையில் எய்தலாம்” என்று தெரிவித்தார்.

திராவிட நாடு கோரிக்கை என்பது விரோதத்தாலோ, கட்சிக் கொள்கை என்பதாலோ கேட்கவில்லை, வளர்ச்சி அடைந்த ஒரு நல்வாழ்விற்கு அதன் தேவை இருந்ததால் கேட்டவர் அண்ணா.

”தில்லிக்கு நான் வந்து 10 நாட்களாகிறது. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை என்றாலும் நான் மரம் அடர்ந்த சாலைகளுக்கு, புதுத் தெருக்களுக்கு, சோலைகளுக்குச் சென்றேன்.

ஒரு சாலைக்காவது தென்னாட்டார் பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்குத் தோன்றாதது ஏன்? இது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள் என்பதைக் காட்டவில்லையா?”

இந்த நிலைமை இன்று வரைக்கும் அப்படியே இருக்கிறது.

மேலும் அண்ணா, “தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம். நேரு வாசகச் சாலையில் நுழையலாம், கமலா நேரு மருத்துவமனைக்குப் போகலாம்” என்று கூறி நீங்கள்தான் எங்களை புறக்கணிக்கிறீர்கள் என்பதை முன்வைத்தார். 

சுதந்திரம் அடைந்த 15-வது ஆண்டில் அண்ணா கேட்ட கேள்விகள் இன்னும் பதில் இல்லாமல்தான் இருக்கிறது. இப்பொழுதும் கூட குஜராத்தின் படேல்களுக்குத்தான் கோடிகளைக் கொட்டி சிலை வைக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் போராட்டத்தைத் துவக்கிய புலித்தேவனையும், கட்டபொம்மனையும் முதல் சுதந்திரப் போராட்டக்காரர்களாக அறிவிக்கக்கோரி நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் குறுக்கீடுகளை வரவேற்றார்

இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணாவின் கன்னிப் பேச்சில் குறுக்கீடுகள் இருந்தது போல, வேறு யாருக்கும் இருந்ததில்லை ஏனென்றால் கன்னிப் பேச்சில் குறுக்கீடுகள் செய்யக் கூடாது என்பது அவை மரபு. 

தனது முதல் உரை பாராளுமன்றத்தில் ஒரு தத்துவ விவாதத்தை உருவாக்கும். அதில் குறுக்கீடுகளும் கேள்விகளும் இருந்தால் தனது கொள்கையை இன்னும் விரிவாக விவாதிக்க முடியும் என்று தெரிந்தால்தான், ”இது என் கன்னிப்பேச்சு தான். ஆனால் குறுக்கீடுகளை கண்டு நான் கூச்சப்படுபவன் அல்ல. குறுக்கீடுகளை விரும்புகிறவன்” என்று அண்ணா பேசினார். 

மதம் தேசிய இனத்தின் அடையாளம் அல்ல

மாநிலங்களவையின் தலைவர், ராமனும் கிருஷ்ணனும் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை வணங்கப்படுவதால் இந்தியா   ஒற்றுமைபட்டுள்ளது என்று முன்பு எப்பொழுதோ பேசியதற்கும் அண்ணா தன் கன்னிப் பேச்சிலையே விளக்கம் கொடுத்தார். ”ஐரோப்பா முழுவதும் ஏசுநாதர் வணங்கப்பட்டாலும் பல நாடுகளாக இருக்கிறது. இன்னும் உருவாகும்.” என்று பேசி மதம் ஒரு தேசிய இனத்தின் அடையாளம் கிடையாது என்று மறுத்தார்.  மேலும் ஜனாதிபதி உரையில் தென்னகத்தில் உருவாகும் புதிய தேசிய இனம் குறித்து ஏதும் இல்லை என்ற குற்றச்சாட்டினை அண்ணா முன்வைத்தார்.

”நாங்கள் தேசியம் குறித்து கொண்ட பொருள் வேறு. நீங்கள் கொண்ட பொருள் வேறு” 

என்று தெளிவாகப் பேசிவிட்டு, 

”நான் திராவிட நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். எங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். அதன் வழியாக நாங்கள் இந்த உலகிற்கு பங்களிக்க வேண்டும்” 

என்று முடித்தார் அண்ணா. 

இந்திய நாடாளுமன்றத்தில் ஜனநாயகம், சோசலிசம், தேசியம் ஆகியவற்றிற்கு மொழிவழி தேசிய இனங்களின் சார்பாக புதிய விளக்கங்களைக் கொடுத்ததால்தான் அவர் பேரறிஞராய் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *