ஸ்பேஸ் எக்ஸ்( SpaceX) நிறுவனம் வழங்கிய ராக்கெட் மூலமாக நாசா விண்வெளி வீரர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ், ஷானன் வாக்கர், விக்டர் குளோவர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சோச்சி நோகுச்சி ஆகியோர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதே விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபல்கான்(Falcon) வகை ராக்கெட் மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள டிராகன்(Dragon) கேப்சியூல் மூலம் 4 விண்வெளி வீரர்களும் வெற்றிகரமாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். (இந்த விண்கலத்திற்கு ரிசைலன்ஸ் Resilience என பெயரிடப்பட்டுள்ளது).
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்(Elon Musk) இந்த நடவடிக்கையை கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு தூரத்தில் இருந்தே பார்த்தார்.
சுழற்சி முறையில் விண்வெளி வீரர்களை அனுப்பும் நாசாவின் விண்வெளி டாக்சி
சில மாதங்களுக்கு முன்தான் ஸ்பேஸ் எக்ஸின்(SpaceX) விமானங்கள் சோதனை செய்யப்பட்டு வந்தன. இதனையடுத்து தற்போது விண்வெளி டாக்சி சேவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. “விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் இனி தொடர்ச்சியாக அமெரிக்காவில் இருந்து விண்வெளி நிலையத்திற்கு போய் வரும் நாசாவின் திட்டம் பல வருட தாமதத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வகத்திற்க்கு சென்றால் அதிகப்படியான அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெறும்” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டிராகன் கேப்சியூல் அதன் சுற்றுப்பாதையை சென்றடைந்து, முதல் கட்ட பூஸ்டர்கள் அட்லாண்டிக் கடலில் மிதக்கும் மேடையில் இறங்கியதும், கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் கட்டுப்பாடு அறையில் பலத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் வெடித்தன.
கொரோனா தொற்று காரணமாக விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாசா தொடர்ந்து எடுத்து வந்தது. விண்வெளி வீரர்கள் அக்டோபர் மாதம் முதல் அவர்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஏழு நபர்களை சுமந்து செல்லும் டிராகன்
டிராகன்(Dragon) கேப்சியூல் நேர்த்தியான வடிவமைப்புடன் உயர் தொழில்நுட்ப அம்சங்களைத் உள்ளடக்கி மிகவும் விசாலமாக உருவாக்கப்பட்டுள்ளது – இது ஏழு நபர்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது. முந்தைய ராக்கெட்டுகள் மூன்று நபர்களுக்கு மேல் ஏற்றிச் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவை அறிவியல் பரிசோதனைகளுக்கு தேவையான உபகரணங்கள் எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல் கட்ட ராக்கெட் பூஸ்டர்களை மறு சுழற்சி செய்து அடுத்த மார்ச் மாத இறுதியில் மீண்டும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்வெளிக்குச் சென்றுள்ள விண்வெளி வீரர்கள் ஏப்ரல் மாதத்தில் பூமிக்கு திரும்புவார்கள். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கோடையின் பிற்பகுதியில் அல்லது இலையுதிர் காலத்தில் மற்றொரு குழுவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டில் நாசா பயன்படுத்தி வந்த விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர், தனியார் நிறுவனங்களின் மூலம் சரக்கு மற்றும் ஆய்வாளர்களை விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்று வருகிறது. கடந்த முறை ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டுகளுக்கு நாசா நிறுவனம் 90 மில்லியன் செலவு செய்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இது ஒரு “சிறந்த நாள்” என்றும் இன்னும் பல வருடங்களுக்கு ஒரு பெரிய கூட்டு பங்களிப்பை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனம் நாசாவுடன் இணைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மே மாதம் இந்த இரு நிறுவங்களும் இணைத்து புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இரண்டு விண்வெளி வீரர்களை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தியது. அமெரிக்கா தன் நாட்டில் இருந்தே நாசாவின் விண்வெளி வீரர்களை, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளிக்கு அழைத்து சென்றுள்ளது.
ஒரு தனியார் விண்வெளி நிறுவனம் முதல்முறையாக மனிதர்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.