வன உயிரினங்கள்

இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு

இந்தியாவின் வன உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை மறைக்க தவறான மற்றும் குழப்பமான தரவுகள் வழங்கப்படுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

மனிதர்களால் மீண்டும் உருவாக்க முடியாத மிக அற்புதமான நிலப்பரப்புகளை, பொருளாதார நடவடிக்கைகளுக்காக திறந்து விட்டு, சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்து, இந்திய அரசாங்கம் வன உயிரினங்கள் குறித்தான தவறான, குழப்பமான தரவுகளை வழங்கி தவறாக வழிநடத்தி வருகிறது. 

உண்மை நிலவரங்கள் மூலம் இந்தியாவின் தாவர இனங்கள் மற்றும் விலங்கினங்கள் மோசமான அளவில் குறைந்து வருவதாக உலகளாவிய பல்லுயிர் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 

பாராளுமன்றத்தில் தரவுகள் இல்லை என சொன்ன அரசு

கடந்த பாராளுமன்ற மக்களவை விவாதத்தில் அழிவு நிலையில் இருக்கும் பறவையினங்கள் தற்போதும் தொடர்ந்து அழிந்து வருகின்றனவா என்கிற கேள்விக்கு இது குறித்தான தரவுகள் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ பதில் அளித்தார். இதன்மூலம் வன உயிரினங்களின் தரவுகளில் அரசின் அலட்சியப் போக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

அழிந்து வரும் பறவை இனங்கள் குறித்த நடத்தப்பட்ட ஆய்வு 

ஏழு மாதங்களுக்கு முன்பாக, e-bird என்கிற தளத்தில் 15,000 பறவை ஆர்வலர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  “இந்தியாவில் பறவைகளின் நிலை குறித்தான அறிக்கை 2020″( State of India’s Birds Report 2020) உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கை 261 பறவை இனங்களை உள்ளடக்கிய ஆய்வு மேற்கொண்டது. 

இந்த ஆய்வின் மூலம் தெரியவந்த உண்மைகள் அதிர்ச்சிகரமானவை. 52% பறவைகள் குறைந்து வருவதாகவும், 22% பறவைகள் தீவிரமாக குறைந்து வருவதாகவும், 43% பறவையினங்கள் சமநிலையில் இருப்பதாகவும் மற்றும் 5 சதவீதமான பறவை இனங்கள் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே நிலை நீடித்தால் 80 சதவீதமான பறவையினங்கள் குறைந்துவிடும் என்றும், 50% பறவையினங்கள் தீவிரமாக குறைந்து விடும் சூழலுக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

உத்தரகாண்டில் பிரசித்திபெற்ற Finn’s Weaver என்கிற பறவையினம் 94% குறைந்து, இந்த இனத்தில் தற்போது 500 பறவைகள் மட்டுமே இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது மட்டுமன்றி பருந்துகள் மற்றும் கழுகுகளின் எண்ணிக்கைகளும் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ICUN வெளியிட்ட அழியும் பறவையினங்களின் சிவப்பு பட்டியல்

இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு (IUCN-International Union for Conservation of Nature) இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில்  82  பறவையினங்கள் இருந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 101 பறவையினங்களாக ஆக அதிகரித்துள்ளது. சிவப்பு பட்டியல் என்பது ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலைக் குறிப்பதாகும்.

வனப் பாதுகாப்பு சட்டம் 1972 என்ன சொல்கிறது?

வனப் பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் வன உயிரினங்களை (I முதல் VI என) ஆறு அட்டவணைகளின் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முதன்மை அட்டவணை உயிரினங்களுக்கு (குறிப்பாக I மற்றும் II அட்டவணைகளில் உள்ள உயிரினங்களுக்கு) எதிரான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கப்படுகின்றன.

ஆனால் வன உயிரினங்களை மேற்சொன்ன அட்டவணைகளில் பிரிப்பது என்பது முற்றிலும் அறிவியல் தன்மை அற்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரும் மீன் இனங்கள்

“இந்தியாவில் 159 வகையான நன்னீர் மீனினங்கள் அழிந்து கொண்டு வருகிறது. ஆனால் இதில் எந்த ஒரு மீன் இனமும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பட்டியலிடப் படவில்லை” என கேரள மீன்வள மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழக பேராசிரியர் ராஜீவ் ராகவன் தெரிவித்தார். ஆசியாவின் தண்ணீர் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் (The Third Pole) ‘தி தேர்டு போல்’ அமைப்பிடம் பேசிய அவர் “மீன் இனங்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படாவிட்டால், அவற்றை மதிப்பிடுவதற்கும், முன்னுரிமை வழங்கப்படுவதற்குமான நோக்கம்  மிகவும் அர்த்தமற்றது” என்று தெரிவித்துள்ளார். 

வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் போதாமை

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஆபத்தான உயிரினங்களை கண்காணிக்க வடிவமைக்கப்படவில்லை. மேலும் “வன உயிரினங்கள் புத்துயிர் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டம் குறிப்பிட்டுக் காட்டவில்லை” என அசோகா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சியின் மூத்த ஆய்வாளர் அபி டி.வனக் தெரிவித்தார்.

அழிந்து வரும் வன உயிரினங்களும், அதற்கான முதன்மை காரணங்களும்

கடந்த செப்டம்பர் மாதம் வன உயிரினங்களுக்கான நீதி அமைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 1970 முதல் 2016 வரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 68% வன உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தது. மேலும் மனிதர்கள் இயற்கையான நிலப்பரப்புகளில் ஏற்படுத்திய மாற்றங்களால் குறைந்தது 1 மில்லியன் வன உயிரினங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது என ஒரு சர்வதேச அறிக்கை கடந்த ஆண்டு கண்டறிந்தது. 

ஆக இந்த இரண்டு மதிப்பீடுகளும் வனவிலங்குகளின் வாழ்விடங்களான  காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், ஆறுகளை சுரங்க பணிகள், அணைகள், தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்காக அழிப்பது வனவிலங்குகளை அளிப்பதற்கான முக்கியமான காரணியாகும்.

இந்தியாவில் அழிந்து வரும் வன உயிரினங்களும், அரசின் நிலைப்பாடும்

ஐ.யூ.சி.என் வகைப்படுத்தியுள்ள சிவப்பு பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 8,664 உயிரினங்களில், காடுகளில் மட்டும் சுமார் 13% அழிந்துபோக கூடிய பேராபத்தில் இருப்பதாக தெரிகிறது. இருந்தும், இந்தியா வன உயிரினங்களை அழிக்கும் விதமாக பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகளை வேகமாக திறந்து வருகிறது.

ஜூலை 2019-ல் மக்களவையில், இந்தியாவின் காடுகளில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருவது குறித்தான கேள்விக்கு, ​​ சுற்றுச்சூழல் அமைச்சகம் அழிந்துபோனதாகக் கருதும் 4 விலங்கினங்களையும், 18 தாவர இனங்களையும் பட்டியலிட்டு கூறியது. ஆனால் மோசமாக அழிந்துவரும் உயிரினங்கள் அடங்கிய IUCN பட்டியல் குறித்து அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

ஆனால் இன்றோ 180 வகையான உயிரினங்கள் இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் பல உயிரினங்கள் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாதவை என்பது வேதனைக்குரியது.

உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பான்மையான நாடுகள் சுற்றுச்சூழலை சார்ந்ததே இருக்கின்றன என ‘சுவிஸ் ரீ'(Swiss Re) என்ற உலகளாவிய காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்களின் எண்ணிக்கை குறையும் அபாயத்தில் உள்ளது என்றும், இந்த பட்டியலில் இந்தியா முதன்மை நாடாக இருக்கிறது என்றும் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை இந்நிறுவனம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *