கல்வியில் தனியார்மய ஊக்குவிப்பின் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்படாத நிலையில், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் தகுதி இழப்புக்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், பட்டம் மற்றும் பி.எட் படிப்பு முடித்தவர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையும் தமிழகத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஒன்றிய அரசின் உத்தரவு
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்ற ஒன்றை கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டது. மேலும் அந்த சட்டத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளிக்க வேண்டுமென்றால் தரமான ஆசிரியர்கள் தேவை என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டு, அதற்காக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அந்த தேர்வில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்தது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசின் கல்வித் துறை செயலகங்களுக்கும் 11 பிப்ரவரி 2011 அன்று ஒரு அரசாணையையும் மத்திய அரசு அனுப்பியது.
அப்போதே இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தக் கூடாது என்றும், கிராமப் புறத்தில் 12-ம் வகுப்பு வரை படித்து ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள பிறப்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தவர் பாதிக்கப்படுவர் என்றும், சமூக நீதியின் மீது அக்கறை கொண்டோர் எதிர்த்தனர். அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காஷ்மீர் தவிர்த்து மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75,000 பேர்
இதனைத் தொடர்ந்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசின் கல்வித்துறை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அரசாணையை 15 நவம்பர் 2011 அன்று வெளியிட்டது. இதன்படி 2011-ம் ஆண்டின் இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளுக்குள் பணிக்குச் சென்றுவிட வேண்டும். இல்லையேல் அவர்கள் தகுதித் தேர்ச்சி காலாவதியாகிவிடும். ஆனால் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் 2012-ம் ஆண்டில் பணி ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் 2013-ம் ஆண்டில் சுமார் 75 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இவர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. இந்த தகுதித் தேர்வில் பெற்ற சான்றிதழ் 7 ஆண்டுகளே செல்லும் என்பதால் இவர்கள் ஆசிரியர் ஆவதற்கான தகுதியை இழக்கின்றனர்.
ஏன் இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை?
இந்த தகுதி தேர்வு நடத்தி 6 ஆண்டுகளுக்கும் மேலாக தகுதியடைந்த அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. கல்வியில் தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளின் சேர்க்கை விகிதங்கள் குறைந்தன. இதனைக் காரணமாகக் காட்டி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்களும் கைவிடப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 60 மாணவர்களுக்குள் இருந்தால் இரு ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்ற விதி உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.
ஒரு பள்ளி இடைநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக உயரும்போது அங்கு குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை 5 ஆசிரியர்கள் இருந்தால் போதும் என்று அரசு திருத்தியது. இதனால் ஒரு பள்யில் 6 ஆசிரியர், 7 ஆசிரியர் இருந்தாலே பற்றாக்குறையாக கணக்கு காட்டுவதற்கு பதிலாக திருத்தப்பட்ட விதியைக் கொண்டு உபரியாக கணக்கு காட்டப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது, பதவி உயர்வு பெறுவது ஆகியவை குறைந்தது என்றும் ஆசிரியர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
தனியார்மயத்தின் விளைவு
அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதிகளை ஒதுக்கி அவற்றை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல், தனியார்மயம் கல்வித்துறையில் ஊக்குவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும் நிலையில், பல அரசுப் பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பல பள்ளிகளில் கழிப்பறைகள் முறையாக இல்லை. கட்டப்பட்ட கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை. கல்விப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை போன்றவற்றால் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் செல்லும்படி நேர்ந்தது. தனியார்மயத்தை கட்டுப்படுத்தவோ, கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவோ, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது ஆசிரியர் அமைப்புகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்களை, கடந்த 6 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமலேயே காக்க வைத்திருந்து, அவர்களை தகுதி இழக்கச் செய்வது எந்த வகையில் நியாயம் என்று ஆசிரியர் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசுப் பள்ளிகளை சரியாக நிர்வகிக்காததும், பணி நியமனம் செய்ய முடியாத சூழல் உருவானதற்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஆசிரியர் பயிற்சி பெற்று தகுதித் தேர்விலும் தேர்வானவர்களை பலியிடுவது கூடாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படும் வரை அவர்களின் தகுதிக்கான ஆண்டு வரையறையை நீட்டிக்க வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை கட்டுப்படுத்தி அரசுப் பள்ளிகளின் தரத்தை வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பணி நியமனத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
தனியார்மயம் என்பது சமூகநீதியை எவ்வாறு பலியிடுகிறது என்பதற்கு இந்த 75,000 ஆசிரிய இளைஞர்களின் நிலை உணர்த்துகிறது. ஏற்கனவே தனியார்மயம் இப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கி இருக்கும் சூழலில். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மேலும் மேலும் சமூக நீதியை சமூக நீக்கம் செய்யக் கூடாது என்பதே சமூக அக்கறை கொண்டோரின் கருத்தாக உள்ளது.