விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக் கோளும், இந்தியாவின் செயற்கைக்கோளும் மோதிக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஆபத்தான நிலையில் வெறும் 224 மீட்டர் தொலைவிற்குள் வந்திருக்கின்றன. விபத்து ஏற்படுத்துவதில் இருந்து தப்பியுள்ளதாக சொல்லப்பட்டாலும், இருநாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் தற்போது இந்த செயற்கைகோள்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ரஷ்யாவின் ராக்கெட் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையமான Roscosmos மற்றும் அபாயகரமான சூழ்நிலைகளின் தானியங்கு எச்சரிக்கை மையம் (Warning Automated System of Hazardous Situations) ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்வு குறித்தான தகவல்களை வெளியிட்டுள்ளன.
இதில் நேற்று வெள்ளிக்கிழமை(27/11) இந்திய நேரப்படி அதிகாலை 7.19 மணியளவில் ரஷ்ய செயற்கைக்கோளான கனோபஸ்-ன் (kanopus-V) சுற்றுப்பாதைக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2F(Cartosat-2F) செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 224 மீ தொலைவிற்கு அருகில் வந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் புவி ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வெவ்வேறு காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் ஆகும்.
கனோபஸ்-வி செயற்கைக்கோள்
450 கிலோ எடைகொண்ட கனோபஸ்(kanopus-V) என்பது ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் ஒரு விண்வெளி கண்காணிப்பு மற்றும் புவி ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக்கோள் குறிப்பாக பூமியில் நிகழும் வலுவான பூகம்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து ஆய்வு செய்வது மற்றும் பூமியின் மேற்பரப்பு, வளிமண்டலம், அயனிவெளி(Ionosphere) மற்றும் காந்த மண்டலத்தை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள்
இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் தொடர்களில் கார்டோசாட்-2F எட்டாவது செயற்கைக்கோள் ஆகும். 700 கிலோ எடைகொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பூமியை கண்காணிக்கும் பணிக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இஸ்ரோ அளித்துள்ள பதில்
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ROSCOMOS) இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்ட அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்தது. தற்போது இந்த நிகழ்வு குறித்தான சந்தேகங்களுக்கு அதன் தலைவர் பதில் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நான்கு நாட்களாக செயற்கைக்கோளைக் கண்காணித்து வருகிறோம், அது ரஷ்ய செயற்கைக்கோளிலிருந்து சுமார் 420 மீட்டர் தொலைவில் உள்ளது. 150 மீட்டர் தொலைவில் அருகில் வரும் தருவாயில் மட்டுமே அதனை மிக கவனத்துடன் இயக்குவதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்” என இஸ்ரோ தலைவர் கே.சிவன் டைம்ஸ் ஆப் இந்தியா ‘ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும் அவர் “செயற்கைக்கோள்கள் இதேபோன்ற பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் (பூமியிலிருந்து 500-1000 கி.மீ தொலைவில்) இருக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாக நடைபெறுவது தான்” எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் செயற்கைக்கோள்களில் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டபோது அதை சரி செய்தனர். மேலும் இது போன்ற நிகழ்வுகள் எப்பொழுதும் பொதுவெளியில் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் சிவன்
தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய செயற்கைக்கோள் விபத்து
கடந்த காலத்தில் நடைபெற்ற மிகப் பெரிய செயற்கைக்கோள் மோதல் என்பது 2009 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. செயலிழந்த ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று அமெரிக்க விண்கலம் மீது சைபீரியா நிலப்பரப்பிற்கு மேல் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான துகள்கள் விண்வெளியில் சிதறியது. நான்கு அங்குலத்துக்கு மேல் ஆன அளவில் சுமார் 23,000 க்கும் மேற்பட்ட குப்பைகள் விண்வெளி சுற்றுப்பாதையில் சிதறிக் கிடப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

ஜனவரி 2020 நிலவரப்படி, சுமார் 2,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன.