சூப்பர் ஸ்பெசாலிட்டி இடஒதுக்கீடு

உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் சிறப்பு மருத்துவ இருக்கைகள் (சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ இடங்கள்) என்றால் என்ன?

இதய மருத்துவம், மூளை மருத்துவம், நரம்பு மருத்துவம் போன்ற தனித் துறைகள் குறித்து படிக்கும் DM/M.ch போன்ற மருத்துவப் படிப்புகள் தான் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள். 

இந்த படிப்புகளில் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக இடங்கள் இருக்கின்றன. இங்குதான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு  அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இல்லை.  

2016 வரை இருந்து வந்த இடஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள இடங்களில் 2016-ம் ஆண்டு வரை தமிழக மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50% அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கும், மீதி தனியார் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு வந்தது.  

மத்திய அரசு மொத்த இடங்களையும் 2016-ம் ஆண்டு எடுத்துக்கொண்ட பிறகு இந்த இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. இந்த உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் ஏற்கனவே இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள பட்டியல் பிரிவினர் (SC), பட்டியல் பழங்குடியினர்(ST) மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடும் வழங்கப்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதுநிலை மருத்துவப் படிப்புகள் 

எம்.டி, எம்.எஸ், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டிற்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்படும். அதில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பொது இடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கு தனியாா் மருத்துவா்களும், அரசு மருத்துவா்களும் போட்டியிடலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு மருத்துவா்கள், அப்படிப்பை முடித்து சிறப்பு படிப்புகளுக்கு செல்லும் வரை, அரசுப் பணியிலேயே தொடர வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அனுமதி

முதுநிலை மருத்துவ மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த கல்வியாண்டில் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளிலும் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு டாக்டர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை  உயர்நீதிமன்றத்த்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த 9-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு நவம்பர் 7-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதை தாக்கல் செய்தார். இதனை ஏற்று மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்டிருக்கும் அனுமதி

ஒடிசா, தமிழகம், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 தனியார் மருத்துவர்கள் அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இது நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரத்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்தினால், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர பிற டாக்டர்களுக்கு வாய்ப்பு பறிபோகும். 2016-ம் ஆண்டிலிருந்து அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதால், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர அரசு டாக்டர்களுக்கு நடப்பாண்டு இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர். 

அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு மறுப்பது தமிழக ஏழை மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் – ரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்த்த மருத்துவர் ரவிந்திரநாத் மெட்ராஸ் ரேடிகல்சிடம் கூறியது: 

மருத்துவர் ரவீந்திரநாத்

இந்தியாவில் அதிகப்படியான உயர் சிறப்பு மருத்துவ  இடங்கள்  தமிழ்நாட்டில்  தான் இருக்கின்றன  இந்த ஆண்டு 369 இடங்கள் உள்ளது. 10 மாநிலங்களில் ஒரு இடம் கூட இல்லை; சில மாநிலங்களில் 5 அல்லது 6  இடங்கள் மட்டுமே இருக்கிறது.  அதனை முழுவதுமாக அகில இந்தியப் போட்டிக்கு விடுவது தமிழக நலனை பாதிக்கும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. 

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பணி செய்தவர்கள் படிக்கும்போதுதான் அவர்கள் மீண்டும் அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு வருவார்கள். இதனால் அரசு மருத்துவமனையில் உயர் சிறப்பு இடங்களை உருவாக்க முடியும். புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கமுடியும். புதிய துறைகளை உருவாக்க முடியும். ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை தான் நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உயர் சிறப்பு சிகிச்சை கிடைக்கும். 

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் அரசு மருத்துவமனை பாதிக்கப்படும். ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *