எந்நேரமும் ஒரே மாதிரியாக இல்லாமல் உடலின் ஆற்றல் தேவைக்கு தகுந்தாற் போல் உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கமும் உணர்வுகளும் அமைகின்றன. நாம் நலமுடன் வாழ உடல் உறுப்புகளின் இயக்கங்களிலும், சுரப்புகளிலும் தேவைக்கு தகுந்தாற்போல மாற்றங்கள் தேவை. இது இயற்கையாகவே உயிரினங்களுக்கு அமைந்திருக்கின்றன.
எப்போதெல்லாம் ரத்த அழுத்தம் கூடுகிறது? ஏன் கூடுகிறது?
இரவு நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்கிறோம். வழியில் ஒரு நாய் நம்மைப் பார்த்து துரத்துகிறது. அதை எதிர்கொள்ள கற்களோ அல்லது எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். வேறு வழியில்லை ஓட வேண்டும் என்ற நிலை. நாயைப் பார்த்ததும் அதுவரை இயல்பாக மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்த நாம் வேகமாக ஓடத் தொடங்குகிறோம். ஒரு வழியாக நாயிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நமது இதயத்தில் செயல்பாடு எப்படி இருக்கும். இயல்பாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது இயல்பாக துடித்துக்கொண்டிருந்த இதயமானது படபடவென அடிக்கும்.
இயல்பாக நடந்து செல்லத் தேவைப்படும் ஆற்றலை விட ஓடுவதற்கு பன்மடங்கு அதிகமான ஆற்றல் உடலுக்கு தேவைப்படுகிறது. எனவே இதயமானது உடல் வேகமாக இயங்குவதற்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை ரத்தத்தின் மூலமாக வழங்குவதற்காக வேகமாக இயங்குகிறது. ஓடுவதற்கு முந்தைய ரத்த அழுத்தத்தை ஒப்பிடும்போது ஓடும்போது ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இதயம் வேகமாக இயங்கி ரத்த அழுத்தம் அதிகரிக்காதிருந்தால் அதிவேகத்தில் ஓட இயலாது. உடலின் ஆற்றல் தேவைக்கு ஏற்ப இதயத் துடிப்பின் வேகமும் ரத்த அழுத்தமும் கூடுகிறது. இது அவசரநிலைக்கேற்ப ரத்த அழுத்தம் அதிகரிப்பது.
ஆனால் இயல்பாகவே ரத்த அழுத்தம் அழுத்தம் அதிகரிப்பது என்? எப்படி புறச்சூழலுக்கு ஏற்ப ஆற்றல் தேவைக்காக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதோ, அதேபோல உடலின் அகச்சூழலின் உள்ளுறுப்புகளின் ஆற்றல் தேவைக்காக்கவும், மனரீதியான மாற்றங்களுக்காகவும் ரத்த அழுத்தம் கூடுகிறது. உடல் உள்ளுறுப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றல் கிடைக்காதபோது அதை ஈடு செய்வதற்காக ரத்த அழுத்தம் கூடுகிறது.
அந்த பாதிக்கப்பட்ட உறுப்புகள் சரியாகும் வரை அதற்கு தேவையான ஆற்றலை கொடுக்க, தேவைக்கேற்ப ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் இருக்கிறது. வாழ்வியல் உணவு முறையை சரி செய்யும்போது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் பகிரப்படும்போது கூடுதல் ரத்த அழுத்தத்தின் தேவை ஏற்படுவதில்லை. ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
நோய் இதயத்தில் இல்லை
ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலோ இதயம் வேகமாக இயங்குவதாலோ இதய நோய் என்று அர்த்தமல்ல. உடலின் பிற உள்ளுறுப்புகளின் ஆற்றல் குறைபாட்டை சரி செய்ய இதயமானது கூடுதல் ஆற்றலுடன் ரத்தத்தைக் கொடுக்கிறது. சிகிச்சை கொடுக்க வேண்டியது பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குத்தான் இதயத்திற்கு அல்ல. எந்த உறுப்பு பாதிக்கப்பட்டன் காரணமாக ரத்த அழுத்த அளவோ, சர்க்கரை அளவோ கூடியிருக்கிறதோ, அதை அறிந்து சிகிச்சை அளிப்பதே மரபுவழி மருத்துவம்.
ரத்த அழுத்த அதிகரிப்பிற்கு அடிப்படையான காரணம் முறையற்ற செரிமானமும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வாழ்வியல் முறையுமே
உண்ட உணவானது முறையாக செரிமானம் ஆகும்போது அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலானது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைகிறது. உடல் உறுப்புகள் சீராக இயங்குகிறது. செரிமானம் சரியாக நிகழாத போது கிடைக்கும் சர்க்கரையானது உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது. இவை கழிவுகளாக மாற்றப்பட்டு சிறுநீர் வழியாக கெட்ட சர்க்கரையாக வெளியேறுகிறது.
இந்த நிலை நீண்ட நாட்கள் தொடரும்போது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றலில் பற்றாக்குறை ஏற்பட்டு உடல் உறுப்புகள் சோர்வடைகிறது. தனது இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளுக்கு கூடுதல் ஆற்றல் அளிப்பதற்காக இயல்பை விட அதிக அழுத்தத்துடன் இதயமானது ரத்தத்தின் மூலமாக உறுப்புகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இந்த நிலையில் ரத்த அழுத்தமானது, சாதாரண ரத்த அழுத்த அளவை விட அதிகமாக இருக்கிறது.
ஆனால் நாம் ரத்த அழுத்த அளவை அறிந்துகொள்ள பயன்படுத்தும் பரிசோதனைக் கருவிகள், எதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகியிருக்கிறது என்ற காரணத்தைக் கண்டறிவதில்லை. மரபுவழி மருத்துவ முறையானது ரத்த அழுத்த அளவுகோல்களைக் காட்டிலும், அச்சிக்கலுக்கு மூல காரணமான உடலின் பிரச்சினையை கண்டறிவதையே முதன்மையானதாகப் பார்க்கிறது. எனவே நோயின் மூலக்காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்யும்போது ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க முடியும் என்று மரபுவழி மருத்துவர்கள் சொல்கிறார்கள்.


அசாதாரண சூழலில் ரத்த அழுத்தம்
மனிதன் காடுகளில் வாழ்ந்த போது மிருகங்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஓட வேண்டியிருந்தது. அதற்கு உடலின் தேவைக்கேற்ற ரத்த அழுத்தம் உயரவேண்டும். இல்லையெனில் அதிக வேகத்துடன் ஓட இயலாது. இந்த அமைப்பு இயற்கையாகவே மனிதனுக்கு அமைந்துள்ளது.
உடலில் உள் உறுப்புகளுக்கு ஆற்றல் குறைபாட்டின் காரணமாகவோ அல்லது புறச்சூழலில் ஏற்படும் அசாதாரண சூழல் காரணமாகவோ, உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகவோ உடலுக்கு அதிக ஆற்றல் தேவை ஏற்படுகிறது. இதனால் உடலானது தன்னை காத்துக் கொள்வதற்காக சிறுநீரகத்திற்கு மேலுள்ள அட்ரினல் சுரப்பு தூண்டப்பட்டு அட்ரினலின் சுரப்பு நீரைச் சுரந்து ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இந்நிலையில் இதயத் துடிப்பானது தூண்டப்பட்டு ரத்த குழாய்கள் சுருங்கி அதிக அழுத்தத்துடன் ரத்தமானது உடல் முழுவதுமோ அல்லது தேவையான உறுப்புகளுக்கோ சென்றடைகிறது.
இந்த அசாதாரண சூழலில் செரிமானத்தின் மூலம் இயல்பாகக் கிடைக்கும் சர்க்கரையின் ஆற்றலை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே கணையமானது இன்சுலின் சுரப்பை நிறுத்துகிறது. கல்லீரலில் சேமிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட சர்க்கரையானது சுரந்து ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு தேவையான அதிக ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
மனித உடலின் தனித்தன்மை
ஒவ்வாரு மனித உடலும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒருவருக்கு இருக்கும் பசியின் அளவும், தாகத்தின் அளவும் மற்றவருக்கு மாறுபடும். ஒருவருக்கு வெளியேறும் வியர்வையின் அளவோ சிறுநீரின் அளவோ மற்றோருவருக்கும் அதே அளவே வெளியேற வேண்டிய அவசியமில்லை. அதே போல ஒரு உடலின் ரத்த அழுத்தமோ சர்க்கரை அளவோ மற்றோருவருக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.
பேராசிரியர் இதய நோய் நிபுணர் பத்மபூஷன் விருது பெற்ற மருத்துவர் பி எம் ஹெக்டே தனது நூலில் இவ்வாறு கூறுகிறார், “ரத்த அழுத்தம் சிறிது அதிகமாக இருந்தாலும், அதற்கு மருந்து கொடுக்கப்படுவது மருத்துவத்தின் இருண்ட பகுதியையே காட்டுகிறது. ரத்த அழுத்தம் உள்ள ஒருவருக்காக 850 பேர்களுக்கு தேவையின்றி மருந்து கொடுக்கப்படுகிறது. தேவையின்றி நீண்டகாலம் மருந்து எடுத்துக்கொள்வோர் பல விளைவுகளுக்கு உள்ளாகின்றனர்.
மனித உறுப்புகளின் செயல்பாடு நுண்ரத்த குழாய்களின் ரத்த அழுத்தம் சார்ந்தே அமைகிறது. ரத்த அழுத்தக் குறைப்பு மருந்துகளால் உடலின் தமனி ரத்த அழுத்தம் குறையுமானால் என்ன விளைவு உண்டாகும்? ரத்த அழுத்தம் உயர்வது கூட உடல் உறுப்புகளின் ரத்தத் தேவையை ஈடு செய்வதற்கான உடலின் செயல்பாடு என கருதலாம். நீண்டகாலம் மருந்தால் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு செய்யப்பட்டோரில் மரணம் அதிகமாக உள்ளது”
ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணிகள்
- விபத்து ஏற்படும் நேரங்களில் உடலில் உ றுப்புகள் அடிபடும்போது அதை சரி செய்வதற்காக
- நீண்ட நாட்கள் முறையற்ற செரிமானத்தின் காரணமாக உடல் உறுப்புகளுக்கு ஆற்றல் பற்றாக்குறை ஏற்படுவதை சரி செய்வதற்காக
- அதிக உடல் உழைப்பில் ஈடுபடும்போது அந்த நேரத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதற்கு
- அதிர்ச்சியான செய்திகளைக் கேட்கும்போது
- மன அழுத்தத்தின் போது ,கவலை,பயம் ஏற்படும்போது
- இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது – தூக்கத்தை தவிர்க்கும்போது உடலின் ஹார்மோன் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. செல்கள் சோர்வடைகிறது. செல்கள் புதுப்பிக்கப்படாமல் கழிவுகள் தேங்கத் தொடங்குகிறது. இந்த நிலையில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
எனவே எந்த காரணத்திற்காக ரத்த அழுத்தம் அதிகரித்திருக்கிறது என்பது முக்கியம். மனஅழுத்தம் காரணமாக இருக்குமானால் அது பசி உணர்வு உள்ளிட்ட செரிமானத்தையும் பாதிக்கிறது. இதற்கான சரியான தீர்வு என்பது மனதை செம்மைப்படுத்தும் மண் ரீதியான மருத்துவம் அளிப்பதே.
உள்ளுறுப்புகளின் இயக்க குறைபாடு காரணமெனில் அதற்கான மூலக்காரணத்தை கண்டறிந்து சரி செய்வது. ஆக ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை என்பது இதயத்தை நோக்கி இல்லாமல், ரத்தக் குழாய்களை நோக்கி இல்லாமல் மூலக்காரணத்தை அறிந்து அதை நோக்கியதாக இருக்க வேண்டும்.
முறையான செரிமானம் நடக்கும் வகையிலான உணவு முறை இயற்கையோடு இயைந்த வாழ்வியல், மன அழுத்தம், கவலை, பயமற்ற வாழ்வியலை பின்பற்றும்போது ரத்த அழுத்தமானது தேவையான சூழலில் மட்டுமே ஏற்படும் வகையில் சீராக வைக்கப்படுகிறது.
நலமுடன் வாழ்வதற்கு நான்கு தங்க விதிகள்
பசி – பசி உணர்வு ஏற்படும்போது மட்டும் உண்பது. பசி அளவிற்கு ஏற்றபடி அளவோடு உண்பது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் அல்லாத பிடித்த உணவுகள் உண்பது. இரவு தாமதமாக உண்பதைத் தவிர்ப்பது.
தாகம் – தாகத்தின் அளவிற்கு நீர் அருந்துவது. தாகமற்ற நிலையில் லிட்டர் கணக்கில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஒய்வு – உடலுக்கு சோர்வு ஏற்படும்போது ஓய்வெடுப்பது.
தூக்கம் – உடலின் ஹார்மோன் செயல்பாடுகளில் இரவு தூக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. தொடர்ந்து இரவு தூக்கத்தைத் தவிர்க்கும்போது உடல் நலம் பாதிப்படைகிறது. தூக்கத்தின் போது உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகிறது.
இவற்றைக் கடைபிடிப்பதோடு உடலுக்கு அசைவு கொடுக்கும் வேலைகளில் ஈடுபடுதல் உடற்பயிற்சி செய்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.