கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormycosis) எனப்படும் ‘கருப்பு பூஞ்சை’ (Black Fungus) நோய் மிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கருப்பு பூஞ்சை நோய் குஜராத் மாநிலத்தில் 300 நோயாளிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 1500 நோயாளிகளுக்கும் கண்டறியப்பட்டுள்ளது. மிகக் குறுகிய நாட்களில் மே 18-ம் தேதி வரை 52 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள். இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அசாம் மாநிலத்தில் கருப்பு பூஞ்சையின் முதல் நோயாளி இறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கருப்பு பூஞ்சை பற்றி ‘மெட்ராஸ் ரிவியூ’ தளத்தில் வந்த கட்டுரை.
படிக்க: ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்
கருப்பு பூஞ்சை பற்றிய அச்சம் தொடர்ந்தாலும் இப்போது புதிதாகக் கண்டறியப்பட்ட ஒரு நோய் மருத்துவ நிபுணர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கூறப்படும் ‘வெள்ளை பூஞ்சை’ (White Fungus) நோய்தான் அது. தற்போது வரை பீகார் மாநிலத்தில் நான்கு நோயாளிகளுக்கு அதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
‘வெள்ளை பூஞ்சை’ நோய் பற்றி இதுவரை தெரியவந்தவை:
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த வெள்ளை பூஞ்சை நோய்கள் பதிவாகியுள்ளன. அந்த கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.என்.சிங் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நாட்டில் இதுபோல பல நோய்த்தொற்றுகள் இருக்ககூடும் என்று கூறியிருக்கிறார்.
வெள்ளை பூஞ்சை நோயானது கருப்பு பூஞ்சை நோயைவிட விட ஆபத்தானது. ஏனெனில் இது உடலின் முக்கிய செயல்பாட்டை பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளை பூஞ்சை நோய் கருப்பு பூஞ்சை விட ஆபத்தானது என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது உடலின் மற்ற பாகங்களான தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, பாலின உறுப்புகள் மற்றும் வாய் போன்றவற்றை பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோயால் பாதித்து மீண்டவர்களிடையே குறிப்பாக ஸ்டீராய்டு சிகிச்சை மற்றும் சர்க்கரை அளவு குறைந்தவர்கள் ஆகியோருக்கு இத்தகைய பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் ‘மியூகோர்மைகோசிஸ்’ அல்லது ‘கருப்பு பூஞ்சை’ நோயாளிகள் புதிதாக தொற்றுக்கு உள்ளாகும் நேரத்தில் இந்த வெள்ளை பூஞ்சை பற்றிய புதிய அச்சுறுத்தல் வெளியாகியிருப்பது மேலும் அச்சத்தை உருவாகியிருக்கிறது.
தொற்று நோய்கள் சட்டம், 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக கருதவேண்டுமென்று மாநில சுகாதார மற்றும் மருத்துவ அமைப்புகளை மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த பூஞ்சை நோய் தொற்று கொரோனா நோயாளிகளுக்கு நீண்டகால நோயாகவும் அல்லது உயிரிழப்பிற்கும் வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த பூஞ்சை தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கண் அறுவை சிகிச்சை மருத்துவர், காது, மூக்கு மற்றும் தொண்டை நோய் மருத்துவர் (ENT specialists), பொது அறுவை சிகிச்சை மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பற்கள் சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தாக ஆம்போடெரிசின்-பி என்ற ஊசியைப் போடும் மருத்துவர் ஆகியோர் அடங்கிய பலதரப்பட்ட மருத்துவ ஆலோசனைகளும் அவர்களின் அணுகுமுறைகளும் தேவைப்படும் என்று கருதப்படுகிறது.
மேலதிக விவரங்கள் விரைவில் தருகிறோம்.