கரும்பூஞ்சைத் தொற்று

‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து உயரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகப்படியான பதட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் ஒரு நோய் பரவல் பற்றிய செய்திகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.

தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் அதிலிருந்து மீண்டு வந்தவர்களையும் தாக்கி அவர்களின் உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடிய ‘கருப்பு பூஞ்சை’ (Black Fungus) என்னும் நோய் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மே 18-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட நான்கு நகரங்களில் சுமார் 300 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கருப்பு பூஞ்சை’ என்றால் என்ன?

‘கருப்பு பூஞ்சை’ என்பது மருத்துவ ரீதியாக ‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormycosis) என்றழைக்கப்படும் நோய் ஆகும். இது முன்னர் ஜிகோமைகோசிஸ் (Zygomycosis) என்று அழைக்கப்பட்ட நோய். மியூகோர்மைசீட்ஸ் (Mucormycetes) எனப்படும் அரிய பூஞ்சைத் தொகுதியின் பரவலால் ஏற்படுகிறது.

உண்மையில் இந்த பூஞ்சைத் தொகுதிகள் நம்மைச் சுற்றியுள்ள சூழல்களில், குறிப்பாக மண்ணில் காணப்படுகின்றன. பூஞ்சை தொகுதிகள் காற்றில் பரப்பும் நுண்ணிய பூஞ்சை விதைகள் மூலம் நம் சுவாசத்தை அடைகின்றன. இந்த தொற்று சுவாசிப்பதன் மூலம் மூக்கில் பரவத் தொடங்கி அங்கிருந்து கண்கள் மற்றும் மூளைக்கு பரவுகிறது.

கருப்பு பூஞ்சை உடலை தாக்கி பரவியிருப்பதை நுண்ணோக்கி மூலம் எடுத்த படம்.

நம்மில் பலர் கருப்பு பூஞ்சை பரவலை உருவாக்கும் மியூகோர்மைசீட்கள் பரவக்கூடிய சூழ்நிலையில்தான் வாழ்கிறோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மியூகோர்மைகோசிஸ் நோயை எதிர்கொள்கிறார்கள். கருப்பு பூஞ்சை பற்றிய பல்வேறு ஆய்வுகளில் ஏற்கனவே ஒருவர் சில குறிப்பிட்ட நோய் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்களின் நோயெதிர்ப்பு திறன் மட்டுப்படும் ஒரு குறிப்பிட்ட நிலையில், இந்த கருப்பு பூஞ்சை தொற்று அவர்களுக்கு பரவுகிறது. நீரிழிவு நோய், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஊக்க மருந்துகளான ‘கார்டிகோஸ்டீராய்டு’ (Corticosteroid) நீண்ட காலமாகப் பயன்படுத்தியவர்கள் ஆகியோர் மியூகோர்மைசீட்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

‘கருப்பு பூஞ்சையின்’ காற்றில் பரவும் விதைகள். நுண்ணோக்கி முலம் எடுத்த படம்

‘கருப்பு பூஞ்சை’ தொற்றை எவ்வாறு அடையாளம் காணுவது?

ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தாக்கியிருப்பதை கீழ்வரும் அறிகுறிகளை கொண்டு அடையாளம் காணலாம்.

கருப்பு பூஞ்சையின் ஆரம்ப அறிகுறிகள்

*கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி வலி ஏற்படுதல் மற்றும் அந்தப்பகுதி சிவந்துபோவது.
*காய்ச்சல்
*தலைவலி
*இருமல்
*மூச்சுத் திணறல்
*இரத்த வாந்தி
*மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
*மூக்கு தண்டை சுற்றி ஏற்படும் நிறமாற்றம்

‘கருப்பு பூஞ்சை’ ஒரு தொற்றுநோயா?

மருத்துவ ஆய்விதழான ‘News Medical’ இதழில் வெளிவந்த ஆய்வுகளின் அடிப்படையில் இது தொற்று நோய் அல்ல. மேலும் இது விலங்குங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதிலை. இந்த நோய்த்தொற்றை முன்கூட்டியே தடுப்பதற்கு எந்தவித தடுப்பூசிகளும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘கருப்பு பூஞ்சை’ வளரும் இடங்கள் எவை ?

சளி போன்ற இந்த பூஞ்சைப் படலம் பொதுவாக மண்ணிலும், தாவரங்கள், இயற்கை உரம் மற்றும் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிலும் காணப்படுகிறது. மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியூகோர்மைசீட்களின் நுண்ணுயிரிகளை சுவாச மண்டலத்தில் உள்ளிழுத்து அழிப்பதற்கு போதுமான வலுவான நோய் எதிர்ப்பு திறன் இல்லாததும் ஒரு காரணமாகும்.

மக்கள் சில குறிப்பிட்ட சூழலில் பூஞ்சை விதைகளை சுவாசத்தின் வழியாக உள்ளிழுக்கிறார்கள். அதில் பெரும்பாலான மக்களின் நோயெதிர்ப்பு திறனானது அவற்றைத் தடுக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் லுகேமியா போன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள் அல்லது ஸ்டெராய்டுகள் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடும் உடல் திறனைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இது ஒரு நோய்த் தொற்றாக மாறும் வாய்ப்புள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உயிரிழப்புகளில் 50% சதவிகிதம் ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொண்டதால்
நிகழலாம் என்கிறது பிபிசி யின் செய்தி அறிக்கை. ஏனென்றால் உடல்நிலை மிகவும் மோசமான கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையில் இந்த ஸ்டெராய்டு மருந்து பயன்படுத்தப்படுவதால் இது நிகழலாம் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கான சிகிச்சையில் நுரையீரலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க ஸ்டீராய்டுகள் உதவுகின்றன மற்றும் அவை வைரஸால் ஏற்படும் சில சேதங்களைத் தடுக்கின்றன. இருப்பினும் ஸ்டீராய்டுகள் உங்கள் நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்தி நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத கொரோனா நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதற்கும் வழிவகுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *