சென்னையை விட 10.14 மடங்கு பெரியதும், திருச்சி நகரத்தை விட 25 மடங்கு பெரியதும், மும்பை நகரத்தை விட ஏறக்குறைய ஏழு மடங்கு பெரிய அளவிலான ஒரு பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவின் பனிஉறைந்த விளிம்பிலிருந்து வெட்டெல் கடலுக்குள் (Weddell Sea) உடைந்து பிரிந்திருக்கிறது. இதனால் இந்த உடைந்த பனிப்பாறை பகுதியானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக மாறியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ -76 (A-76) என அழைக்கப்படும் இந்த பனிப்பாறை சுமார் 4320 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அதாவது 170 கி.மீ நீளமும் 25 கி.மீ அகலமும் கொண்டது. இதனுடன் ஒப்பிடுகையில் மும்பை 603.4 சதுர கி.மீ பரப்பளவும், இந்தியாவின் தலைநகரான டெல்லி 1484 சதுர கி.மீ. பரப்பளவும், சென்னை 425 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டதென்றால் இது எவ்வளவு மிகப்பெரிய பனிப்பாறை பிளவு என்பதை உணரலாம்.
இந்த புதிய பனிப்பாறை ஐரோப்பிய விண்வெளித் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ‘கோப்பர்நிக்கஸ் சென்டினல் -1’ (Copernicus Sentinel-1) திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டது. ‘பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே’ நிலையம் இந்த பிளவை அமெரிக்காவின் ஆய்வு அமைப்பின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அண்டார்டிகாவை கண்காணிக்கும் ஐரோப்பிய விண்வெளி திட்டம்
ஐரோப்பிய விண்வெளி திட்டமான ‘சென்டினல்-1 பணி திட்டம்’ அண்டார்டிகாவில் பனிப்பாறைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக இரண்டு துருவ-சுற்றுப்பாதை (Polar-orbiting satellite) செயற்கைக்கோள்களை இப்பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது. அவை தனது சி-பேண்ட் ரேடார்களால்(C-band synthetic aperture radar imaging) படங்களை எடுத்து, பகலிரவு பாராமல் அண்டார்டிகாவின் தொலைதூரப் பகுதிகளையும் ஆண்டு முழுவதும் கண்காணிக்கிறது.
‘சென்டினல் -1 பணி திட்டம்’ ஆண்டு முழுவதும் அந்த பகுதியின் பனிப்பாறைகளை கண்காணிக்கிறது. ஏதாவதொரு பனிப்பாறை பிளவு கண்டறியப்பட்டால் இதுவரை தொடர்ந்த பனிப்பாறை பிளவுகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு அவற்றிக்கு எண்கள் வழங்க்கப்பட்டு, ஒரு முதல் எழுத்தாலும் பெயரிட்டு குறிப்பிடப்படுகிறது.
முன்பைவிட வேகமாக உருகும் பனிப்பாறைகள்
புவி வெப்பமயமாதல் நிகழ்வால் அண்டார்டிக் பனிப்பாறைகள் முன்பை விட வேகமாக உருகுகின்றன. பெரிய பனிப்பாறைகள் உடைந்து மேலும் அதிக பனிப்பாறைகளை உருவாக்குகின்றன. சமீபகாலங்களில் அண்டார்டிகாவை சுற்றி குறிப்பாக வெட்டல் கடலில் பனிப்பாறைகள் எப்போதும் மிதக்கின்றன, பனிக்கட்டிகள் நிலத்தை அடைந்து உடையும்வரை அவை கடலில் மிதக்கின்றன.
கடந்த ஆண்டு உடைந்த மிகப்பெரிய பனிப்பாறை
கடந்த ஆண்டு இதேபோல் உடைந்த மிகப்பெரிய ஏ-68 ஏ (A -68A) என்று பெயரிடப்பட்ட பெரிய பனிப்பாறை தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் பென்குயின்கள் அதிகமாக வாழும் தீவில் மோதக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த தீவு பெருங்குயின்கள் இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்குக்கும் தீவாகும். மேலும் அந்த தீவில் எப்போதும் அதிகமான பென்குயின்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக அந்த பனிப்பாறை தனது எடையை இழந்து பல துண்டுகளாக உடைந்தது. இதனால் அந்த தீவு நிகழவிருந்த ஆபத்திலிருந்து தப்பியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உடைந்த ப்ரண்ட் பனிஅடுக்கு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ப்ரண்ட் பனிஅடுக்கு’ (Brunt Ice Shelf) என்ற பகுதியை உடைத்துக்கொண்டு
ஏ -74 (A -74) என்ற மற்றொரு பனிப்பாறை அண்டார்டிகாவின் பகுதியிலிருந்து பிரிந்தது. அதன் மொத்த பரப்பளவு 1270 சதுர கி.மீ. இந்த பனிப்பாறை பிளவை பற்றி அப்போது ‘மெட்ராஸ் ரீவியூ’ தளத்தில் வெளியான செய்தி.
படிக்க: சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
ஒன்பது அங்குலம் உயர்ந்த கடல் மட்டம்
இந்த மாத தொடக்கத்தில் சுற்றுசூழல் பற்றிய ஆய்விதழான ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 1880 ஆம் ஆண்டிலிருந்து சராசரி கடல் மட்டமானது சுமார் ஒன்பது அங்குலங்கள் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த கடல் நீர்மட்டத்தின் உயர்வில் கால்பகுதி கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா பனிபாறைகளில் பனி உருகுவதாலும், மற்ற இடங்களில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பனிப்பாறைகள் உருகுவதாலும் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் 15 நாடுகளைச் சேர்ந்த 84 விஞ்ஞானிகள் பங்கேற்றிருக்கின்றனர். ஆய்வின் முடிவாக பசுங்குடில் வளி உமிழ்வை தடுப்பதற்கும், காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கும் ஒவ்வொரு நாடும் ஏற்றுக்கொண்ட குறிக்கோள்கள் மற்றும் திட்டப்பணிகள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். உண்மையில் ‘பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்’ கீழ் நாடுகள் தாங்கள் உறுதியளித்த குறிக்கோள்களை நிறைவேற்றாவிட்டால் பனிப்பாறைகளும், பனிக்கட்டிகளும் மிகவேகமாக உருகி இருமடங்கு வேகத்தில் கடல் நீர்மட்டதை உயர்த்தும் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். இதன் பொருள்: மீண்டும் இப்பூவுலகம் மீள்வதற்கான புள்ளியை எப்பொழுதோ கடந்துவிட்டிருக்கிறோம். மீண்டும் மீள இயலாத காலநிலை மாற்றத்தை கொடுவாய்ப்பாக நமது எதிர்காலத்திற்கு கையளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
‘செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்’
– திருக்குறள்.
(செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்)
– அருண்குமார் தங்கராஜ், Madras Review