கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?

சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது. இதே காலத்தில் இங்கிலாந்து அரசானது தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளும் இடைவெளியை 12 வாரங்களில் இருந்து இரண்டு வாரங்களாக குறைத்தது. இந்த நடவடிக்கையானது தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் மற்றும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆராய்ச்சி

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஆறு வார காலத்திற்குக் குறைவாக மற்றும் 6-8 வாரங்கள், 9-11 வாரங்கள் மற்றும் 12 வாரங்களுக்கு மேற்பட்ட போன்ற பல்வேறு கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டதில், கால இடைவெளி குறையக் குறைய தடுப்பூசியின் பலன் குறைந்து வருவதாகவே ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 6 வார காலத்திற்குள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்களுக்கு நோய்த்தொற்று அறிகுறி ஏற்படுவதை 55.1% குறைந்துள்ளதாகவும், மேலும் இந்த இடைவெளியை 6-8 வாரங்களாக அதிகரித்தபோது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் 59.7% குறைந்ததாகவும், மேலும் இந்த இடைவெளி 9-11 வாரங்கள் அதிகரித்தபோது 72.2 சதவீதமாகவும், 12 வாரங்களுக்கு மேல் செல்லும் பொழுது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் 80 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டு அவர்கள் 76% நோய் தொற்று ஏற்படாமல் காக்கப்பட்டதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்வோரின் இடைவெளி அதிகரிக்க செய்வதன் மூலமாக முதல் டோஸ் செலுத்தி கொள்வதற்கான தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் விநியோகமாகி, முதல் டோஸ் செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இதன் காரணமாக பெரும் திரளான மக்கள் எண்ணிக்கையை கொரோனா நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் ஆபத்தான சூழ்நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் இந்த யுக்தி பக்க பலமாகக் கைகொடுக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இரண்டாவது டோசின் இடைவெளியை அதிகரிப்பதால் அதிகமானோருக்கு முதல் டோஸ் கிடைக்கும்

File Photo

இரண்டாம் டோஸ்க்கான இடைவெளி அதிகரிப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்கிறார் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் முன்னால் நுண்ணுயிரியல் மற்றும் நுண் கிருமி பிரிவின் தலைவர் மருத்துவர் T. ஜேகப் ஜான். மேலும் இவர் 4 வார இடைவெளி காலத்திற்குள் செலுத்திக் கொள்ளப்படும் தடுப்பூசியானது தீவிர கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவரை 100% காப்பாற்றும். ஆனால் லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஒருவரை 100% காப்பாற்றுவது கடினமே. ஆனால் 12 வார காலத்திற்கு மேலான இடைவெளியுடன் எடுத்து கொள்ளப்படும் தடுப்பூசி மிதமான மற்றும் லேசான நோய் தொற்று பாதிப்பிற்கு எதிரான செயல்பாடுகளை அதிகரிக்கும்” என்கிறார்.

மேலும் அவர் தற்போது வரை 12 வார கால இடைவெளிக்குப் பின்னர் செலுத்திக் கொள்ளப்படும் கொரோனா தடுப்பூசியின் விளைவு என்னவாக இருக்கக்கூடும் என்பது குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. “எந்த தடுப்பூசியாக இருந்தாலும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளப்படுவதற்கான இடைவெளியை ஒரு வருட காலத்திற்கு தாமதித்தாலும் கூட முதல் டோஸ் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி பயனுள்ளதாகவே செயல்படும். தன்னைப் பொருத்தவரை நான்கு வார இடைவெளி என்பது சிறந்தது, ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இரண்டாவது டோஸ்க்கான கால இடைவெளியை தாமதப்படுத்துவது நல்லதே. எனவே இதன் மூலம் அதிகமானவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி கிடைக்க வழி கிடைக்கும்” என்கிறார். கோவிஷீல்ட் மட்டுமன்றி கோவாக்சின் தடுப்பூசியும் ஒருவர் ஒரு வருட கால இடைவெளிக்குள் செலுத்திக் கொள்ளலாம் என்கிறார் அந்த பேராசிரியர்.

12 வார கால இடைவெளியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

12 வார கால இடைவெளிக்குப் பின் பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நோயெதிர்ப்பு சக்தியானது 3 வார கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்திகொண்ட நபர்களை விட இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக பிர்மிங்காம் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை ஆகியோர் இணைந்து செய்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பொது சுகாதாரத் துறையின் தொற்றுநோயியல் ஆலோசனை நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவர் காயத்ரி அமிர்தலிங்கம் வாரங்களுக்கு அதிகமான இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பதற்கான ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு முதல் டோஸ் செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்கிறார். இதன் மூலம் ஒருவர் தங்களையும் தங்களது சமூகத்தையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க சிறந்த வழியைப் ஏற்படுத்தும் என்கிறார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள்

தற்போது இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகியவை இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. https://timesofindia.indiatimes.com/india/total-number-of-covid-vaccine-doses-given-in-india-crosses-18-57-crore/articleshow/82746151.cms நேற்று வரை 18.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான அனுமதி சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டு ஐதராபாத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்க தயாரிப்பான பைசர் மற்றும் ஜெர்மன் தயாரிப்பான மாடர்னா போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாடின் அடிப்படையில் அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *