ஒன்றைரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12-ம் ஆண்டை இன்று நாம் நினைவு கூர்கிறோம். 20-ம் நூற்றாண்டினுடைய மனிதப் பேரவலத்தின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் படுகொலை அமைந்துவிட்டது. இத்துயரப் படுகொலையின் நேரடி நோக்கமாக தமிழின அழிப்பும், அதனுடைய மறைமுக நோக்கமாக ‘இந்தோ- பசுபிக் பிராந்திய புவிசார் அரசியல்” நலனுமிருந்தன.
உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கும் தமிழீழம்
இனவெறிப் பேரினவாத அரசை முன்னிறுத்தி வல்லரசுகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வல்லாதிக்க அரசுகள் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான இன அழிப்புப் போரை நிகழ்த்தின. பிராந்திய புவிசார் அரசியல் நலனே தமிழின அழிப்புப் போரை பின்னிருந்து நடத்தியது. தமிழின அழிப்புப் போரின் மூலம் தமிழ் சிவில் சமூகத்தினருடன் சேர்த்து தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
இந்தோ-பசுபிக் பெருங்கடல் வழிப்பாதை
உலக வர்த்தகத்தின் கடற்வழிப் பாதையில் முக்கியமானது கிழக்குலத்தையும், மேற்குலகத்தையும் இணைக்கும் இந்திய-பசுபிக் பெருங்கடல் வழிப்பாதை. இக்கடற்வழி பாதையின் மீதான மேலாதிக்கம் இப்பிராந்திய நாடுகளுடனான, இப்பிராந்தியத்தின் மீதான இராணுவ மேலாதிக்கத்தின் வழி நிலைநிறுத்தப்படுகிறது. இந்தோ-பசுபிக் கடற்பிராந்திய பரப்பில் அமைகின்ற கப்பற்படைத்தளங்கள் இப்பிராந்தியத்தின் மீதான ராணுவ மேலாதிக்கத்தை உறுதி செய்கின்றன. இத்தகைய கப்பற் படைத்தளங்களில் முக்கியமானதாக திரிகோணமலை துறைமுகமும், இலங்கைத் தீவின் அமைவிடமும் உள்ளது.
ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய காலம்
இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தை மையப்படுத்தி சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நடக்கும் இன்றைய மேலாதிக்கப் போட்டியின் திசைவழிப் போக்கை தீர்மானித்ததில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழினப் படுகொலைக்கும் மிக முக்கியப் பங்கிருக்கிறது. மிகக் குறிப்பாக 2000-த்திற்குப் பிறகான காலக்கட்டத்திற்கும் – உலக வல்லரசுகளில் ஒன்றாக சீனா தன்னை நிலைநிறுத்திய மற்றும் விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றியதற்குப் பிறகான காலக்கட்டத்திற்கும்- மிக முக்கிய பங்கிருக்கிறது.
சீனா கண்ட அபார வளர்ச்சி
இக்காலக்கட்டத்தில் உலக வர்த்தக கழகத்தின் GATT ஒப்பந்தமும் அதன் விளைவான உலகமயமும், தாராளமயமும் உலக வர்த்தக ஒழுங்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. 2001-ம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த சீனா இப்புதிய உலக வர்த்தக ஒழுங்கின் பெரும் பயனை அடைந்தது. இதன் காரணமாக சீன வர்த்தகம் மிகப் பெரும் பாய்ச்சலைக் கண்டது. உதாரணமாக அமெரிக்காவுடனான சீன வர்த்தகம் 5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 1980-2004க்கு இடைப்பட்ட காலத்தில் 231 பில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை எட்டியது. கனடாவிற்கு அடுத்து அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாக சீனா மாறியது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆசியப் பிராந்தியம் மீது அமெரிக்காவின் கூடுதல் கவனத்தை குவிக்கச் செய்தது. இக்காலக்கட்டத்தில், இத்தகைய அரசியல் சூழலில் தான் “இந்தோ-பசுபிக் (அல்லது ஆசிய- பசுபிக்)’ என்ற புவிசார் அரசியல் சொற்பதமே உருவாகிறது.
ராணுவ-வர்த்தகத் தளங்களை விரிவுபடுத்திய சீனா
சீனாவோ விரிவடையும் தனது வர்த்தகப் பரப்பிற்கான புவிசார் அரசியல் கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியது. அதனது அங்கமாகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரை தனது அரசியல் தலையீட்டிற்காக பயன்படுத்திக் கொண்டது. இலங்கை அரசிற்கு ராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி தமிழினப் படுகொலைக்கு துணை போன சீனா, 2009-க்குப் பிறகு இலங்கையில் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது.
சீனாவின் வர்த்தக வளர்ச்சிப் போக்கானது 2010-ல் அதனை உலகின் இரண்டாவது பெரிய பெருளாதார நாடாக மாற்றியது. இந்தோ-பசுபிக் கடற் பிராந்தியத்தில் தனக்கான ராணுவ-வர்த்தகத் தளங்களை விரிவுப்படுத்தத் தொடங்கியது; தென் சீனக் கடல், இலங்கை, மியான்மார், பாகிஸ்தான், ட்ஜிப்வ்தி தீவு ஆகிய நாடுகளுடனான உறவினைக் கொண்டு தனக்கான துறைமுகங்களை உத்திரவாதப்படுத்திக் கொண்டது. இதனின் நீட்சியாக 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனா ‘ஒரே மண்டலம் ஒரே பாதை (One Belt One Road)’ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆசியாவை மையப்படுத்திய அமெரிக்காவின் கொள்கை
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் ஆசியாவை மையப்படுத்தத் (Pivot to Asia) தொடங்கியது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள அன்றைய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ’இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் வர்த்தக-ராணுவ முதலீடுகளை அதிகரிக்கக் கோரினார்’. இதனை அடிப்படையாக கொண்டு இந்தோ- பசுபிக் பிராந்திய நாடுகளுடன் அமெரிக்கா பசுபிக் கூட்டு ஒப்பந்தத்தை (Trans Pacific Partnership Agreement) உருவாக்கியது. இந்த ஒப்பந்ததின் உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா தனித்தனியே பல்வேறு விதமான இரு தரப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.
QUAD கூட்டணி
2014-க்குப் பிறகு இதே விதமான பல்வேறு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியமான நாடான இந்தியாவுடன் அமெரிக்கா கையெழுத்திட்டது. இவைகளின் நீட்சியாக இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியாவை இணைத்து அமெரிக்கா, இந்தோ-பசுபிக் பிராந்திய QUAD எனும் நாற்தரப்புக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. புதிதாக பதவியேற்ற அமெரிக்க அதிபர் பைடன் வெளிநாட்டுத் தலைவர்களுடனான முதல் கூட்டமாக இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுத் தலைவர்களுடனான QUAD நாற்தரப்புக் கூட்டணி கூட்டத்தை நடத்தினார்.
2000-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டம் என்பது மத்திய கிழக்காசியப் பிராந்தியம் மீது அமெரிக்காவின் வெளியுறவு அரசியல் கொள்கை, கொண்டிருந்த முக்கியத்துவத்தை தெற்காசியா மற்றும் ஆசியாவை நோக்கி மாற்றியதில் மிக முக்கிய அம்சமாக செயல்பட்டிருக்கிறது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் நாற்தரப்புக் கூட்டணி, அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்கள அரசினுடைய போரில் உருவாகத் தொடங்கியது ஆகும். 2000-ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆனையிறவுப் போர் வெற்றி, அமெரிக்காவை தெற்காசிய நோக்கில் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக/ இலங்கைக்கு ஆதரவாக’ பல்வேறு நாடுகளை அணித்திரட்டச் செய்தது. இதற்கான கால அவகாசத்திற்காகவே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை நார்வே மூலமாக முன்னெடுத்தது அமெரிக்கா.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து தராகி சிவராம்

மேற்குலத்தின் இந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளைப் பற்றி ஊடகவியலாளர் தராகி சிவராம் குறிப்பிடுகையில், ”சந்தேகத்திற்கிடமான நிலையைக் கடந்து இந்தியா மற்றும் அமெரிக்கா-பிரிட்டன்-ஜப்பான் தரப்பு தங்களது பிராந்திய மற்றும் பொருளாதார நலனுக்காக இலங்கையின் சமாதன நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்துகின்றன மற்றும் கையாளுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார் (தராகி சிவராம், 2003). தராகி சிவராம் குறிப்பிடும் அன்றைய அமெரிக்க-இந்திய-ஜப்பான் தரப்புக் கூட்டணியின் தொடக்க நிலையே இன்றைய இந்தோ-பசுபிக் கடற் பிராந்திய QUAD நாற்தரப்புக் கூட்டணியாக விரிவடைந்திருக்கிறது.
அமெரிக்க-இந்திய ஒப்பந்தங்கள்
உதாரணமாக குறிப்பிட்ட அக்காலக்கட்டத்தில் ’இந்தியப் பெருங்கடல்-தெற்காசிய நோக்கில்’ வளரத் தொடங்கிய அமெரிக்க- இந்திய உறவு இன்று ‘இந்தோ-பசுபிக் கடற்பிராந்திய நோக்கில்’ நாற்தரப்புக் கூட்டணி உறவாக பரிணமித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு ’இருநாட்டு பொதுப் பாதுகாப்பிற்கான ராணுவத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் The General Security of Military Information Agreement (GSOM ) தொடங்கிய இவ்வுறவு, இந்திய-அமெரிக்க 2+2 கூட்டங்களின் வழி 2016-ம் ஆண்டில் தளவாடப் பரிமாற்ற ஒப்பந்தமாகவும் (Logistics Exchange Memorandum of Agreement – LEMOA) ஒப்பந்தம், 2018-ம் ஆண்டில் ராணுவ தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயலாற்றுவதற்கான ஒப்பந்தமாகவும் (Communication, Compatibility And Security Arrangement – COMCASA) , 2020-ம் ஆண்டில் புவிசார் தகவல் பரிமாற்ற கூட்டுறவு ஒப்பந்தமாகவும் (Basic Exchange and Cooperation for Geo-Spatial Agreement- BECA) விரிவடைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமெரிக்க ராணுவத்தின் உயர் சிறப்பு பயிற்சி பெற்ற சிங்கள ராணுவத்தை ஆனையிறவில் வீழ்த்திய 2000-ம் ஆண்டு முதல், முள்ளிவாய்க்கால் படுகொலையின் வழி விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட 2009-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டம் மற்றும் இலங்கை/விடுதலைப் புலிகளை மையப்படுத்திய தெற்காசியாவின் அரசியல் சூழல் ஆகியவை இந்தோ- பசுபிக் பெருங்கடல் தொடர்பில் அமெரிக்கா இன்று உருவாக்கியிருக்கும் பிராந்திய அரசியல் அணிச் சேர்க்கைக்கு அடித்தளம் அமைத்ததில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
தமிழின இன அழிப்பிலிருந்து விரிவடையத் தொடங்கிய அமெரிக்க-சீன பிராந்திய மேலாதிக்கப் போட்டி ரோஹிங்கிய இன அழிப்பைத் தொடர்ந்து மேலும் பல இன அழிப்பிற்கு காரணமாக அமையப் போகிறது. தொடர்ந்து இப்பிராந்தியத்தில் அமெரிக்க-சீனா மேலாதிக்கப் போட்டி மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவின் நோக்கம் குறித்து பேசிய புலிகள் தலைவர் பிரபாகரன்

அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கடற்பிராந்திய அரசியல் நலனைக் கருத்தில் கொண்டே, ”சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்கத் தெரிந்ததே. திரிகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்வது அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.” என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்; எனவே சுதந்திரத் தமிழீழ தேசமானது,”…இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்” என அறிவித்திருந்தார்.
– (சண்டே (SUNDAY) ஆங்கில வார ஏட்டிற்காக ஊடகவியலாளர் அனிதா பிரதாப்புடனான நேர்காணலில் கூறியது (11 – 17, மார்ச், 1984))
புலிகளின் சமாதான பிராந்தியம் குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் விராஜ் மெண்டிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது சமாதான பிராந்திய நோக்கத்தை தமிழீழ மக்களிடத்திலும் கொண்டு சேர்த்திருந்தனர். இதுபற்றிக் கூறும் சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளரான விராஜ் மெண்டிஸ், ”புலிகளின் பிரச்சார ஏடுகளில் தமிழர்கள் திரிகோணமலை துறைமுகப் பகுதியை சமாதானப் பிராந்தியமாக பாதுகாக்கும் நோக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர்கள் (புலிகள்), எதிர்கால போர்ச் சூழலில் திரிகோணமலை துறைமுகத்தை படைத்தளமாகக் கொண்டு மத்திய கிழக்காசிய நாடுகள் மீதோ, இந்தியா மீதோ அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழினப்படுகொலையை நினைவு கூர்வதென்பது படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களை, தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதாகும். தமிழீழத்தை நினைவு கூர்வதென்பது வல்லாதிக்கங்களின் போர் நடவடிக்கைகளற்ற சமாதானப் பிராந்தியமாக இப்பிராந்தியத்தை மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்த தமிழீழ தேசத்தினையும், தமிழீழ மக்களையும் நினைவு கூர்வதாகும்.
– பாலாஜி தியாகராஜன், Madras Review