செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதன்கிழமை அன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதேசமயத்தில் சேலத்தில் மருத்துவப் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று திருப்பத்தூர் மருத்துவமனையில் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறக்கவில்லை, வேறு மருத்துவக் காரணங்களால் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இறந்தவர்களின் உறவினர்கள் அவர்கள் ஆக்சிஜன் தட்டுபாட்டால் தான் இறந்தனர் என்று கூறியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக டெல்லியிலும், உத்திரப்பிரதேசத்திலும் நடந்து கொண்டிருந்த மரணங்கள் தற்போது தமிழகத்திலும் நிகழத் தொடங்கி விட்டது. தமிழகம் டெல்லியின் நிலையை அடைவதற்குள் ஒரு போர்க்கால நடவடிக்கையை அரசு துவங்கியாக வேண்டும்.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டினை உடனடியாக சரிசெய்து தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்தவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்றும், ஆக்சிஜன் விநியோகிப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இறந்தார்கள் என்று பொய்யைப் பரப்பி வருவதாக செவிலியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

செங்கல்பட்டு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள 480 படுக்கைகள் இருக்கின்றன. இவை மூன்று கட்டிடங்களில் உள்ள எட்டு தளங்களில் உள்ளன. ஒரு தளத்திற்கு ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் மட்டுமே உள்ளனர். அவற்றில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பியுள்ளன.
மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் வார்டில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்கள் உட்பட 150 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வார்டில் இரண்டு டாக்டர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்பப் பணியாளர் மட்டுமே உள்ளனர்.
இதேபோல் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு ப்ளாக்கில் 4 மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு தொழில்நுட்பப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததும் அவர்களின் மரணத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மறுக்கும் நிர்வாகம்
செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையை முன்னரே தெரிவித்தோம் என்று சொல்லும் செவிலியர்கள்
ஆனால் மருத்துவமனை செவிலியர்கள் சங்கம் மருத்துவமனை நிர்வாகத்தினை கூற்றினை மறுத்துள்ளது. சம்பவம் நடைபெறுவதற்கு முன்தினமே ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் நிர்வாகத்தினர் முறையாக ஏற்பாடு செய்யாமல் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவினை குறைத்து வழங்கச் சொன்னதாக செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் இதனை மறைத்துவிட்டு, தொழில்நுட்பக் கோளாறு என்று பொய் சொல்வதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 1100 செவிலியர்களுக்கு மேல் பணிசெய்ய வேண்டிய இடத்தில் 152 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிவதாகவும், 900 செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தாங்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், அதனால் தான் இந்த நிலை இன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஆக்சிஜன் சப்ளை நிறுவனங்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர் சுதாகர் தி இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஆக்சிஜன் சப்ளை நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும், இதுபற்றி பல முறை நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இப்பிரச்சினைகளால் நோயாளிகள் இறந்தால் மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் கொரோனா நோயாளிகளே இல்லை என்று சொன்ன நிர்வாகம்
இறந்தவர்களில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்றும், மற்றவர்கள் வயது முதிர்வு, சர்க்கரை, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதையும் இறந்தவர்களின் உறவினர்கள் மறுத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை தங்களிடம் கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகத்தினரே கொண்டு சென்று மயானத்தில் எரித்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு உடனடியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல்பாட்டில் இறங்கிட வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையினைப் போக்கிடவும், விநியோக வசதிகளையும் ஏற்படுத்திட அவசர நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இவற்றின் மூலமே தமிழ்நாட்டின் நிலை டெல்லியைப் போல மாறுவதிலிருந்து தடுக்க முடியும்.