பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஹெச்.ராஜாவும் பாஜகவினரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைப்பது ஜக்கி வாசுதேவுக்காக மட்டுமல்ல!

பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் குறித்து பேசியிருந்த சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பழனிவேல் ராஜன், ‘வெறிபிடித்த நாய் குலைப்பதற்கெல்லாம் பதில் சொல்வது தேவையற்றது’ என கூறியிருக்கிறார். ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் கோயில்களிலிருந்து அரசை, இந்து சமய அறநிலையைத் துறையை வெளியேறச் சொல்லும் ’கோயில் அடிமை நிறுத்து’ பிரச்சாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் வழங்கியிருந்த ஊடக நேர்காணல் வைரலானது. தொடர்ந்து ஜக்கி வாசுதேவின் மோசடிகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தி வந்த நிலையில், ’கோயில் அடிமை நிறுத்து’ பிரச்சாரம் பெரும் பின்னடைவச் சந்தித்தது; தற்போது அப்பிரச்சாரம் முற்றிலுமாக கைவிடப்படும் நிலையை அடைந்திருக்கிறது. இந்நிலைக்கு பழனிவேல் தியாகராஜனும் மிக முக்கியமான காரனமென்றால் மிகையாகாது.

இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில்களின் வரவு, செலவு மற்றும் சொத்து விபரங்களை இணையத்தின் வழியே பொதுவெளியில் பதிவேற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பிறப்பித்த உத்தரவை ஜக்கி வாசுதேவ் வரவேற்றதையடுத்து ’கோயில் அடிமை நிறுத்து’ முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஜக்கியே கோவில் பிரச்சாரத்தை நிறுத்திய பிறகு தானாக முன்வந்து கொந்தளித்த எச்.ராஜா

திடிரென்று ஊடகவியலாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா ‘இந்து சாது சந்நியாசியை’ அதாவது ஜக்கி வாசுதேவை பழனிவேல் தியாகராஜன் அவதூறாகப் பேசுவதா என கொந்தளித்து, தியாகராஜனின் பின்னணி ஆராயப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், ’பொட்டு வைத்தவனெல்லாம் இந்து ஆகிவிட முடியாது, பழனிவேல் தியாகராஜன் தமிழனே அல்ல’ என இந்து- தமிழரை அங்கீரிப்பதற்கான புதிய நிர்வாகியாக தன்னை அறிவித்துக் கொண்டார். இவையெல்லாம் ஜக்கி வாசுதேவே எதிர்பார்க்காதது.

கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான அரசியல் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதான சூழ்நிலைக்குப் பிறகு ஹெச்.ராஜா ஏன் பழனிவேல் தியாகராஜனை இந்துவல்ல என்றும் இந்து சாது சந்நியாசியை அவமதித்து விட்டதாகவும் இந்துக்களின் பேரில் வாள் சுழற்றுகிறார் என்ற கேள்வியெழும்!

பழனிவேல் தியாகராஜன் ஆங்கில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் இந்தியா முழுதுமிருந்து வந்து குவிந்த பின்னூட்டங்கள் எச்.ராஜாவின் கோபத்திற்கான காரணத்தை நமக்கு விளக்குகின்றன.

அந்த பின்னூட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

”முதல் முறையாக நிதியமைச்சர் ஒருவரிடமிருந்து நிதிப்பற்றாக்குறை, உபரி நிதி, பணப்புழக்கம் போன்ற வார்த்தைகளைக் கேட்கிறேன். இல்லையென்றால் ‘நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, நான் பெட்ரோல் போடுவதில்லை’ போன்றவைகளைதான் கேட்டிருக்கிறேன்”- பாட் சஜத்

”நிர்மலா சீத்தாராமனுக்கு இவர் பேசுவதெல்லாம் லத்தீன், கிரீக் மாதிரியானவை” – ஜமால் 1231000

“வாவ், முதல்முறையாக நிதியமைச்சர் ஒருவரின் முழு உரையாடலைக் கேட்கிறேன்… அவர் நிதி தொடர்பான வாசகங்களை மட்டும் பேசவில்லை, சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கியுள்ளார்… தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு கன்னடனாக தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு சிறந்தது கிடைத்திருப்பதாக நம்புகிறேன். அதே போல் உங்களது நிதியமைச்சர் பேசுவதும், நடப்பதும் பிற மாநிலங்கள் பின் தொடர்வதற்கான ஒரு செயல்முறையை (Frame work) உருவாக்கும் என நம்புகிறேன்” – சதீஸ் குமார்

“நான் உ.பியைச் சார்ந்தவன்… தென்னிந்திய மாநிலங்கள் அதிகம் கொடுக்கின்றன மற்றும் வட இந்திய மாநிலங்கள் (உ.பி, பிகார்) அதிகம் பெறுகின்றன.. இது நிதிக் குழுவின் தோல்வி” – சிவனேஷ் துபே

”எல்லா தென்னிந்திய மாநிலங்களும் இதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன…மத்திய (ஒன்றிய) அரசு செய்வதெல்லாம் உபி க்கும், பீகாருக்கும் பணத்திரட்டுவதைத் தானே தவிர வேறொன்றுமில்லை. ஐந்து திராவிட மாநிலங்களும் கூட்டாக இணைந்து ஜி.எஸ்.டி யை ஒழிக்க வேண்டிய நேரமிது” – சைத்தன்ய வரதா

”மாநிலங்களின் சுயாட்சி மிகவும் முக்கியமானது. அனைத்து அதிகாரங்கள் மற்றும் நிதியை மத்திய (ஒன்றிய) அரசு இயக்குவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலப் பிரதிநிதிகளை அவமதிப்பதாகும்” – ஷிவனேஷ்E18CS052

”நிதிச் சுதந்திரத்தின் மூலமே இதுபோன்ற தொல்லைகளிலிருந்து தமிழ்நாடு வெளிவர முடியும். நான் ஸ்பெயினிலுள்ள நிதிச் சுதந்திரத்தின் மூலம் செல்வச் செழிப்பாகவுள்ள பாஸ்க் மாகாணத்தில் வசிக்கிறேன்.” – கார்த்திக் அரவிந்த்

“நான் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் வேலை நெறியினையும் நேசிக்கிறேன். நான் குருஷேத்திராவிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பயின்றபோது, உடன் பயின்றவர்களில் 25 சதவீதத்தினர் தென்னிந்தியர்கள், பெரும் தெலுங்கர்கள். ஆனால் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றுகையில் என் உடன் பணிபுரிபவர்களில் 25-30% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. இது எதைக் காட்டுகிறதென்றால் தமிழ்நாட்டுக் கல்வி இந்தியாவின் பிற பகுதிகளின் கல்வி நிலையிலிருந்து மேம்பட்டிருக்கிறது என்பதனையே. தமிழ்நாட்டுக்காரர்கள் கற்பதிலும், பணிபுரிவதிலும் மிகவும் அர்பணிப்புள்ளவர்கள். ஹிந்தியைக் கூட இரண்டு, மூன்று மாதங்களில் கற்றுவிடுகின்றனர். அவர்களுக்குத் தலை வணங்குகிறேன். சட்டீஸ்கரிலிருந்து எனது பிரியங்கள்” – மயன்க் வர்மா

மேற்கூறியவை “Palanivel Thiagarajan on how he will revive Tamil Nadu’s Economy” என்ற தலைப்பில் தி ஹிந்து ஊடகம், தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நடத்திய நேர்காணலின் யூ-டியூப் கானொளியில் பதிவிடப்பட்டுள்ள பின்னூட்டங்களாகும்.

காணொளிக்கான வலை இணைப்பு:

பெரும் வரவேற்பைப் பெற்ற பி.டி.ஆரின் பிற நேர்காணல்கள்

இந்த காணொளி மட்டுமல்ல நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு CNNBC-TV18 மற்றும் The Print ஆகிய இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலிலும் இத்தகைய பின்னூட்டங்களைப் பார்க்கலாம். இந்நேர்காணல்களில், பொருளாதார ரீதியில் தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சவால்கள், தமிழ்நாட்டு பொருளாதார நிலைமை, தமிழ்நாடு நிதி தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டிருக்கும் வஞ்சகமான நிலைப்பாடு ஆகியவை குறித்து பொருளாதார துறைசார் அறிவுடன் பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது தென்னிந்திய, வட இந்திய ஆங்கில ஊடக பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒன்றிய அரசின் நிதி மேலாண்மை குறித்து எழுப்பும் கேள்வி

ஒன்றிய நிதி அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மோடி அரசின் பொருளாதார நடவடிக்கை குழாமுக்கு பெரும் தொந்தரவாக அமைந்திருக்கிறது. பழனிவேல் தியாகராஜனின் நேர்காணல் ஒன்றிய-மாநில நிதி உறவுத் தொடர்பில் விவாதங்களை எழுப்பியுள்ளது; இதனை இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. மேலும் தமிழ்நாட்டிலிருந்து பொருளாதார துறைசார்ந்த அறிவுடைய சூத்திரர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் அடையாளம் உயர்சாதி- பார்ப்பனிய முகாமால் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

இதனை, ”மாண்புமிகு முதல்வர் அவர்கள் இப்படிப்பட்ட அதிமேதாவிகளிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இவர்களின் உளறல்கள் அரசுக்கு வீணான தர்ம சங்கடங்களை ஏற்படுத்தும்” என மத்தியமர்கள் கூறுவதிலிருந்தே அறியலாம். இதேவகையான பின்னூட்டங்கள் பழனிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவை பற்றி பேசாமல் பொருளாதார விடயங்களைப் பேசிய காணொளியிலும் பதிவிடப்பட்டுள்ளது; பின்னூட்டமிட்டவர்கள் குறிப்பிட்ட சாதிப் பெயரை பின்னொட்டாக கொண்டிருப்பவர்கள். பின்னூட்ட வகையின் உள்கருத்தை அவர்களின் ‘லோக்கல்- அரசியல் முகமாக’ இருக்கும் ஹெச்.ராஜவைக் கொண்டு அச்சுறுத்தல் மொழியில் பேச வைத்திருக்கிறார்கள்.

ஜக்கி வாசுதேவ் – அறநிலையத்துறை தொடர்பில் பேசிய காணொளி மூலம் தமிழ் இணையப் பயன்பாட்டாளர்களிடம் பரவலான கவனத்திற்குள்ளான பழனிவேல் தியாகராஜன், அடிப்படையில் பொருளாதாரத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருந்தவர். லேமேன் பிரதரஸ், ஸ்டாண்டர்ட் சார்டட் போன்ற நிதி-வங்கி நிறுவனங்களில் பணியாற்றியதன் காரணமாக பொருளாதார துறை சார்ந்த அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக கடந்த ஆட்சியின் போதே திமுக சார்பாக தமிழ்நாடு அரசின் நிதி விவகாரம் தொடர்பாக செயல்பட்டு வந்தார்; தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திமுக சார்பில் விவாதங்களை முன்வைத்திருக்கிறார். 15-வது நிதிக் குழுவிடம் திமுக சார்பாக அறிக்கை சமர்பித்திருக்கிறார். தமிழ்நாடு பொதுக் கணக்கு குழுவில் உறுப்பினராக இருந்து தமிழ்நாடு அரசின் நிதி செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வந்தார்.

மாநில உரிமையைக் கோரும் வகையில் ஜி.எஸ்.டி மீதான விமர்சனம்

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டு நிதி நிலைமை குறித்தும், ஜி.எஸ்.டி வரிமுறை மூலம் தமிழ்நாடு சந்தித்திருக்கும் இழப்புகள் குறித்தும் விளக்கியிருந்தார். மிகக் குறிப்பாக, வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுக்கான வரியை (GST Compensation Cess) ஒன்றிய அரசு பொது நிதியில் சேர்த்ததன் மூலம் ’ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதியை திருடி விட்டதாக’ கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த சந்திப்பினுடைய காணொளிக்கான வலை இணைப்பு:

இந்நிலையில் தான் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார் பழனிவேல் தியாகராஜன். மேற்குறிப்பிட்ட தி ஹிந்து ஊடக நேர்காணலில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் நிதிப் பங்கீட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பழனிவேல் தியாகராஜன், ”கடந்த 25 வருடங்களாக ஒன்றிய அரசு தொடர்ந்து எங்களிடம்மேலும் மேலும் அதிக நிதியைப் பெற்றுக் கொண்டு, மிக மிகக் குறைவாக திருப்பிக் கொடுக்கிறது. அதேபோல் இந்த 25 வருடங்களாக உபி, பீகார் போன்ற வட மாநிலங்களிடம் மேலும் மேலும் குறைவாகப் பெற்றுக் கொண்டு மிக மிக அதிகமாக அவைகளுக்கு திருப்பிக் கொடுக்கிறது. வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டிடமிருந்து பெறக்கூடிய நிதியை பின் தங்கிய மாநிலங்களான உபி, பீகாருக்கு கொடுத்து அவைகளை முன்னேற்றுவதற்கு கொடுப்பதாக சொல்கிறார்கள்; வளர்ந்த மற்றும் பின் தங்கிய மாநிலங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதாக சொல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் எங்களிடமிருந்து அதிகமாக பெற்றுக் கொண்டு, குறைவாக திருப்பிக் கொடுக்கும் பொழுதும் நாங்கள் மேன்மேலும் வளர்கிறோம். உ.பி, பீகார் போன்ற வட மாநிலங்களிடம் குறைவாக பெற்றுக் கொண்டு, அவைகளுக்கு அதிகமாக திருப்பிக் கொடுக்கும் பொழுதும் அவர்கள் மேலும் மேலும் பின் தங்குகிறார்கள். அடிப்படையில் இந்த பங்கீட்டு முறையே தவறானது.” என கூறியுள்ளார்.

CNBC-TV18 ஊடக நேர்காணலில், ”எனது தனிப்பட்ட கருத்தின்படி, அடிப்படையில் ஜி.எஸ்.டி யின் உள்ளார்ந்த அடிப்படை கட்டமைப்பே தவறானது. அது நீண்ட நாள் நீடிக்காது. அதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது; இதை நான் மட்டும் சொல்லவில்லை பலர் சொல்லியிருக்கிறார்கள். (ஜி.எஸ்.டி நிலவுவது குறித்து) மீள் சிந்தனைக்கு உட்படுத்த வேண்டுமென நினைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மாநில-ஒன்றிய அரசுகளுக்கிடையேயான நிதி உறவைக் கேள்வியெழுப்பும் பழனிவேல் தியாகராஜனின் நிதியமைச்சர் நியமனம், இப்பொருந்தொற்றுக் காலத்தில் பெரும் விவாதமாகியுள்ள ‘மாநில சுயாட்சி’ தொடர்பில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கான நிதிச் சுதந்திரம் பரவலான கவனத்தைப் பெறுகின்ற நிலையில் பழனிவேல் தியாகராஜனின் துறைசார் அறிவும், அவர் பங்குபெற்றுள்ள கட்சியினுடைய ‘மாநில சுயாட்சிக்கான’ வரலாற்று பங்களிப்பின் பின்புலமும் ஒன்றிய அரசிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதன் காரணமாகத்தான் தொடக்கத்திலேயே பழனிவேல் தியாகராஜன் குறிவைக்கப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *