பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
அப்பாத்துரையார் நினைத்திருந்தால் பல்கலைக்கழக துணைவேந்தராக தன்னை உயர்த்தி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி சிந்திக்காமல் தமிழுக்கு தொண்டாற்றிய நாம், எந்தெந்த விதத்தில் தமிழ்நாட்டுக்கு தொண்டாற்றலாம் என்றெண்ணி அந்த நேரத்தில் அருந்தொண்டாற்றியவர் என்று அறிஞர் அண்ணா பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் குறித்து பேசியிருப்பார்.
பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் காசிநாதப்பிள்ளை-முத்துலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 24-06-1907 அன்று பிறந்தார். அப்பாத்துரையாரின் இயற்பெயர் “நல்லசிவம்” ஆகும்.
இளமைக் காலம்
அப்பாதுரையார் ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான ஆரல்வாய்மொழியில் படித்தார். மேல்நிலைப் பள்ளிக் கல்வியை நாகர்கோவிலிலும், பட்டப்படிப்பை திருவனந்தபுரத்திலும் படித்தார். முதலில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் அதன்பின் இந்தி மொழியில் விசாரத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார்.
சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார். திருநெல்வேலியிலுள்ள ‘மதுரைதிரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். காரைக்குடி ‘அமராவதிப் புதூர்’ குருகுலப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். அங்கு இவரின் மாணவராக இருந்தவர்தான் கவிஞர் கண்ணதாசன்.
இந்தியாவின் மொழிச் சிக்கலை எழுதியதால் வேலை இழந்தார்
அதன்பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணிபுரிந்தார். நடுவண் அரசின் செய்தித் தொடர்பு துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார். அப்பொழுது ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் வேலை இழந்தார்.
சென்னை பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய அதன் ஆசிரியராக பணி செய்தார். மேலும் தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்.
இதழியல் பணி
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திராவிடன்’, ‘ஜஸ்டிஸ்’, ‘இந்தியா’, ‘பாரததேவி’, ‘சினிமா உலகம்’, ‘லிபரேட்டர்’, ‘விடுதலை’, ‘லோகோ பகாரி’, ‘தாருஸ் இஸ்லாம்’, ‘குமரன்’, ‘தென்றல்’ முதலிய இதழ்களில் இவரது பணி தொடர்ந்தது.
இந்தி ஆசிரியராக இருந்தும் இந்தி எதிர்ப்புப் போரில் பங்குபெற்றவர்
அப்பாத்துரையார் இந்தி மொழி ஆசிரியராகப் பணி புரிந்தவர். ஆனால் தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக திணிக்கப்பட்ட பொழுது 1938-39 ஆம் ஆண்டுகளில் நடந்த முதலாம் மொழிப்போரில் போரில் பங்கு கொண்டார். தந்தை பெரியார் தலைமையில் 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்பாத்துரையாரும் அவரது மனைவி அலமேலு அம்மையாரும் பெரும்பங்கு கொண்டனர்.
நூல்கள்
‘குமரிக்கண்டம்’ அல்லது ‘கடல்கொண்ட தென்னாடு’, ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’, ‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை நகர வரலாறு’, ‘ஜ.நா.வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’ முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
தென்னாட்டு வரலாறு குறித்த விளக்கம்
திராவிட நாகரிகம், திராவிடப் பண்பு, திராவிடப் பாரம்பரியம், திராவிட மொழி என்பவற்றுக்கெல்லாம் மிகப் பொருத்தமான விளக்கங்களைத் தம் வரலாற்று நூற்களில் அளித்துள்ளார். அவரது நூல்களில் தென்னாடு என்னும் நூல் விந்திய மலைக்கு கீழான திராவிட நாட்டின் திராவிட இனத்தின் வரலாறுகளையும் பெருமையையும் உலகத்தின் ஒரு தொல் நாகரீகமாக திராவிட நாகரிகம் இருப்பதற்கான காரணங்களையும் சான்றுகளோடு விளக்குகிறது.
“உலகின் பழம்பெரு நாடுகளில் தென்னாடு ஒன்று. அதுவே மனித இனத்தின் பிறப்பிடம் என்று மண்ணூலார் சாற்றுகின்றனர். வரலாறு தரும் சான்றுகள் இந்நாட்டுக்குத் தனிப்பெருஞ் சிறப்புகளை வழங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்நாடே மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும், வளர்ப்புப் பண்ணையாகவும் இருந்திருக்கிறது.
இன்றைய நாகரிக நாடுகளின் வரலாறுகளெல்லாம் சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. ஆனால் இந்நாடுகளின் வரலாறு தோன்றுவதற்கு முன்பே, கிரேக்க உரோம நாகரிகங்கள் தலைசிறந்து விளங்கின. இவற்றின் காலம் கி.மு.1000-க்கும், கி.பி. 500- க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் ஆகும்.
தென்னாடு நாகரிகத்திற்கும், கிரேக்க உரோம நாகரிகங்களுக்கும் பல வகைத் தொடர்புகள் இருந்தன. கிரேக்க உரோம நாகரிகங்களைவிடத் தென்னாடே பழமை வாய்ந்தது என்பதற்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், கிரேக்க உரோம நாகரிகங்கள் வரலாற்றின் பழங்கதைகளான பின்னும் தென்னாடு இன்றும் நின்று நிலவுகின்றது.
தென்னாடு இயற்கை எல்லைகளையுடைய மாநிலம். அது தெற்கு நோக்கிய முனையுடைய ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது. வடக்கே விந்தியமலை அதன் நில எல்லையாகவும், நில அரணாகவும் இருக்கிறது. அதனை அடுத்துள்ள மேட்டு நிலமும் காடுகளும், அதற்கு இப்பாலுள்ள சாத்பூரா மலையும், நருமதை, தபதி ஆறுகளும் விந்தியமலை அரணுக்கு அரண் செய்பவை ஆகின்றன. முக்கோணத்தின் மேற்கிலும் கிழக்கிலும் அரபிக்கடல், வங்காளவிரிகுடா ஆகியவையும், தன்முனையாகிய குமரியின் தெற்கே இந்துமா கடல் என்று வழங்கும் குமரிகடலும் நீரரண்களாய் உதவுகின்றன.
திராவிட மொழி இலக்கியங்கள் யாவுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பெருமை உடையவை. தமிழில் இவ்வெல்லை கடந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பேரிலக்கியம் உண்டு. உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான ஆண்டு தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியுடைய மொழிகள் திராவிட மொழிகளும் சீன மொழியும் மட்டுமே என்பது குறிப்படத்தக்கது.
தென்னாட்டுக்குத் ‘தமிழகம்’ என்ற பெயரும் ‘திராவிடம்’ என்னும் பெயரும் பண்டைக் காலத்திலிருந்தே வழங்கியிருந்தன என்று அறிகிறோம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே ‘வெள்ளைத் தீவு’ (மங்களூர்) முதல் மரக்காணம் (சதுரங்கப்பட்டினம்) வரையுள்ள கடற்கரைப் பகுதியைக் கிரேக்கர் தமிரிகா அல்லது தமிழகம் என்று அழைத்தனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட சமஸ்கிருத புராணங்கள் இப்பகுதியைத் திராவிடம் என்று கூறின. இதனைத் தமிழகம் என்பதன் சிதைவு என்று சிலரும், ‘திருஇடம்’ என்பதன் ‘மரூஉ’ என்று சிலரும் எண்ணுகின்றனர். ஸ்பெயின் நாட்டிலும் பண்டைய பிரான்சு பிரிட்டன் நாடுகளிலும் இருந்த ’துருயித இனத்தவருடன்’ தென்னாட்டவர் கொண்டிருந்த தொடர்பை இச்சொல் காட்டுகிறது எனக்கொள்வார் ‘திருத்தந்தை ஹீராஸ்’ என்ற அறிஞர்.
திராவிட மொழிகளின் பழம்பெருமைக்கும், கலப்பிலாத தூய மொழி வளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பாக விளங்குவது தமிழ்மொழியே என்று அதில் குறிப்பிட்டு இருப்பார்”
தென்னாட்டு போர்க்களங்கள் குறித்து அண்ணா
அவர் எழுதிய தென்னாட்டுப் போர்க்களங்கள் என்னும் நூல் போரைக் குறித்தது மட்டுமல்ல. அது தென்னாட்டின் வரலாற்று ஆட்சி, பின் நடந்த போர்கள் போர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று பலவற்றை மையப்படுத்திய ஒரு மிக முக்கியமான நூலாகும். அதனால் தான் அந்த நூல் குறித்து அண்ணா மிக விரிவாகப் பேசியிருப்பார்.
அப்பாத்துரையார் அவர்களின் நூல்களை ஏடுகளை எல்லோரும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாதுரையார் எழுதிய நூல்களில் தென்னாட்டுப் போர்க்களங்கள் என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஒரு ஏட்டை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளை தேடிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி எண்ணி வியந்தேன். அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் பகை மூட்ட அல்ல – தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்து இருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால் அவை ஒரு மண்டபமே நிறையும் அளவிற்கு இருக்கும் என்று அறிஞர் அண்ணா புகழ்ந்து பேசி இருப்பார்.
அப்பாதுரையார் அவர்களின் மனைவி அலமேலு அம்மாள் அவர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மீதும் சமூகநீதிப் போராட்டத்தின் மீதும் பெரும் பற்று கொண்டு போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
’பன்மொழிப் புலவர்’ அப்பாத்துரையார் 26.05.1989 அன்று மறைந்தார். இன்று அவரது நினைவு நாளாகும்.